Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பேறுபெற்றவர்களா நாம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 23 ஆம் புதன்
I: 1கொரி: 7: 25-31
II: திபா: 45: 10-11. 13-14. 15-16
III:லூக்: 6: 20-26
இரு வழிப்போக்கர்கள் சாலை வழியே வரும்போது செல்வந்தர் ஒருவர் வீட்டைத்தாண்டி சென்றார்கள். அவர் செல்வந்தர் மட்டும் அல்ல சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து உடையவர். அரசியல்வாதியும் கூட. அந்த வழிப்போக்கர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி "கொடுத்து வைத்தவன். வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்கிறான்" என்று கூற மற்றவரும் ஆம் என்று தலையை ஆட்டி "நாமோ எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் கையிலும் பையிலும் எதுவும் மிச்சமில்லாமல் போய்விடுகிறது. அடுத்த ஜென்மத்திலாவது இவர்களைப்போல பிறக்க வேண்டும்" என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அவ்வீட்டிலிருந்து வெளியே அழுது கொண்டே வந்த ஒருவர் "இவன் நல்லாவே இருக்க மாட்டான்" என்று சாபமிட்டுக்கொண்டே சென்றார். இதைக்கண்ட அந்த இரு வழிப்போக்கர்களும் இப்போதுதானே நாம் கொடுத்து வைத்தவன் என்று பாராட்டினோம். அதற்குள் மற்றொருவர் சாபமிடுகிறானே என்று குழம்பிக்கொண்டே தங்கள் வழி தொடர்ந்தனர்.
உண்மையான பேறு எது? வசதியும் பதவியும் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நம் வாழ்வில் இருந்தால் போதும் என்ற மனநிலை இன்று நம்மிடையே பரவலாக இருப்பதை நாம் காண்கிறோம். செல்வமும் அதனால் வரும் மகிழ்ச்சியுமே கடவுளின் ஆசிர்வாதம். வறுமையும் துன்பமும் கடவுளின் சாபம் என்ற எண்ணம் காலம் காலமாய் நமக்குள் குடிகொண்டிருக்கத்தான் செய்கிறது.
ஆண்டவர் இயேசுகிறிஸ்து அதற்கு எதிர்மறையான கூற்றை இன்று நற்செய்தியின் மூலம் கூறுகிறார். ஏழைகளே, பட்டினியாய் இருப்போரே, துன்புறுவோரே நீங்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் எனக்கூறும் இயேசு, செல்வர்களே, உண்டு கொழுத்திருப்போரே, இன்புறுவோரே உங்களுக்கு ஐயோ கேடு என்ற கடுமையான மொழிகளை உதிர்க்கிறார்.இதன் உண்மையான பொருள் என்ன? இயேசு உண்ணக்கூடாது என்றோ, செல்வம் சேர்க்கக் கூடாது என்றோ,மகிழ்ச்சியாய் இருக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை.
நம்மைப் படைத்த கடவுளுக்கு அவருடைய பிள்ளைகள் மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் அந்த மகிழ்விலும் இன்பத்திலும் அதிக ஈடுபாடு காட்டி அதற்கு காரணமான அந்த கடவுளையும் ,இவை எதுவுமின்றி அல்லலுறும் எழை எளியவர்களையும் நாம் மறந்தோமெனில் அதைவிடக் கேடானது உலகில் ஏதுமில்லை என்பதே இயேசுவின் போதனை. இயேசு கூறிய "செல்வந்தனும் ஏழை இலாசரும்" என்ற உவமை இயேசுவின் இப்போதனையை நமக்கு இன்னும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
மேலும் இயேசு பேறுபேற்றோர் எனச்சுட்டிக்காட்டும் ஏழைகளும் துன்புறுவோரும் யார் ? அவர்கள் இருக்கின்றதில் நிறைவு கொள்பவர்கள். இருக்கும் போதும் இல்லாதபோதும் கடவுளை சார்ந்து இருப்பவர்கள். துன்பத்தில் இருக்கின்ற அவர்கள் பிறரின் துன்பத்தில் தோள் கொடுப்பார்கள். ஆம். இத்தகைய பேறுபெற்றோர் போல வாழவே இயேசு நம்மை இன்று அழைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுல் இச்செய்தியை இன்னும் ஆழமாக, "உலகச் செல்வத்தை பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவராக இருக்கட்டும்" என்று கூறி இருக்கின்ற நிலையில் கடவுளுக்கு அன்பு செய்து வாழ நம்மை அழைக்கிறார்.
"பற்றற்றான் பற்றினைப் பற்றுக" என்ற திருக்குறள் கூறுவதைப் போல இவ்வுலகில் நமக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களிலும் இன்பங்களிலும் அதிக ஈடுபாடு கொள்ளாமல் எளிய மனத்தோராய் இறைவனைப் பற்றி வாழ்வதே நமக்கு? கிடைக்கும் உண்மையான பேறு என்பதை உணர்ந்து வாழும் வரத்தை இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இறைவேண்டல்
பேறுபெற்றவர்களாக வாழ எங்களை அழைத்த இறைவா! உலக இன்பங்கள் செல்வச் செழிப்புகள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவற்றில் அதிக ஈடுபாடு கொள்ளாமல், நாங்கள் இருக்கின்ற நிலையில், இருப்பதில் நிறைவு கொண்டவர்களாய், இன்பத்திலும் துன்பத்திலும், வறுமையிலும் செழுமையிலும் உம்மைச் சார்ந்து வாழும் வரம் தாரும்.? அதுவே எங்களை பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் என்ற உள்ளார்ந்த உணர்வைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment