ஆண்டவரின் மீட்புச் செயல்களை நினைவில் கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் நான்காம்  வியாழன்
I :தி ப : 13:13-25
II :  தி பா: 88:2-3,21,22,25,27
III : யோவான் : 13:16-20

ஒரு வீட்டில் தாயும் மகனும் வசித்து வந்தனர்.மகன் வளர வளர தன் தாயின் பேச்சை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். தாய் ஏதாவது பேசினால் அவரை எதிர்த்துப் பேசிக்கொண்டே இருப்பான். அந்தத் தாயானவர் இந்த மகனுடைய வாயை அடக்க கைப்பற்றிய ஒரே ஆயுதம் என்ன தெரியுமா?  அழுதுகொண்டே அந்த மகனுக்காக தான் செய்த எல்லாவற்றையும் ஒப்பிப்பதுதான். தொடக்கத்தில் இதைக் கேட்டபோதெல்லாம் மகன்  எரிச்சலடைவார். ஆனால் காலப்போக்கில் அச்செயலே அந்த மகனின் மனமாற்றத்திற்கு வழிவகுத்தது. 

சிலசமயம் நம் வீட்டிலும் மூத்தோர்கள் பழைய செய்திகளைத் திரும்பத் திரும்ப கூறுவார்கள்.அவர்கள் திரும்பத் திரும்பக் கூறுவதால் பல வேளைகளில் நாம் எரிச்சலடைவதுண்டு. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது போல இருந்துவிடுவோம். ஆனால் அவை எல்லாம் ஒருவித நினைவூட்டல்களே. மீண்டும் மீண்டுமாய் நாம் கேட்கின்ற அல்லது பார்க்கின்ற விஷயங்கள் நாம் எதிர்பாராத வேளைகளில் நமக்குப் பயனுள்ளதாய் அமைகிறது. 

இன்றைய முதல் வாசகமும் நமக்கு அப்படிப்பட்ட ஒரு கருத்தைத்தான் எடுத்துரைக்கிறது.
யூதர்களின் தொழுகைக்கூடத்திலே பவுல் நற்செய்தியை அறிவிக்கும் போது கடவுளின் மீட்புத்திட்டத்தை தொடக்க காலத்திலிருந்து எடுத்துரைக்கிறார். பவுல் கூறிய அத்துணை நிகழ்வுகளும் யூதர்களுக்குப் புதிதல்ல. தலைமுறை தலைமுறையாய் பெரியோர்கள் சிறியோர்க்கு இந்நிகழ்வுகளை எடுத்துரைப்பது அவர்களுடைய வழக்கமாக இருந்தது. ஆயினும் மீண்டுமாக பவுல் மக்களுக்கு இதை எடுத்துரைக்கிறார்.

இதற்கு காரணமென்ன என ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கடவுளுடைய மீட்புச் செயல்களை அறிந்திருந்த போதும் யூதர்கள் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழவில்லை. அத்தோடு கடவுளுடைய நற்செய்தியை போதித்த இயேசுவையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளுக்கு ஏற்ற மக்களாக யூதர்களை மாற்றவும் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவும் பவுல் தொடக்க காலத்திலே இருந்து கடவுள் ஆற்றிய மீட்புச் செயல்களை நினைவூட்டி இயேசுதான் அம்மீட்பின் முடியாக விளங்குகிறார் என்பதை யூதர்களுக்கு விளக்குகிறார்.

அன்புக்குரியவர்களே கடவுள் நம் வாழ்வில் ஆற்றிய வல்ல செயல்களெல்லாம் நாம் அறிந்ததே. நமக்கு யாரும் அதை நினைவூட்டத் தேவையில்லை. ஆயினும் நாம் அவற்றை மறந்து கடவுளை விட்டுப் பிரிகிறோம். எனவே பவுலைப் போல நாமும் கடவுள் நம் வாழ்வில் செய்த வல்ல செயல்களையெல்லாம் நினைவுகூர்ந்து அவருக்குகந்த வாழ்வை வாழ முயற்சிப்போம். 

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!
எம் வாழ்வில் நீர் ஆற்றிய மீட்புச் செயல்களையெல்லாம் எந்நாளும் நினைவில் கொண்டு உம் மக்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 7 =