நலமான வாழ்வுதனை கொடுப்பது நம்மில் எழும் நம்பிக்கையே! | மாணிக்கம் | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

I: சாஞா 18: 6-9

II: எபி 11: 1-2, 8-19

III: லூக் 12: 32-48

நிகழ்வு:

     ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்கு முன் இளம் வயது பட்டதாரி ஒருவர் தான் படித்த படிப்புக்கு வேலை கிடையாத பொழுது, கிடைத்த சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்து தன் வாழ்வை நடத்தி வந்தார். அவ்வாறு அவர் தன் பணியின் நிமித்தமாக கோவை மாநகரத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. பயணத்தைத் தொடர்கிறார். கடினப்பட்டு படித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரே ஒரு துணையாய் தன்னுடன் இருந்தது தான் படித்த படிப்பினுடைய சான்றிதழ்தான். அதையும் தவறவிட்டுவிடுகிறார். தொலைத்து விடுகிறார். வாழ்வே முடிந்ததென்று மனம் கலங்கி நிற்கிறார். சரியான வேலை இல்லை. அடுத்தவரிடத்திலே மதிப்பு இல்லை. அவமானம், வேதனை, நல்ல நிலைமைக்கு வரவில்லையென்ற கவலை இத்தனைக்கும் மத்தியில் இவ்வளவு பெரிய இழப்பு என்றால் யாரால் தாங்க முடியும். ஒடிந்து போகிறார் அந்த இளைஞன். இருந்தாலும் அவரிடத்தில் இருந்த நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவே இல்லை. சென்னைக்கு போகிறார். கல்விக்குழுமத்திடம் பதிவு செய்து, மாற்றுச்சான்றிதழலைப் பெறுகிறார். இருப்பினும் இன்னும் வேலை கிடைக்காத சூழல், மனவருத்தம், கவலைகள் தன்னை வாட்டினாலும் இறைவன் என்னைக் கண்டிப்பாக கரைசேர்ப்பார். அவர் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கை என்னை வாழ வைக்கும் என்று தொடர்ந்து போராடுகிறார். உழைக்கிறார். கடினமான வாழ்வியல் பின்னணியில் கண்ணியமிக்க தந்தையாக இருந்து தன் குடும்பத்தை வழிநடத்துகிறார். அன்று அவர் கொண்டிருந்த நம்பிக்கைதான் அவருக்கு நலமளித்து நலமான வாழ்வைப் பேண செய்தது. அத்தகைய நம்பிக்கையில்தான் இன்று வரை தன் வாழ்வை முழுவதுமாக அணுகுகிறார், நம்பியதால் நலம் காண்கிறேன் என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் அன்றொரு இளைஞனான தவித்தவர் பின்னாளில் தான் கொண்ட இறைநம்பிக்கையினாலும், தன்னம்பிக்கையினாலும் ஆசிரியப் பணியில் இணைந்து உதவி தலைமையாசிரியராக பணி ஓய்வு பெறுகிறார். அவரின் பெயர் திருச்சியைச் சேர்ந்த ஆசிரியரான திரு.அருளானந்தம்.

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே,

      இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்பிக்கையால் ஒருவர் நலமடைகிறார் என்கிற அருமையான செய்தியை வலியுறுத்தி நம் வாழ்வைச் சிந்தித்து பார்க்க அழைப்பு கொடுக்கிறது. நாம் வாழும் இச்சமூகம் பல்வேறு பின்புலங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதன் மையம் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையின் அடையாளமாய்; திகழ்கிறது என்றால் அது மிகையல்;ல. எந்த துறையை எடுத்தாலும், எந்த வாழ்வியல் நிகழ்வைக் கண்ணோக்கினாலும் அவையெல்லாம் அன்றாட பேசு பொருளாய் மாற்றப்படுவதற்கு காரணமே அதில் தென்படும் நம்பிக்கைதான். அதைத்தான் இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்றது.

