நன்றி உணர்வே வாழ்க்கையை உயர்த்தும்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு
I: 1 அரசர்:  5: 14-17
II: திபா 98: 1. 2-3. 3-4
III: 2 திமோ:  2: 8-13
IV: லூக்:   17: 11-19

 "நன்றி " என்பது வெறும் மூன்று எழுத்து வார்த்தைதான். ஆனால் அதனுள்ளே பெரிய அகராதியே அடங்கி இருக்கிறது எனலாம். இந்த நன்றி என்பது பலவித மனநிலையை நமக்கு எடுத்துரைக்கிறது. நன்றி அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம். பிறர் செய்த உதவியை நாம் நினைவு படுத்தும் காரணியாக இருக்கலாம். ஒருவரிடம் நாம் அனுபவித்த நன்மைத் தனத்தை மீண்டும் மீண்டும் ஆழப்படுத்தும் கருவியாக இருக்கலாம். நமது நம்பிக்கையை ஆழப்படுத்தும் நங்கூரமாக இருக்கலாம். இந்த நன்றி உணர்வு ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் கூட்டு வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான ஒன்று.

திருவள்ளுவர் நன்றி உணர்வை நாம் வளர்க்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் விதமாக கூறியுள்ள
குறளடிகள் நம்மை நன்றி உணர்வில் ஆழப்படுத்துகிறது. 
நன்றி மறப்பது நன்றன்று, உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு போன்ற அவரின் வார்த்தைகள் நன்றி மறந்தவர்களுக்கு ஈடேற்றமே இலை என்ற கருத்தை கூறுகிறது.

ஏன் நாம் நன்றி உணர்வைப் பற்றி பேசுகிறோம்? ஆம் இன்றைய வாசகங்கள் நம்மை நன்றியுள்ளவர்களாக வாழ அழைக்கிறது. யாருக்கெல்லாம் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என சிந்தித்தால் முதலில் நம்மைப் படைத்து காத்து வழிநடத்தி எல்லா அருளையும் தரும் கடவுளுக்கும் பின் நாம் சந்திக்கின்ற எல்லா மக்களுக்கும் இந்த இயற்கைக்கும் என்ற பதில் கிடைக்கிறது. ஏனெனில் எல்லாரிடமுமே நாம் நன்மைகளை அதிகமதிகமாய் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் நாம் காண்கின்ற நாமானும் சமாரியனும் நன்றி உணர்விக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.தாங்கள் நோயிலிருந்து விடுபட்டு மறுகணமே நன்றி பெருக்கோடு விரைந்து வந்து காணிக்கை செலுத்துவதையும், கடவுளை ஏற்றுக்கொள்வதைத்தும் நாம் காண்கிறோம். இவர்களுடைய இந்த மனநிலை நம்மிலே உள்ளதா என நாம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம் கடவுள் வழியாகப் பெரும் நன்மைகள் ஏராளம். அதற்கெல்லாம் நாம் நன்றியுள்ளவர்களாய்த் திகழ்ந்திருந்தால் நம்முடைய செபமும் நம்பிக்கை வாழ்வும் ஆழமடைந்திருக்கும்.ஆனால் நம் வாழ்வில் நடப்பது என்ன?

தினமும் பிறர் மூலம் பல நன்மைகளைப் பெறுகிறோம். நாம் நன்றியுள்ளவர்களாக இருந்திருந்தால் இன்று நாம் உறவில் வளர்ந்திருப்போம். ஆனால் நாம் காண்பதோ பகை, பொறாமை,மனக்கசப்பு. அவ்வாறெனில் நம் நன்றி உணர்வு எங்கே?

அன்றாடம் இயற்கையில் நாம் பெறும் கொடைகள் ஏராளம். நாம் நன்றியோடு இயற்கையைப் பேணியிருந்தால் இன்று நாம் நோயின்றி தூய்மையான உலகில் வாழ்ந்திருப்போம். ஆனால் இயற்கை அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதே. நாம் நன்றியற்றவர்களாய் வாழ்கிறோம் என்பதற்கு இதை விட சான்று தேவையா?

அன்புக்குரியவர்களே கடவுளே நாம் நன்றியோடு வாழ வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார். நன்றியுள்ளவர்களாய் நாம் வளர வளர உயர்வது நம் வாழ்வே! இதை உணர்ந்து நன்றியுள்ளவர்களாய் வாழ்வோம்.

 இறைவேண்டல்
அன்பான இறைவா! நாங்கள் நன்றியுணர்வுள்ளவர்களாக வாழ அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 3 =