தூய ஆவியாரின் ஆற்றலில் வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பாஸ்கா காலம் -ஆறாம் ஞாயிறு
I: திப: 15: 1-2, 22-29
II: தி.பா: 67: 1-2. 4. 5,7
III: தி.வெ: 21: 10-14, 22-23
IV : யோவான்:  14: 23-29

பல நேரங்களில் கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவியார் செயல்படுவதில்லை என்று பிரிவினை சபையைச் சார்ந்த சகோதர சகோதரிகள் கூறுவது வழக்கம். காரணம் கத்தோலிக்கத் திருஅவையின் பாரம்பரியத்தை மேலோட்டமாக அவர்கள் புரிந்து வைத்ததே ஆகும். நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வு தூய ஆவியை அடித்தளமாக கொண்டு தான் செயல்படுகிறது. அதற்கு மிகச்சிறந்த சான்று ஏழு அருள் சாதனங்கள்.

கத்தோலிக்கத் திருஅவையில் 7 அருள்சாதனங்கள் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்றது. தூய ஆவியாரின் அருளையும் ஆசியையும் ஆற்றலையும் கொடையையும் கனியையும் நமக்கு வழங்குகின்றது. இவற்றை முழுமையாக அனுபவித்தவர்கள் கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவியாரின் செயல்பாடு அதிகம் இருப்பதை உணர்வர்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு ஆழமானதாக இருக்க வேண்டுமெனில் தூய ஆவியாரின் துணையோடு நம் வாழ்வை வாழ வேண்டும். தூய ஆவியார் மட்டுமே நம்முடைய உயிர்த்துடிப்புள்ள கிறிஸ்தவ வாழ்விற்கு ஆற்றலும் வல்லமையும் தரமுடியும். எனவேதான் ஆண்டவர் இயேசு விண்ணகத்திற்கு சென்ற பிறகு நமக்கு துணையாளராம் தூய ஆவியாரை அனுப்பியுள்ளார். இந்தத் தூய ஆவியாரை நாம் முழுமையாக பற்றி பிடிக்க இறைவார்த்தையை முழுமையாக கேட்டு அனுபவித்து வாழ்வாக்க முயற்சி செய்ய வேண்டும். 

இன்றைய செய்தி வாசகத்தில் "என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்று தருவார்" என்கின்ற இறைவார்த்தை தூய ஆவியாரின் துணையை உறுதி செய்கிறது. தூய ஆவியாரின் துணைகொண்டு நாம் அனைத்தையும் செய்கிற பொழுது வெற்றியை பெறுகிறோம். நாம் ஒவ்வொருவருமே தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயமாக திகழ அழைக்கப்பட்டுள்ளோம். இறைவன் தரும் அமைதியை நாம் முழுமையாக சுவைக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் தூய ஆவியாரின் ஆலயங்களாக மாறவேண்டும். நாம் உள்ளம் கலங்காமல் துணிவோடு வாழ்வை வாழ வேண்டுமென்றால் தூய ஆவியாரின் துணையை நாட வேண்டும். தூய ஆவியாரின் வல்லமையும் ஆற்றலும் நமக்குள் செயல்பட நம் உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். தந்தையாம் கடவுள் இயேசுவின் வழியாக வெளிப்படுத்திய வாழ்வு தரும் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும். அப்பொழுது தூய ஆவியாரின் வல்லமையையும் ஆற்றலையும் நம்முடைய அன்றாட வாழ்வில் அனுபவிக்க முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

 மன்றாடுவோமாக
வல்ல இறைவா! நீர் தரும் ஆற்றலையும் வல்லமையையும் பெற தூய ஆவியின் துணையை தாரும். தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயமாக உடலையும் உள்ளத்தையும் கழுவியருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
த.சூசையப்பட்டிணம்

Add new comment

1 + 6 =