விழித்திருந்து செபிப்போம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 23 ஆம் செவ்வாய்     
I: 1கொரி: 6: 1-11
II: திபா: 149: 1-2. 3-4. 5-6ய,9b
III:லூக்: 6: 12-19

செப வாழ்வு கிறிஸ்தவ வாழ்க்கையின் உயிர் நாடியாக இருக்கின்றது. செபிக்கின்றவர்கள் இறைவனின் ஆற்றலையும் வல்லமையையும் அருளையும் நிறைவாகப் பெறமுடியும்.  நம் ஆண்டவர் இயேசு  இறைமகனாக இருந்தபோதிலும் இரவு முழுவதும் விழித்திருந்து செபித்தார் என்று பார்க்கிறோம். ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பாக தந்தையிடம் செபித்தார் என்று பார்க்கிறோம்.  

செபத்தின் வழியாகத்தான் இறைவனின் திருவுளம் வெளிப்படும்.  புனித அன்னை தெரசா மனிதநேயப் பணியை மிகச் சிறப்பாக செய்தார். சாதி மதம் மொழி கடந்து   அனைவரும் வியப்பாக அவரைப் பார்த்தனர்.  மக்கள் அவரை சிறந்த ஒரு மனிதநேயப் பணிக்கு முன் மாதிரியாக பார்த்தனர். அவர் இந்த அளவுக்கு பணி செய்யக் காரணம் ஒவ்வொரு நாளும் நற்கருணை ஆண்டவர் முன்பாக அவர் செய்த செபம்.  புனித ஜான் மரிய வியான்னி செபத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார் "கடவுள் உலகத்தை ஆளுகின்றார். ஆனால் செபிக்கின்ற மனிதரால் கடவுளையே ஆளமுடியும் " . நம்முடைய வாழ்க்கையில் இறைவனின் அருளைப் பெற்று சாட்சியமுள்ள வாழ்வு வாழ வேண்டுமென்றால்,  நாம் செபிக்கும் மக்களாக மாற வேண்டும். இயேசு தன் சீடர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இறைவனின் திருவுளத்தை அறிய விரும்புகிறார். எனவேதான் இரவு முழுவதும் செபித்தார். 

நாமும் தேர்ந்து தெளிந்து இறைவனின் அருளையும் ஆற்றலையும் வல்லமையையும் பெற வேண்டுமென்றால்  செபிக்க வேண்டும்.  நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் நாம் எந்த அளவுக்கு செபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,  அந்த அளவுக்கு இறைவனின் அருள் கொடைகளை நிறைவாகப் பெறமுடியும்.  கிணற்றில் நாம் நீர் இறைத்தால்  தான் நமக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கும். அதேபோல நாம் இறைவனின் அருளைப் பெற செபித்தால் தான் நமக்கு கிடைக்கும். செபிக்கும்போது  பல பிரச்சினைகளும் இடையூறுகளும் தடைகளும் நமக்கு  நேரிடலாம். ஆனால் அவற்றை கண்டு மனம் தளர்ந்து போகக் கூடாது. மாறாக,  இறைநம்பிக்கையோடு செபிக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக இறைவன் தருகின்ற அருள்கொடைகளை நாம் பெற முடியும்.  விழித்திருந்து செபிப்பது என்பது இரவு நேரத்தில் மட்டும் தூங்காமல் செபிப்பது  அல்ல, மாறாக எப்போதும் விழிப்போடிருந்து இறைவனை துதித்து உறவாடி இறைவேண்டல் செய்வது.  எல்லா நிலையிலும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து ஆராதிக்கும் பொழுது நம் வாழ்வு உயர்வு பெறும். நாம் செய்யும் அனைத்து முன்னெடுப்புகளும் ஆசீர்வாதமாய் மாறும்.  அதற்குத் தேவையான அருளை ஆற்றலை தெய்வீக வல்லமையை நாம் பெற்றுக்கொள்ள நம்மையே முழுவதுமாக ஒப்படைப்போம். 

 இறைவேண்டல்
அன்பான இறைவா!  உம் திருமகன் இயேசு செபிப்பதன் வழியாக உம்முடைய திருவுளத்தை அறிந்து சிறப்பாக திருத்தூதர்களைத் தெரிவு செய்தது போல, எங்களுடைய வாழ்விலும் செபித்து உம் அருள்கொடைகளை பெற்றிட  வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

1 + 1 =