நல்ல பங்கை தேர்ந்து கொள்ளத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம், வாரம் 27 செவ்வாய்
மு.வா: கலா:   1: 13-24
ப.பா: திபா:  139: 1-3. 13-14. 15
ந.வா: லூக்:  10: 38-42

நல்ல பங்கை தேர்ந்து கொள்ளத் தயாரா? 

இன்றைய நற்செய்தி வாசகமானது மரியா மார்த்தா எனும் இரு சகோதரிகளுள் மரியா உலகக் கவலைகளை விட்டு விட்டு இயேசுவின் பாதம் அமர்ந்து நல்ல பங்கை தேர்ந்தெடுத்தார் என இயேசுவால் பாராட்டப்பட்ட நிகழ்வைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்த பகுதியை இன்றைய நாளில் நாம் விழா கொண்டாடும் புனிதரான அசிசி நகர பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடுவது சாலச் சிறந்தது. ஆம் நல்ல பங்கைத் தேர்ந்த பல புனிதர்களில் இவர் மிக முக்கியமானவர். 
அவர் தேர்ந்தெடுத்த நல்ல பங்கு அவர் ஏழ்மையும் ஏழைகளும்.

இளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்திலும் மனதார ஈடுபடவுமில்லை. பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை இவர் வாழ்வில் மேலோங்கி இருந்தது. மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார்.அப்போதுதான் ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில்  எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. 
இவ்வாறாக உலக வாழ்வை வெறுத்து இயேசு விரும்பிய நல்ல பங்கை தேர்ந்தெடுத்து புனித பயணத்தைத் தொடங்கினார். இயேசுவை அனைத்திலும் உணர்ந்தார். படைப்பினில் இறைவனைக் கண்டு அவரோடு இணைந்தார்.

இன்று நாம் எதைத் தேர்வு செய்யப்போகிறோம்? மரியாவைப் போல, புனித பிரான்சிஸ் அசிசியைப்போல
நல்ல பங்கையா? அல்லது உலக காரியங்களில்  மூழ்கும் வாழ்வையா? சிந்திப்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!  நல்ல பங்கை தேர்ந்தெடுத்து உம்மால் பாராட்டப்படக் கூடிய வாழ்வு வாழ எமக்கு உமது அருளைத் தாரும். புனித அசிசி நகர பிரான்சிஸ்போல வாழ்க்கை அனுபவங்களில் உமது அழைப்பை உணர்ந்து வாழந்து புனிதமடைய வரமருளும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

18 + 1 =