Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் - ஆறாம் வெள்ளி
I: திப: 18: 9-18
II: தி.பா: 47: 1-2. 3-4. 5-6
III : யோவான்: 16: 20-23
மனிதர் எல்லாருமே மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்றே ஆசிக்கிறோம். மகிழ்ச்சி என்ற உள்ளுணர்வானது நாம் வாழ்வதற்கான ஆவலைத் தருகிறது. நம்மிடமிருந்து பிறருக்கும் பரவி அவர்களையும் வாழவைக்கிறது. "மகிழ்ச்சி " என்பது தூய ஆவியின் கொடைகளில் ஒன்று.அதை பிறர் நமக்குத் தரவும் முடியாது. நம்மிடமிருந்து யாரும் அதை எடுக்கவும் முடியாது.இத்தகைய மகிழ்ச்சியுடன் வாழ நம்மைத் தூண்டும் விதமாக இன்றைய நற்செய்தி அமைகிறது.
ஒரு மனிதன் ஒரு ஞானியிடம் சென்று " எனக்கு வாழ்வில் மகிழ்ச்சியே இல்லை. என்னை யாரும் மகிழ்ச்சியாக வாழ விடவில்லை " என்றாராம். அதற்கு அந்த ஞானி " முட்டாள்.நீ தான் உன்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். உனக்குள்ளே தான் மகிழ்ச்சி இருக்கிறது. தேடு " என்று சொன்னாராம். " அதை எவ்வாறு தேடுவது " என்று மீண்டும் கேட்க, " கடவுளை உனக்குள் கண்டடைந்தால், எதுவும் கடந்து போகும் என்ற மனத்தோடு வாழப்பழகினால் மகிழ்ச்சியை அடைவாய் "என்று சொன்னாராம் அந்த ஞானி.
இன்றைய நற்செய்தியும் இதே கருத்தையே நமக்குத் தருகிறது. உங்கள் துக்கம் மகிழ்ச்சியாய் மாறும் என்கிறார் இயேசு. துன்பத்திற்குப் பின் நிச்சயம் இன்பம் உண்டு என்ற கருத்தை ஒரு தாயின் வலியோடு பிள்ளையை பெற்றபின் மகிழும் செயலுக்கு ஒப்பிடுகிறார். நமது வாழ்க்கையில் துன்பத்தையும் இன்பத்தையும் சமநிலையோடு காணும் மனநிலை இருந்தால் நமக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இத்தகைய மனநிலையில் வாழும் போது வெளிஉலகத்தின் தாக்கங்கள் நம் மகிழ்வைக் குலைக்காது.
மேலும் இயேசு நான் உங்களைக் காணும் போது மகிழ்வீர்கள் என்ற கருத்தையும் கூறுகிறார். இதை நாம் இவ்வாறு சிந்திக்கலாம். இயேசு அல்லது கடவுள் நம்மைக் காண்கிறார் என்று நாம் உணரும் போது என்ன நடந்தாலும் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம். வேறு விதமாகக் கூறினால் அந்த ஞானி கூறியதைப்போல கடவுளை நமக்குள் கண்டறிந்தால் அவரை உணர்ந்தால் நம்முடைய மகிழ்ச்சி நிலையாக இருக்கும். யாரும் அதை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளவும் இயலாது. எனவே உலகத்தின் துக்கங்களும் கவலைகளும் நம் மகிழ்வைப் பறித்துக்கொள்ளா வண்ணம் கடவுளை உணர்ந்தவர்களாய் எதுவும் கடந்து போகும் என்ற மனநிலையுடன் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
இறைவேண்டல்
மகிழ்ச்சியின் காரணனே இறைவா!
உம்மை எம்முள் உணர்ந்தவர்களாய் இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையான மனதுடன் மகிழ்வுடன் வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
த.சூசையப்பட்டிணம்
தங்கச்சிமடம்
Add new comment