தூய ஆவியாரின் துணையை நாடுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் திங்கள்
I: திப: 16: 11-15
II: தி.பா: 149: 1-2. 3-4. 5-6,9
III : யோவான்:  15:26 - 16:4

கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவியாரின் துணையும் வழிகாட்டுதலும் முக்கிய இடம் பெறுகிறது. திருஅவையை வழிநடத்துகின்ற தலைவர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலால் செயல்படுகிறார்கள் என்று நம்புகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்ற திருவிவிலியம் தூய ஆவியாரின் தூண்டுதலாலும் வழிகாட்டுதலும் மனிதர்கள் வழியாக எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறோம்.

தூய ஆவியாரின் துணையும் வழிகாட்டுதலும் கத்தோலிக்கத் திருஅவையில் நிரம்பியிருக்கின்றது.  அதற்கு மிகச் சிறந்த உதாரணம் கத்தோலிக்கத் திருஅவையின் பொக்கிஷங்களாக இருக்கக்கூடிய ஏழு அருள்சாதனங்கள். இந்த ஏழு அருள்சாதனங்களும் தூய ஆவியை அடித்தளமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் தூய ஆவியார் துணையாளராக நமக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துபவர் என்று இயேசு கூறுகிறார். 'இயேசு சீடர்களை நோக்கி, 'தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற துணையாளர் வருவார்.
அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்...
அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்'' (யோவான் 15:26-27). எனவே நாம் தூய ஆவியாரை முழுமையாக பற்றி பிடித்து அவரது துணையை நாடும் பொழுது ஆசீர்வாதத்தை நிறைவாக பெறுகிறோம். தூய ஆவியாரின் துணை நமக்கு துணிவையும் ஆற்றலையும் வல்லமையையும் கொடுக்கிறது. இயேசு தம் சீடர்களுக்கு தூய ஆவியாரின் துணையைப் பற்றி பேசியதற்கு காரணம், சீடர்கள் அச்சத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும் விடுதலை பெற்று துணிவோடு  நற்செய்தியை அறிவிக்க பக்குவப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். துணிவோடு தன்னுடைய நற்செய்தியை பறைசாற்ற இயேசு தூய ஆவியாரின் வழியாக சீடர்களை ஊக்கமூட்டினார். தன் குருவாகிய இயேசு இறந்து விடுவார் என்று  உள்ளம் கதறியவர்களாக சீடர்கள் இருந்தனர். அவர்களை துணிவு மிக்கவர்களாக ஊக்கமூட்ட தூய ஆவியாரின் துணையை பற்றி பேசி,  நற்செய்திப் பணி செய்ய வழிகாட்டினார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் நாம் இவ்வுலகம் குறித்த பயத்திலிருந்து மீண்டு துணிவோடு இயேசுவின் நற்செய்திக்கு சாட்சி பகர நம்மையே முழுவதும் ஒப்புக்கொடுப்போம். அதற்கு தூய ஆவியாரின் துணையை நம்புவோம். தூய ஆவியாரிடம் ஒப்படைத்து இறைத் திருவுளப்படி நடந்திட நம்மையே முழுவதும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

 இறைவேண்டல் 
துணையாளராம் தூய ஆவியை அனுப்பிய இயேசுவே! தூய ஆவியின் வழிநடத்தலில் வாழ்ந்து, உமது திருவுளப்படி பயணமாகி, உமது இறைத்திட்டத்தை நிறைவேற்ற அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
த.சூசையப்பட்டிணம்

Add new comment

1 + 3 =