துணிவோடும் முன்மதியோடும் சான்று பகர்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


காலம்-ஏழாம் வாரம் வியாழன் 
I: திப 22:30,23:6-11
II: திபா 15:1-2,5,7-11
III :யோவான் 17:20-26

சான்று பகர்தல் என்பது, நாம் நம்பிக்கை கொண்ட ஒருவர் அல்லது நாம் விரும்பும் ஒருவருடைய நன்மைத்தனங்களை பிறருக்கு அறிவித்து அவர்களையும் அன்பு செய்யவும் நம்பவும் தூண்டுவது. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவுக்காக சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். கடவுள் இயேசுவின் மூலம் நமக்குத் தந்த எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளத்தோடு சான்று பகர வேண்டும்.ஆனால் சான்று பகர்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. கிறிஸ்தவ மறை தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரையிலும் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் எங்காவது நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்று நாம் அறியாத மனிதருக்கு கிறிஸ்துவின் பொருட்டு ஏற்படும் துன்பம் நாளை நமக்கும் வரலாம். அந்நேரங்களில் நாம் துணிச்சலோடும் முன்மதியோடும் இருந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர வேண்டும்.

இயேசு தம் சீடர்களிடம் "அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே." என்று மாற்கு 13:11 லே கூறுகிறார். தனக்கு சான்று பகரும் போது துன்பங்களை எவ்வாறு சமாளிப்பது என கவலை கொள்ளத் தேவையில்லை. கடவுள் தூய ஆவிமூலம் தன்னுடைய வழிநடத்துதலை அருள்வார் என்பதுதான் இதன் பொருள். இந்த இறைவார்த்தை புனித பவுலின் வாழ்வில் நிறைவேறுவதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

பவுல் ஆயிரத்தவர் தலைவரின் விசாரணைக்கு வரும்போது பயம் கொள்ளவில்லை. இயேசுவின் உயிர்ப்பை தான் பேசியே ஆகவேண்டும் என்ற துணிச்சலோடு இருந்தார். உயிர்ப்பை பற்றிய கருத்து வேறுபாடு  பரிசேயருக்கும்  சதுசேயருக்கும் இருப்பதை அறிந்து முன்மதியோடு பேசி அவர்களிடையே பிளவை உண்டாக்கி கிறிஸ்துவுக்கு மென்மேலும் சான்று பகரும் வண்ணம் தன்னைக் காத்துக்கொண்டார். ஆம். தூய ஆவியாரே பவுலுக்கு துணிச்சலையும் முன்மதியையும் தந்தார். 

 ஆண்டவர் பவுலின் அருகில் நின்று இன்னும் இன்னும் சான்றுபகர துணிவோடு இருக்க அறிவுறுத்தியதாக நாம் வாசிக்கிறோம். நம்மை அவருடைய பணிக்கென்று கடவுள் தேர்ந்தெடுக்கும் போது தன்னுடைய உடனிருப்பின் மூலம் துணிச்சலைத் தருவார் என்பதற்கு இந்நிகழ்வு ஒருசான்று. நம் ஆண்டவர் இயேசு சீடர்களுக்கும் அவர்கள் வழியாக தன்னை நம்புவோருக்கும் தந்தையிடம் இறைவேண்டல் செய்யும்போது " நான் உம்மோடு ஒன்றாயிருப்பது போல அவர்களும் ஒன்றாயிருப்பார்களாக " என்று செபிக்கிறார்.தந்தையோடும் இயேசுவோடும் நாம் இணைந்திருந்தால்தான் அவர்களுக்காக உலகில் சான்று பகர நமக்கு துணிச்சலும் முன்மதியும் கிடைக்கும். எனவே இனிவரும் காலங்களில் சவால்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடும் முன்மதியோடும் கடவுளுக்குச் சான்று பகரத் தயாராவோம். கடவுளோடு ஒன்றித்திருப்போம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா!
துணிவுடையவர்களாகவும் தூய ஆவியாரின் ஏவுதலை அறிந்து முன்மதியுடையவர்களாகவும்  வாழ்ந்து உமக்குச் சான்றுபகர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்களம் பங்கு 

Add new comment

2 + 6 =