இறைவனில் முழுமையைக் காண்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் நான்காம் திங்கள் 
I :தி ப :11:1-18
II :  தி பா: 41:2-3,42:3-4
III : யோவான் 10:1-10

இரு நண்பர்கள் நீண்ட காலம் கழித்து தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.அப்போது ஒருவர் மிகவும் விரக்தியாக "வாழ்க்கையில் எனக்கு எல்லாம் இருக்கிறது. பணம், வசதி, சொந்தங்கள், நண்பர்கள், வீடு, சொத்து என எல்லாம் நிறைவாக இருந்தாலும் எனக்குள் ஏதோ குறைவுபடுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறேன். சற்று நின்று திரும்பிப் பார்த்தால் எல்லாம் வெறுமையே. " என்று கூறிமுடித்தார். மற்றவர் அந்த நண்பரிடம் ஒரு கேள்வி கேட்டார். "நீ கடவுளோடும், குடும்பத்தோடும், சக மனிதர்களோடும் சாதாரணமாக அமைதியாக நேரம் செலவழித்து எத்தனை நாட்கள் ஆகிறது? " என்பதுதான் அக்கேள்வி. அதற்கு விரக்தியிலிருந்த மனிதனால் எப்பதிலும் தர இயலவில்லை. " முதலில் கோவிலுக்குப் போய் ஆண்டவரோடு இரு.பின் வீட்டில் அனைவரோடும் இரு. சந்திக்கும் சக மனிதர்களோடு உறவோடும் உணர்வோடும் இரு. அப்போது முழுமையை உணர ஆரம்பிப்பாய் "என்று அறிவுரை கூறினார் மற்றவர்.

முழுமை, நிறைவு நாம் அனைவரும் எதிர்பார்ப்பது.பகுதியாகவோ அல்லது வெறுமையாகவோ நாம் எதையும் பெற விரும்பவில்லை. பொருட்களுக்கே அவ்வாறு என்றால் வாழ்க்கைக்கு?  ......ஆனால் நாம் வாழ்க்கையைக் குறித்து அக்கறை கொள்வதே இல்லை. இன்றைய நற்செய்தியில் "நான் ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் " (யோவான் 10:10) என இயேசு கூறுகிறார். அப்படியென்றால் முழுமையான நிறைவான வாழ்வு தன்னிடம் இருக்கிறது என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார்.

நிறைவாழ்வைப் பெற நமக்கு ஆதாரமாக, முன்மாதிரியாக, வழிகாட்டியாக இயேசு திகழ்கிறார். தந்தையிடமிருந்து நிறைவாழ்வை நமக்குப் பெற்றுத்தரும் வாய்க்காலாக இயேசு விளங்குகிறார். இயேசு கூறும் நிறைவாழ்வு என்ன என நாம் சற்று அலசிப்பார்ப்போம்.

*தந்தையோடும் இயேசுவோடும் கொண்டுள்ள அன்பு உறவு.  இதுதான் நிறைவான வாழ்வுக்கான அடித்தளம்.

கடவுளோடு உள்ள உறவை பிறரோடு பகிர்வது.இதுதான் நிறைவாழ்வு நிலைப்பதற்கான வழி.

 இந்த உறவின் நிலைப்பட்டோடு நிகழ்காலத்தை ஏற்றுக்கொண்டு பாவத்தையும் உலகச் கவர்ச்சிகளையும் தவிர்த்து வாழ்தல். இதுதான் நிறைவான வாழ்விற்கு நாம் சேர்க்கும் பலம். இவையனைத்தையும் நாம் செய்ய நமக்கு ஆற்றலும் ஆதாரமுமாய் இருப்பது கடவுள் ஒருவரே.

ஆம் அன்புக்குரியவர்களே வாழ்வின் முழுமையை இறைவனை அன்றி வேறு யாராலும் தரமுடியாது.  எனவே குறைவானவற்றை தேடிச் செல்லாமல் நிறைவானவற்றை வழங்கும் கடவுளை நாடிச்செல்ல முடிவெடுப்போம். அந்த முழுமை நம்மூலம் மற்றவருக்கும் பாய்ந்து செல்லட்டும்.

இறைவேண்டல் 
வாழ்வின் முழுமையே இறைவா!
எங்கள் வாழ்வின் நிறைவை உம்மிடம் பெற குறைவானவற்றை விடுத்து உம்மை நாடி வர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 0 =