நிறைகாண கற்றுக்கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் திங்கள் 
I: 2அர17:5-8,13-15,18
II: திபா 59:3-5,12-13
III: மத்7:1-5

ஒருமுறை தங்கச்சிமடம் பங்கில் நற்செய்தி பணியாளர்களுடன் இல்லங்களை சந்தித்துவிட்டு, அனைவரும் இணைந்து ஒரு வீட்டில் இரவுஉணவு உண்டோம். உணவை முடித்த பிறகு ஆலயத்திற்குச் செல்லப் புறப்பட்டோம். அப்பொழுது ஓரிடத்தில் கருவாடுகள் காயவைக்கப்பட்டிருந்தன.  நான் எதார்த்தமாக அதை பார்த்தவுடன் கருவாடை தரையில் காய வைத்திருக்கிறார்கள். இவற்றை எப்படி உண்பது என்று கேள்வி எழுப்பினேன். உடனே நற்செய்திப் பணியாளருள் ஒருவர் "தந்தையை சற்று கூர்ந்து கவனியுங்கள். அதன் கீழ் ஒரு துணி விரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். அதனைத் தொடர்ந்து "நிறையை மட்டும்தான் காணவேண்டும் குறையை காணக்கூடாது" என்ற கருத்தையும் என்னிடம் பதிவு செய்தார். அதைக் கேட்டவுடன் இந்த நற்செய்தி பணியாளரைக் குறித்து சற்று மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவரிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் குறைகளைக் காண்பது என்பது மிகவும் எளிது. யாரெல்லாம் குறைகளைக் காண்பார்கள் என்றால், யார் அதிகமாக தவறு செய்கிறார்களோ அவர்கள்தான் குறைகளை அதிகம் காண்பர். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிறரை நாம் தீர்ப்பிடுவதில் அதிவிரைவு நிலை கொண்டவராயும், புரிந்து கொள்வதில் மந்தநிலையினராயும் உள்ளோம். பிறரைத் திருப்பிடுவது தவறான மனநிலை. ஏனெனில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருமே பலவீனமுள்ளவர்கள். எனவே நாம் தீர்ப்புக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமென்றால் பிறரை தீர்ப்பிடுவதில் தாமதம் காட்டவேண்டும்.

குறைகளைக் காணாமல் நிறைகளைக் காண முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது நம்முடைய வாழ்வில் வசந்தமும் நிறைவும் இருக்கும். குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே அதிகமான சண்டைகள் வருவதற்கு காரணம் ஒருவரை ஒருவர் தீர்ப்பிடுவது.குறைகாண்பது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பலவீனமானவர்கள் என்பதை கணவனும் மனைவியும் அறிந்துகொண்டு ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டும் பொழுது வாழ்வில் வசந்தம் பிறக்கும். அதேபோல உடன்பிறந்த சகோதர சகோதரிகளில் குற்றங்குறைகளை நிறைவோடு ஏற்று அன்பு செய்யும் பொழுது எல்லா பிரச்சனைகளும் முடிவு பெறும். 

நிறைவானது வரும் பொழுது குறைவானது தானாக போய்விடும். எனவே நிறைவான வாழ்வை நோக்கி நாம் பயணிக்க முயற்சி செய்வோம். குறை காணும் மனநிலையை விடுத்து, நேர்மறையான மனநிலையில் பயணிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக நாமும் கடவுள் பார்வையில் தீர்ப்புக்குள்ளாக மாட்டோம். இறைவன் தரும் நிறைவான மகிழ்வை அனுபவிக்க முடியும். நிறைகளைக் கண்டு இறைவனைப் போற்றிப் புகழ தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் குறைக்காணும் மனநிலையை விடுத்து, நிறையைக் காணும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

12 + 1 =