Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நல்லவர்கள் என்பதை நற்செயல்களால் காட்டுவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பனிரெண்டாம் புதன்
I : 2 அர22:8-13,23:1-3
II : திபா 118:33-37,40
III : மத் 7:15-20
உலகில் வாழும் அனைவருக்கும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசை. நம்மைப் பார்த்து " இவன் நல்லவன் " என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று விரும்பி அனைவரும் பார்க்கும் வண்ணம் சில காரியங்களைச் செய்துவிட்டு பின் நம் இயல்பு நிலைக்குத் திரும்புவது நம்மில் பலருடைய வழக்கமாகி விட்டது.
உதாரணமாக அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள் இல்லை என அனைவரும் முத்திரையிடக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் நல்லவையாக மக்களுக்கு பயனுள்ளவையாக பணிபுரிபவையாக இல்லாததே. அவர்களிலும் சிலரை மட்டும் இறந்த பின்னும் நாம் பெருமையாகப் பேசுவது ஏன்? அவர்களுடைய பொதுவாழ்வு மக்களுக்குப் பயனுள்ள பணிவாழ்வாக அமைந்ததே.
எது எவ்வாறாக இருந்தாலும் நல்லவராக நாம் திகழ விரும்பினால் நம் உள்ளமும் நன்மையால் நிறைந்திருக்க வேண்டும்.
நல்ல மரம் நல்ல கனிதரும் என்று இயேசு கூறுகிறார். நல்ல மரம் என்றால் அதன் வேர்கள் ஆழமானதாக ஆரோக்கியமானதாக நிலத்திலிருந்து சத்துக்களை உட்கிரகித்து அதை மரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அளிப்பதாக இருக்கும். இலைகள் கிளைகள் என அனைத்து பாகங்களும் வளமையாக இருக்கும். அந்த வளமையும் இனிமையுமே கனிகளில் வெளிப்படும்.
அதேபோல நல்லவர்களாக விளங்க வேண்டும் எனில் நம் எண்ணங்கள் சொற்கள் நம் செயல்பாட்டிற்கான நோக்கங்கள் அனைத்தும் நல்லவையாக தூய்மையாக ஆரோக்கியமாக பயனுள்ளவையாக இருக்க வேண்டும். அவை நம் செயல்களில் வெளிப்படும். நல்லவர்களாக திகழ்வது என்பது இயேசுவுக்கு சான்றுபகரும் சீடத்துவ வாழ்வே.எனவே இயேசுவைப் போல நேர்மறையான நல்ல எண்ணங்களால் நிறைந்தவர்களாய் நம் நற்காரியங்களால் உலகிற்கு நம்மை நல்லவர்கள் என எண்பிப்போம்.
இறைவேண்டல்
அன்பே இறைவா!
நீர் எப்போதும் நல்லவர். ஆகவே நன்மை மட்டுமே உம்மிடம் வெளிப்படும். நாங்களும் நற்கனிகளை மட்டும் தரும் நல் மரங்கள் போல நற்காரியங்களை மட்டுமே செய்து உமக்கு சான்று பகர வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment