மாமனிதர்களா நாம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 19 ஆம் வியாழன் 
மு.வா: எசே: 12: 1-12
ப.பா:  தி பா :78: 56-57. 58-59. 61-62
ந.வா:மத்: 18: 21 - 19: 1

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய செல்வங்களை எல்லாம் செலவழித்து மருத்துவம் பார்த்தும் கொஞ்சம் கூட அவர் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. உடலும் மனமும் சோர்ந்த நிலையில் இனிமேலும் நான் வாழவேண்டுமா என்ற நிலைக்கு ஆளானார் அந்த மனிதர். இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போது அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். தன் நண்பரை கண்டவுடன் கண்களில் கண்ணீர் வழிய தன்னுடைய நிலையையும் தன்னுடைய வேதனையையும் கொட்டித் தீர்த்தார் அந்த நோயாளி. இவ்வாறு பகிர்ந்து கொண்டிருக்கையில் தன்னுடைய வாலிப வயது நண்பர் தன்னை தொழில்ரீதியாக ஏமாற்றியதாகவும் அவர் செய்த துரோகத்தை இன்னும் தன்னால் மறக்கவும் மன்னிக்கவும் முடியவில்லை என்றும் கூறினார்.

தான் இறப்பதற்கு முன்பு அவரை கண்டு தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தன்னை காண வந்திருந்த நண்பரிடம் கூறினார். இதைக் கேட்ட அந்த நண்பர் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். அந்த ஒரு சந்திப்பு இந்த நோயாளியின் மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பெரிதும் மாற்றுவதாக அமைந்தது. ஆம் பகையாய் இருந்த இரு நண்பர்கள் பார்த்துக் கொண்டார்கள் பேசிக் கொண்டார்கள். மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தார்கள் ஒருவரையொருவர் மன்னித்து அவர்கள் சமாதானம் ஆனார்கள். இத்தனை ஆண்டுகள் நோயால் மிகவும் வருந்திய அவர் இப்பொழுது மெல்ல மெல்ல குணமடைய ஆரம்பித்தார். 

இன்றைய வழிபாடு நம் அனைவரையும் மன்னிக்கிற மக்களாக வாழ அழைக்கின்றது. என் பகைவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு எழுப்பிய கேள்விக்கு ஒரு அழகிய உவமையைக் கூறி இயேசு எழுபதுமுறை ஏழு முறை அதாவது வாழ்நாளெல்லாம் நாம் மன்னிக்கும் மக்களாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

திருவிவிலியத்தில் மன்னிப்பிற்கு சான்றாக பல நிகழ்ச்சிகளை நாம் காண்கின்றோம். தன் தந்தையை ஏமாற்றி தன்னுடைய உரிமைகளை எல்லாம் பறித்துக்கொண்ட தன்னுடைய தம்பி யாக்கோபு வை ஈசாய் மன்னிக்கின்றார். தன் மீது பொறாமை கொண்டு தன்னை எகிப்து நாட்டிற்கு அடிமையாய் பெற்ற தன் சகோதரர்களை யோசேப்பு மன்னித்து பஞ்சகாலத்தில் உதவுகிறார். ஏன் சிலுவையின் கொடூர மரண வேதனையிலும் தந்தையே இவர்களை மன்னியும் என்று மன்னிப்பின் உச்சகட்டமாக திகழ்கின்றார் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்துவை முழுமையாக பின்பற்றிய புனித ஸ்தேவான் தன்னை கல்லால் எறிந்து கொன்றவர்களை மன்னிக்குமாறு தந்தையாம் கடவுளிடம் வேண்டியதாக நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். 

நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்ற இயேசு கற்பித்த ஜெபத்தில் நாம் என்ன வேண்டுகிறோம் என்று ஆராய்ந்து பார்த்தால் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்று தான். நமது தவறுகளை இறைவன் மன்னிக்கிறார் என்பது நமக்கு முழுமையாக தெரியும். அதை நாம் நம்புகிறோம். ஆனால் அந்த மன்னிப்பை நாம் எப்போது பிறரோடு பகிர்ந்து கொள்கின்றோமோ அப்பொழுதுதான் அந்த மன்னிப்பு அதன் முழுமையை அடைகின்றது என்பதுதான் இன்று நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம். 

மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிப்பவன் மாமனிதன் என்ற சொல் வழக்கை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். மன்னிப்பு கேட்கும் மனிதரை விட மன்னிப்பு வழங்கும் மனிதர் அதிக பலம் உடையவர். மன்னிக்கிற மனித உறவை வளர்க்கிறார். உடலிலும் மனதிலும் வலு பெறுகிறார். நீண்டநாள் நலமாக வாழ்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் பிள்ளையாக ஏன் கடவுளாகவே கருதப்படுகிறார். 

மன்னித்து மாமனிதர்களாக வாழ இயேசு நம்மை அழைக்கின்றார். நாமும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மன்னித்து வாழ முயற்சி செய்வோம். எழுபது முறை ஏழு முறை அல்ல ஒருவர் செய்கின்ற தவறு நமக்கு நினைவிற்கு வரும்போதெல்லாம் மன்னிப்போம். அவர்களுக்காக ஜெபிப்போம். இயேசுவின் உண்மையான சீடர்களாய் மாறுவோம். இதுவே கிறிஸ்தவத்தின் மிக உயரிய மதிப்பீடு என்பதை வாழ்ந்து காட்டுவோம். 

 இறைவேண்டல்
மன்னித்து மாமனிதர்களாக வாழ எங்களை அழைத்த இறைவா உம்முடைய மன்னிப்பை அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நாங்கள் அதை பிறரோடு பகிர்ந்து அதை முழுமை பெறச் செய்ய எங்களுக்கு அருள்தாரும். மன்னிக்கிற தருணங்களை கணக்குப் பார்க்காமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மன்னித்து உம்முடைய அடிச்சுவட்டை உண்மையாக பின்பற்றக்கூடிய நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 15 =