முதல் வாசகத்தில்;

எவ்வாறு இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வில் கடவுள் கொடுத்த வாக்குறுதியின் பின்னணியில் தங்களிடையே காணப்படும் நம்பிக்கையை உறுதிப்படுகிறார்கள் என்பதை வாசிக்கின்றோம். நீங்கள் விடுதலையடைந்தது, பலி ஒப்புக்கொடுத்தது, ஒருமித்து உடன்பட்டது இவையனைத்து உங்களிடத்தில் விளங்கிய நம்பிக்கையால் உருவாகிய நலமான செயல்கள் என்பதை கடவுள் அம்மக்களுக்கு வெளிப்படுகிறார். அதையே வாக்குறுதியாக வழங்கி, இவற்றை தலைமுறைதோறும் பறைசாற்ற பணிப்பதை எடுத்துகிறது சாலமோனின் ஞானநூல்.

இரண்டாம் வாசகத்தில்,

நலமான வாழ்வுதனை கடவுள் எவ்வளவு தூரம் நம் வாழ்வில் பிரதிபலிக்கிறார் என்பதை முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்விலிருந்து கடவுள் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் எவ்வாறு நம்பிக்கையில் ஆழப்பட்டு தன் நலமான ஆசீரைப் பெற்றுக்கொண்டார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஒருவர் எந்தளவு கடவுள்மீது நம்பிக்கை வைக்கிறாரோ அந்தளவிற்கு அவரின் வாழ்வு நலன்களால் நிரப்பப்படும் என்பதற்கு ஆபிரகாம் சிறந்த உதாரணம்.

நற்செய்திக்கு வருகின்ற பொழுது,

     ஆபிரகாமிடத்தில் விளங்கிய நம்பிக்கை வாழ்வும், முதல் வாசகத்தில் தென்படுகின்ற இஸ்ரயேல் மக்களின் வாழ்வுநிலையும் நம்மில் எதிரொலிக்க எதார்த்தமான வழிகளை, வாழ்வியல் சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கிறது இன்றைய நற்செய்தி பகுதி. இயேசுவின் இந்த போதனை நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவருக்கும் நலமான வாழ்வைக் கொடுக்கின்றன என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் லூக்கா நற்செய்தியாளர்.

எவ்வாறு புரிந்து கொள்வது?

     இயேசு இன்று நம்முன் கொடுக்கின்ற உவமையின் பின்னணியில் சிந்திக்கின்ற போது  ஒரு பணியாள் தன் வாழ்வில் எந்தளவு நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டுமென்பதில் தொடங்கும் இயேசு வார்த்தையில், நம்புவதால் உன் வாழ்வு நலம் காணும், நலன்களையே அனுபவிப்பாய் என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார். அதற்கு மூன்று வகையான வழிமுறைகளையும் தருகிறார். யார் ஒருவர்; தன் வாழ்வில் முழுமையான ஆசீரை பெற வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ அவர் என்னச் செய்யலாம் இயேசு காட்டும் வழியில் பயணித்து அதற்கான ஆசீரை தமதாக்கலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் பின்வரும் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன.

முழுமையான நம்பிக்கை
விழிப்பு நிலை
பொறுப்புமிக்க பணிவிடை
எங்கே இந்த மூன்றும் வெளிப்படையாய் அமைகிறதோ அங்கே நம்பிக்கையால் யாவரும் நலமடைய முடியும் என்பதே இன்றைய நாள் வாசகங்கள் கொடுக்கும் நம்பிக்கை.

முழுமையான நம்பிக்கை:

     முழுமையான நம்பிக்கை என்பது நாம் நினைப்பது நடக்கும் என்ற எதிர்நோக்கு (எபி11:1). அதாவது திருத்தூதர்களைப் பார்த்து இயேசு என்ன சொல்கிறார்: சிறு மந்தையே அஞ்சாதே. அப்படியென்றால்;, நீங்கள் விரும்பும் வாழ்வை எவ்வாறு பெற்றுக்கொள்வீர் அல்லது எப்படி கிடைக்கும் என்று யாராவது கேட்டால், அது உங்களிடத்தில் வெளிப்படும் முழுமையான நம்பிக்கையால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுதான் ‘நலமான வாழ்வாய்’ நமக்கு கிடைக்கிறது. இதைத்தான் திபா 33:20 சொல்கிறது: “நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும், கேடயமும் ஆவார்”. இப்படிப்பட்ட விசுவாசப் பார்வைதான் நம்மை முழுமையான நம்பிக்கை வாழ்வுக்குள் அழைத்து செல்லும்.

