Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பொருளுணர்ந்து இறைவேண்டல் செய்வோம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பதினொன்றாம் வியாழன்
I : சீராக் 48:1-15
II : திபா 97: 1-2. 3-4. 5-6. 7
III : மத் 6: 7-15
எச்சமயத்தவராய் இருந்தாலும் இறைவேண்டல் என்பது பக்தருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் அடித்தளமாய் அமைகிறது. இறைவேண்டல் என்பது கடவுளுக்கும் அவரின் படைப்புப் பொருளான மனிதனுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு சாதனமாய் விளங்குகிறது. மனிதன் கடவுளோடு பேசும் அன்பின் மொழியே இறைவேண்டல். இறைவேண்டல் இல்லையெனில் இறைமனித உறவு இல்லை. இத்தகைய இன்றியமையாத இறைவேண்டலை நாம் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளதாக ஆன்மாவோடு தொடர்புடையதாக மாற்றுகின்றோம் என்பதை ஆழ்ந்து சிந்திக்கவே இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
நான் ஒரு பங்கிற்கு திருப்பலி நிறைவேற்ற சென்றிருந்தேன். அங்கே இளைஞர்கள் பலர் கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். பங்குத் தந்தை அவ்வப்போது அவர்களை நோக்கி உள்ளே வாருங்கள் என அழைத்த வண்ணமாய் இருந்தார். மறுபுறம் இளம்பெண்கள் சிலர் திருப்பலியில் சொல்லவேண்டிய எந்தப் பதிலையும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு வேண்டா வெறுப்பாக ஆலயத்தில் அமர்ந்திருந்ததையும் கண்டேன். என் மனதிற்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது. இறைவேண்டலின் உச்சகட்டமே திருப்பலிதான். அதில் நான் கண்ட இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற விதம் இறைவேண்டலின் பொருளை அவர்கள் புரிந்து கொண்டதன் ஆழத்தை விவரிப்பதாய் இருந்தது.
சிலரைப் பொறுத்தவரை இறைவேண்டல் செய்வது கடமையாகிவிட்டது. சிலரைப் பொறுத்தவரை இறைவேண்டல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. சிலருக்கு இறைவேண்டல் என்றால் என்ன என்பதே விளங்கவில்லை. புத்தகத்திலுள்ள எழுத்துக்களை மனனம் செய்து கண்ணைமூடி ஒப்பிப்பதும், கடமைக்கு ஆலயத்திற்கு வந்து வாயை மூடி அமர்வதுமல்ல இறைவேண்டல்.
இன்று நம்மை நாமே பரிசீலனை செய்வோம். நம் வாழ்வில் இறைவேண்டலின் பொருள் என்ன?இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவேண்டல் என்பது வார்த்தைகளை அடுக்கி பிதற்றாமல் பொருளோடு இறைவனிடம் உரையாடுவது என்பதை விளக்குகிறார்.இறைவனைப் புகழ்ந்து அவரின் திருஉளத்தை ஏற்பதே உண்மையானை செபம் எனக் கூறுகிறார். நம்பிக்கையோடு, நம் அன்றாடத் தேவைகளை மட்டுமே கேட்க வேண்டும் எனவும் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக பிறரை மன்னித்து அதன்பின் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது உயரிய செபம் எனக் கூறுகிறார். நம்முடைய வாழ்வில் இயேசு கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றி பொருளுணர்ந்து இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொள்வோம். இறைவனோடு நாம் செலவழிக்கும் மணித்துளிகள் இறைஅருளின் வரவுக்கு காரணமாகும் என உணர்வோம்.
இறைவேண்டல்
அன்புள்ள விண்ணகத்தந்தையே! உம்மோடு ஆழமான உறவு கொள்ளும்படி எங்கள் இறைவேண்டல் பொருளுள்ளதாய் அமைய வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment