கடவுளைத் தெரிந்திருக்கிறோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் புதன்
I : திப: 17: 15,22 - 18: 1
II : தி.பா: 148: 1-2. 11-12. 13. 14
III : யோவான்:  16: 12-15

அறிதல் அல்லது தெரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மனிதரை அறிந்து அவரைப்பற்றி தெரிந்திருந்தால்தான் அவருடன் பழகவும் அன்பு செய்யவும் முடியும். தெரியாத ஒருவரிடம் பழகவும் முடியாது. பழகுவதற்கு நம் மனதில் ஒருவித பயமும் தயக்கமும் இருக்கும். சில சமயங்களில் தெரியாதவர்களை நாம் நிராகரிப்பதும் உண்டு. மனிதர்களிடையே இது நடைபெறுவதுண்டு.அப்படியிருக்க  நாம் வணங்குகின்ற கடவுளை நாம் அறியாதவர்களாய் இருந்தால் இதே உணர்வுகள் தான் நம்மிடம் இருக்கும். கடவுளிடம் பயம் நிறைந்த பக்தி மட்டுமே இருக்குமே தவிர அன்பும் உரிமையும் இருக்கவே வாய்ப்பில்லை.

இன்றைய முதல்வாசகத்தில் பவுல் போதிக்கச் சென்ற போது " தெரியாத கடவுளுக்கு " எனக் குறிக்கப்பட்டு ஒரு பலிபீடம் இருப்பதைக் கண்டார். இந்த அறியப்படாத கடவுளே விண்ணையும் மண்ணையும் உண்டாக்கி ஒரு மனிதனிலிருந்து பெரிய மக்களினத்தை உருவாக்கிய கடவுள் என்ற சரியான தெளிவான நற்செய்தியைப் போதித்தார். கடவுளின் பிள்ளைகளான நாம் கடவுளைப்பற்றி சரியாக அறியாமல் மண்ணையும் கல்லையும் கைவினைப்பொருட்களையும் வழிபடக்கூடாது என்று படிப்பித்தார். 

நற்செய்தியில் இயேசு தன்னை மீண்டும் மீண்டும் கட வுளுடைய மகனாக வெளிப்படுத்தி தானும் தந்தையும் ஒன்றாக இருக்கும் நிலையை சீடர்களுக்கு விளக்குகிறார். தந்தையை தான் முழுவதுமாக அறிந்திருப்பதாகக் கூறுகிறார். 

இவ்வாசகங்கள் நமக்குக் கூறும் செய்தி என்ன? நாம் கடவுளை எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறோம் என சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் விடை என்ன? நம்முடைய வழிபாடுகளின் முக்கிய நோக்கமே நாம் கடவுளை அதிகமாக அறிந்து அவரை அன்பு செய்து அவரை அடைவதே. கருவில் உருவாகும் முன்பே நம்மை அறிந்த இறைவனை, நம் பெயர்களை உள்ளங்கையில் பொறித்து நம்மைப் பற்றி அணு அணுவாக அறிந்த இறைவனை நாம் இன்னும் இன்னும் அதிகமாக அறிந்து அன்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை நமக்குள் வளர்த்தெடுப்போம். அதற்கான வரம் கேட்போம். 

இறைவேண்டல் 
அன்பு இறைவா! உம்மை நாங்கள் அறிந்து அன்பு செய்து உம் பிள்ளைகளாய் வாழ வரமருளும். ஆமென்.

Add new comment

6 + 6 =