Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பில் நிலைத்திருக்க தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் -ஐந்தாம் வியாழன்
மு.வா: திப: 15: 7-21
ப.பா: தி.பா: 96: 1-2. 2-3. 10
ந.வா : யோவான்: 15: 9-11
"அன்பில் நிலைத்திருக்க தயாரா?"
ஒரு வீட்டில் இரண்டு மகன்கள் இருந்தனர். ஒரு மகன் ஒரு பெண்ணை காதலித்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்தார். பெற்றோர்கள் காதலித்து திருமணம் செய்த மகனை வேண்டா வெறுப்புடன் ஒதுக்கி வைத்தனர். வாழ்வில் முன்னேற மாட்டார்கள் என்று கோபத்தோடு சபித்தனர். ஆனால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் காதலித்து திருமணம் செய்த தன் மனைவியை சிறப்பாக அன்போடு வழிநடத்தினார். ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பை கொண்டிருந்தனர். இருவரும் இணைந்து வாழ்வில் சாதனைகள் பல புரிந்தனர்.
மற்றொரு மகனை வற்புறுத்தி தங்கள் உறவினரின் சொத்துக்கள் போய்விடக்கூடாது என்பதற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சொத்துக்காக திருமணம் செய்த அந்த திருமணம் சில நாட்களில் புரிதல் இல்லாமல் பிரிந்து விட்டது. இறுதியில்தான் பெற்றோர்கள் புரிந்து கொண்டார்கள் உண்மையான அன்புள்ள திருமணவாழ்வு என்பது பணத்தால் வருவதல்ல; மாறாக, நல்ல மனதால் வருவதுதான் என்று.
நம்முடைய வாழ்க்கையிலும் நாம் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அது உள்ளார்ந்த ஆழமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது குறுகிய காலக்கட்டத்தில் அந்த அன்பு வெறுப்பாக மாறிவிடும். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் அன்பின் மேன்மையைப் பற்றி கூறியுள்ளார். ``என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்" என்று கூறியுள்ளார். நம்மைப் படைத்த தந்தையாம் கடவுள் என் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார். அதனுடைய வெளிப்பாடுதான் உலகம் படைக்கப்பட்டது முதல் இந்த நொடி பொழுது வரை நாம் எவ்வளவோ பாவங்கள் செய்தாலும் நம்மை அரவணைத்து அன்பு செய்யக்கூடிய தந்தையாக இருக்கின்றார். அவருடைய அன்பின் உச்சம் தான் ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்தது. ஆண்டவர் இயேசுவை பாவ கழுவுவாயாக இந்த உலகத்திற்கு அனுப்பி நாம் அனைவரும் மீட்பு பெற வழிகாட்டியுள்ளார். தந்தையாம் கடவுளின் அன்பை முழுமையாக ஆண்டவர் இயேசு நம்மிடம் வெளிப்படுத்துகிறார். அந்த அன்பின் ஒவ்வொருவருமே நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். நேற்றைய நற்செய்தியில் திராட்சைச் செடியோடு கொடி இணைந்து இருந்தால் தான் மிகுந்த பலன் கொடுக்க முடியும் என்பதை வாசித்தோம். நாம் பலன் கொடுக்க வேண்டுமென்றால் இயேசுவின் இதய அன்பில் நிலைத்திருக்க வேண்டும். அந்த அன்புதான் நமக்கு ஆற்றலையும் வல்லமையையும் உயிர் துடிப்பையும் ஆசீர்வாதத்தையும் நிறைவாகத் தரும்.
அத்தகைய ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் வாசிக்கிறோம். "நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.'' நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக தந்தையாம் கடவுள் தந்த கட்டளைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அதன் வழியாக நாம் இயேசுவை முழுமையாக அன்பு செய்து அந்த அன்பில் நிலைத்திருக்க முடியும். இத்தகைய அன்புதான் நமக்கு நிலை வாழ்வையும் நிறை மகிழ்ச்சியையும் வழங்கும். அத்தகைய நிலையான மகிழ்ச்சியில் அகமகிழ தேவையான அருளை நாம் வேண்டுவோம். இயேசுவின் இதய அன்பில் நிலைத்திருந்து நம்மோடு வாழக்கூடிய எல்லா மனிதர்களையும் அனைத்து பாகுபாடுகளையும் தாண்டி அன்பு செய்ய முயற்சி செய்வோம். அது நம்மை நிலையான நிறைவுள்ள மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும். இயேசுவின் இதய அன்பில் நிலைத்திருக்கவும் தந்தையாம் கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவும் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
இதய அன்பில் நிலைத்திருக்க உதவி செய்யும் இயேசுவே! நாங்கள் வாழுகின்ற இந்த கிறிஸ்தவ வாழ்வில் முழுமனதோடு உண்மை அன்பு செய்யவும் தந்தையாம் கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவும் உம்மிடம் பெற்ற அன்பை இறைச்சாயலில் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களிடத்திலும் பாகுபாடுகளை தாண்டி பகிர நல்ல மனநிலையை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
த.சூசையப்பட்டிணம்
Add new comment