விழிப்பு நிலை அல்லது விழிப்பாய் இருத்தல்:

     கடவுள் மீது நாம் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கை நம் வாழ்வில் பிரதிபலித்து நலத்தையும், வளத்தையும், வரத்தையும் பெற்று மகிழ வேண்டுமென்றால் நம்பிக்கையின் அடுத்த நிலையான அத்தகு நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள தேவையான விழிப்புநிலை நமக்கு தேவை. நலமான வாழ்வு எனக்கு வேண்டுமென்றால் நிச்சயமான நாம் விழிப்போடு இருக்க வேண்டும். எப்படி? நலமாய் இருக்க வேண்டிய என் வாழ்வு நலமற்றதாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே விழிப்பு நிலை. உதாரணமாக, நற்செய்தியில் வரும் உவமையில், வீட்டுப்பணியாளர் பொறுப்பில் உள்ளவர் தன் தலைவர் எந்த நேரத்திலும் வருவார் என்ற விழிப்பு நிலையில் இல்லாததால்தான் அவர் தன் விருப்பப்படி வாழ்கிறார். விழிப்பு நிலை இல்லாத போது நம் நம்பிக்கையும் அலையில் சிக்கி சிதையும் படகாகதான் இருக்கும். அத்தகைய நிலை நம்மில் உருவாகாமல் இருக்கவே இயேசு விழிப்பாய் இருங்கள். எல்லையற்ற நலத்தினைப் பெறுங்கள் என்று பறைசாற்றுகிறார்.

பொறுப்போடு பணிவிடை புரிதல்:

     வாழ்வில் ஏற்க வேண்டிய முழுமையான நம்பிக்கை விழிப்பு நிலையின் வழியாக தென்படுவதோடு மட்டுமல்ல அது முழு நிறைவையும் அடைய வேண்டுமென்றால், அதில் பொறுப்புமிக்க பணிவிடை அவசியம். எவ்வாறு? வீட்டு உரிமையாளர் எக்காலத்திலும் வந்தாலும் அவருக்கு பணிவிடை புரியும் பணியாளருக்கே தலைவர் உதவிகள் செய்து வாழ்வை உயர்த்துவார். நலமானதை செய்வார். அதுபோலத்தான் நாமும் இயேசு எந்நேரத்தில் வருவார் என்பது யாருக்கும் தெரியாது, இருப்பினும், அப்படிப்பட்ட தருணத்தில் நாம் பொறுப்போடு பணிவிடை புரிய வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழி ‘பணிவிடை புரிய தயாராய் இருப்பது’ தான். இத்தகு எண்ணத்தில் ஆழமாய் வேரூன்ற இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கிறார். அத்தகைய அழைப்புக்கு ஆம் சொல்லும் விதமாய் நம்முடைய பணிகள் அமையட்டும். அதற்கான வரத்தை ஒவ்வொரு நாளும் இறைவனிடத்தில் வேண்டுவோம்.

முழுமையான நம்பிக்கையும், விழிப்பாய் இருக்கும் நிலையும், பொறுப்போடு பணிவிடை புரிதலும்  நம்மில் இருக்கும் நம்பிக்கையை இன்றும் வலுப்படுத்தி நலமான வாழ்வைப் பெற்றிட உதவட்டும். இறைவனே நம் வாழ்வின் உற்றத்துணை என்னும் எண்ணத்தை உருவாக்கட்டும்.

“ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்” (திபா 31:24)

 

அருள்பணி.அ.மாணிக்கம்

பங்குத்தந்தை, பாலக்குறிச்சி

திருச்சி மறைமாவட்டம்

Add new comment

5 + 5 =