என் வழியாய் கடவு ளை மாட்சிப்படுத்துகிறேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflections


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் வியாழன்
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
I :எசாயா 49:1-6
II : திபா 138:1-3,13-15
III :தி ப 13: 22-26
IV : லூக் 1:57-66,80

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் "என்ற குறள் வரிகள் நாம் அனைவரும் அறிந்ததே. தனக்கு மகன் பிறந்த உடன் ஒரு தாய்க்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட அவன் சான்றோன் எனப் பெயர் பெறும் போது அந்த தாய் இன்னும் அதிகமாக மகிழ்கிறாள். பெருமை கொள்கிறாள். ஆம் நம் அனைவரின் பிறப்பிற்கும் அர்த்தம் உண்டு. அந்தப் பிறப்பின் அர்த்தத்தை அல்லது நோக்கத்தை நாம் நிறைவேற்றும் போது நாம் அனைவருமே பெருமை அடைகிறோம். நம் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கிறோம்.
அனைத்திற்கும் மேலாக  நம்மைப் படைத்தவரை மாட்சிப்படுத்துகிறோம்.
ஆனால் இதை எந்த அளவிற்கு நாம் செயல்படுத்துகிறோம் என்பதை ஆய்ந்து அறிய இன்றைய நாள் வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் தம் அழைப்பைப் பற்றி கூறும் போது தாய் வயிற்றிலேயே இறைவன் அவரை தேர்ந்து கொண்டதாகவும்  "நான் உன் வழியாய் மாட்சியுறுவேன் " என ஆண்டவர் கூறியதாகவும் எழுதியுள்ளார்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் எசாயா கூறிய வார்த்தைகள் அனைத்தும் திருமுழுக்கு யோவானின் வாழ்வில் நிறைவேறியதை நாம் அறியமுடிகிறது.

வயது முதிர்ந்த தாயான எலிசபெத்தின் வயிற்றிலே யோவான் இருந்த போது அன்னை மரியா தந்த அந்த சந்திப்பின் அணைப்பிலே இறைமகன் இயேசுவால்  கருவிலேயே அர்ச்சிக்கப்பட்டு இறைவனின் அழைப்பு யோவானுக்கு உறுதி செய்யப்பட்டது. இதுவே யோவான் மூலம் கடவுள் அடைந்த மாட்சியின் முதல்நிலை. 

அவருடைய பிறப்பிலேயே சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் இக்குழந்தை எத்தகையதோ என எண்ணி கடவுளின் கைவன்மையை புகழ்ந்து அவரை மாட்சிப்படுத்தினர்.கட்டப்பட்டிருந்த சக்கரியாவின் நாவு அவிழ்க்கப்பட்டு அவர் கடவுளைப் புகழலானார். 

அனைத்தையும் தாண்டி யோவான் தன்னடக்கம் நிறைந்த வாழ்வாலும் துணிச்சலான சவாலான போதனைகளால் தவறிச் சென்ற மக்களை மனந்திருப்பியதாலும்  இறைமகன் முன் தன்னைத் தாழ்த்திக்கொண்டு அவருக்காக வழியை ஆயத்தம் செய்ததாலும் உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் உயிர் துறந்ததாலும் கடவுளை தன் வாழ்நாள் முழுமையும் மாட்சிப்படுத்திக்கொண்டே இருந்தார்.

நாமும் கடவுளை மாட்சிப் படுத்தவே படைக்கப்பட்டுள்ளோம்.திருமுழுக்கு யோவானின்  பண்பு நலன்களை நமதாக்கிக் கொண்டு நம் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இறைவனுக்கு சாட்சிய வாழ்வு வாழும் ஒவ்வொரு தருணமும் இறைவன் நம் வழியாய் மாட்சியுறுகிறார்.இதை உணர்ந்து 
இறைவனை நம் வழியாய் மாட்சிப் படுத்த புறப்படுவோமா?

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!  எம் வாழ்வு உமக்கு என்றும் மாட்சியாய்  விளங்க திருமுழுக்கு யோவானைப்போல தாழ்ச்சி துணிச்சல் தன்னடக்கம் நேர்மை போன்ற பண்புகளோடு வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 6 =