வார்த்தையின் வழி தவறாது! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 19 ஆம் செவ்வாய்
I: எசே: 2: 8- 3: 4
II:  தி பா :119: 14,24. 72,103. 111,131
III: மத்: 18: 1-5, 10-14

இன்றைய வாசகங்கள் இறைவார்த்தை வழி நம்மை வாழ்வின் பாதைக்கு அழைத்துச் சென்று இறைவனிடம் சேர்க்கிறது என்ற கருத்தை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன.

முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவார்த்தை அடங்கிய சுருளேடை உண்ணுமாறு அழைக்கப்படுகிறார். அவரும் உண்கிறார். அது தேன் போல இனித்ததாகக் கூறுகிறார். இதன் பொருள் என்ன? இறைவார்த்தையை நாம் உள்வாங்கி வாழ்வாக்கும் போது அவ்வார்த்தை நாம் பாதை தவறிச் செல்லாமல் காத்து நிலைவாழ்வைத் தருகிறது.  நம் வாழ்வை இனிமையானதாக கடவுளுக்கு உகந்ததாக ஆக்குகிறது என்பதே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறுபிள்ளையைப் போன்றவர்களே விண்ணரசில் பெரியவர் என்கிறார். சிறுபிள்ளையைப் போல நம்மை மாறவைப்பது இறைவார்த்தை என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். 

*இறைவார்த்தை சிறுபிள்ளையைப் போன்ற நம்பிக்கையை வளர்க்கிறது

*இறைவார்த்தை குழந்தையைப் போல நம்மைத் தூய்மையாக்குகிறது

*இறைவார்த்தை சிறுபிள்ளையைப் போல நாம் பிறரை இழிவாக கருதவிடாது

* இறைவார்த்தை சிறுபிள்ளையைப் 
 போன்ற  தாழ்ச்சியைத் தருகிறது

*எல்லாவற்றிற்கும் மேலாக இறைவார்த்தை நம்மை வழி தவறிச் சென்றுவிடாமல் பாதுகாக்கிறது. அப்படியே தவறிச் செல்ல நேர்ந்தாலும் நம்மை ஆண்டவரிடம் மீண்டும் சேர்க்கிறது. ஆம்.  வார்த்தையின் வழி ஒருபோதும் தவறாது. இத்தகைய கடவுளின் வார்த்தையை இறைவாக்கினர் எசேக்கியேல் தின்றதைப் போல நாமும் அவற்றை உள்வாங்கி, பொருளுணர்ந்து வாழ்ந்து விண்ணரசில் பெரியோராக முயல்வோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!உமது வார்த்தைகளை எங்கள் வாழ்வாக்கி வழி தவறாமல் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 1 =