பொறுப்பாய் இருப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 19 ஆம் ஞாயிறு
I: சா ஞா 18: 6-9
II:  தி பா :33: 1,12. 18-19. 20,22
III :எபி 11: 1-2, 8-19
IV: லூக் 12: 32-48

 

பொறுப்புணர்வு என்பது மனிதன் கொண்டிருக்க வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்று. நம்முடைய மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவருக்கு குடும்பத்தை வழிநடத்தக் கூடிய பொறுப்பு இருக்கின்றது. குடும்பத் தலைவிக்கு ஒரு தாயாகவும் நல்ல ஒரு மனைவியாகவும் இருந்து குடும்பத்தை பாசத்தோடு வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கின்றது. பெற்றோர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை சிறப்பாக வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கிறது. பிள்ளைகளுக்கும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவும் பெற்றோருக்கும் பெரியவருக்கும் மதிப்பு கொடுக்கவும் பொறுப்பு இருக்கிறது. நாட்டை ஆளும் நாட்டு தலைவர்களுக்கு நாட்டு மக்களை சிறப்பாக நிறையுள்ள பாதையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பு இருக்கிறது. அதேபோல  குடிமக்களுக்கும் நாட்டின் சட்டங்களையும் ஒழுங்குகளை மதித்து சிறப்பாக பயணிக்க பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்களை உருவாக்கக்கூடிய பொறுப்பு இருக்கிறது. மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற பொறுப்பு இருக்கிறது. பணி செய்கின்ற இடங்களிலே முதலாளிக்கு தொழிலாளியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய பொறுப்பு இருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிக்கு உண்மையுள்ள பணியாளர்களாக பணியாற்ற பொறுப்பு இருக்கிறது. கடைசி காலகட்டத்தில் பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. தன்னோடு வாழக்கூடிய சக மனிதர்களை அன்பு செய்யக்கூடிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது. இவ்வாறாக மனித வாழ்விலே ஒவ்வொருவருமே பொறுப்புள்ள மனிதர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் எதையும் ஏனோதானோ என்று செய்யாமல் சிறப்பாக செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே நற்செய்தின் வழியாக இதைத்தான் சிந்திக்க அழைப்பு கொடுக்கிறார். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பறைசாற்ற விழிப்போடும் அறிவுகௌ கூர்மையோடும் இருக்க வேண்டும்‌ என்ற ஆழமான கருத்தை சுட்டிக்காட்டுகிறார். கடவுள் நம்முடைய தலைவராக இருந்து இந்த இறையாட்சியின் மதிப்பீடுகளை மண்ணில் விதைக்க நமக்கு பொறுப்பினைக் கொடுத்திருக்கிறார். அதை விழிப்போடு பொறுப்பாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் செய்கிற பொழுது நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். 

இயேசுவின் உண்மைச் சீடர்களாக இருந்து பொறுப்புணர்வோடு செயல்பட இவ்வுலகம் சார்ந்த அழியக்கூடிய செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும். இந்த உலகத்தில் நாம் என்னதான் செல்வத்தை சேர்த்து வைத்தாலும் அது மக்கும் தன்மை கொண்டது. நிலையற்ற தன்மை உள்ளது. எனவே ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை முழுமையாக ஏற்று அனுபவித்து, அது தருகின்ற இறையாட்சி மதிப்பீடுகளை பிறருக்கு வழங்குகிற பொழுது கடவுளுக்கு முன்பாக நாம் சிறந்த பொறுப்பாளர்களாக மாறுகிறோம்.

கடவுள் நமக்கு மிகுதியான அருளையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அருளையும் ஆசீர்வாதத்தையும் இறை அனுபவத்தையும் பயன்படுத்தி எல்லா மக்களும் மீட்புடைய நற்செய்தி அறிவிக்கும் பொழுது நாம் பேறு பெற்றவர்களாக மாறுகிறோம். ஏனெனில் மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் மிகுதியாக கேட்கப்படும். எனவே பொறுப்புணர்வோடும் விழிப்போடும் அறிவுக் கூர்மையோடும் இயேசுவின் நற்செய்தி விழுமியத்திற்கு சான்று பகிர நம்மையே முழுமையாக கையளிப்போம்.

 இறை வேண்டல் 
வல்லமையுள்ள இறைவா! பொறுப்புணர்வோடு எங்களிடம் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றி சிறந்த நற்செய்தியின் தூதுவர்களாக மாறிட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 2 =