வாழ்வுதரும் வார்த்தைகளைக் கூறும் இயேசுவிடம் செல்கிறேனா நான்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் மூன்றாம் சனி 
I :தி ப :9:31-42
II :  தி பா:115:12-17
III : யோவான் 6:60-69

பொதுவாக நாம் மகிழ்ச்சியைத் தேடியோ அல்லது மன அமைதியைத் தேடியோ நமக்குப் பிடித்தவர்களை அணுகிச் செல்கிறோம். அவர்கள் கூறும் வார்த்தைகளும் உடனிருப்பும் நமக்கு நிச்சயம் ஒருவித மன அமைதியையும் உற்சாகத்தையும் தருவது உண்டு. ஆனாலும் சில வேளைகளில் அவர்களின் வார்த்தைகளிலோ அல்லது உடனிருப்பிலோ நாம் நிறைவு கொள்வது கிடையாது. குறிப்பாக நாம் அதிகமான துயரத்திலோ அல்லது குழப்பத்திலோ இருக்கும் போது எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் அல்லது வழிகாட்டியாக இருந்தாலும் நம்முடைய நிலையிலிருந்து நம்மால் எழுந்து வர இயலுவதில்லை. அதுதான் எதார்த்தம். 
ஆனால் நாம் தனியாக ஆழ்ந்த செபத்திலோ அல்லது அமைதியிலோ கடவுளின் துணையோடு நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் போது நமக்கு ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் தோன்றுவதுண்டு. வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதுண்டு. ஏனென்றால் செபத்திலும் அமைதியிலும் நம் மனதில் எழும் ஆறுதல் மொழிகளைக் கூறுவது நம் ஆண்டவரே. இதை நாம் எந்த அளவுக்கு உணர்கிறோமோ அந்த அளவு நமது வாழ்வு உயிரோட்டம் பெறும்.மனிதர்களைத் தேடிச் செல்வது தவறல்ல. ஆனால் வாழ்வுதரும் கடவுளை நாம் தேடிச்செல்வது அதைவிட அவசியமல்லவா!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் போதனையைக் கேட்டு பலர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். அப்போது இயேசு திருத்தூதர்களிடம் "நீங்களும் போகப்போகிறீர்களா? " என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு பேதுரு மிக அழகான ஒரு பதிலைக் கொடுத்தார்.  " ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்.  நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! " என்று.எத்துணை ஆழமான வார்த்தைகள் இவை.

இயேசுவைப் பின்பற்றிய மற்ற மனிதர்களை விட சீடர்கள் இயேசுவின் போதனைகளைப் புரிந்து கொள்வதில் சற்று பின்தங்கி இருந்தனர் என்றே கூறலாம். அப்படியிருக்க இயேசு தன் உடலை உணவாகத் தருகிறேன் என்று கூறியதை அவர்கள் நிச்சயம் புரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பிறரைவிட அதிக குழப்பத்தில் இருந்திருப்பார்கள். அந்த நிலையிலும் அவர்கள் இயேசுவைப் பிரியாமல் அவரைத் தொடரவும் அவருடைய வார்த்தைகளைத் தேடவும் உறுதியுடன் இருந்தனர் என்பதை இவ்வார்த்தைகள் நமக்கு மிகத்தெளிவாகக் கூறுகின்றன. 

நாம் நம்முடைய வாழ்க்கையை அலசிப் பார்ப்போம். யாரைத் தேடிச் செல்கிறோம்? நம் வாழ்க்கையின் எல்லாவிதமானப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆண்டவருடைய வார்த்தையில் உள்ளது. திருவிவிலியம் நம்மை வழிநடத்தும் சிறந்த வழிகாட்டி. சில வேளைகளில் கடினமாதாகத் தோன்றும்.புரிந்த கொள்ள இயலாமல் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் இருக்கும். ஆனாலும் அவ்வார்த்தைகளை உள்வாங்கி இயேசுவைத் தொடர நான் தயாரா ? அமைதியாக கடவுளோடு நிலைத்திருந்து அவருடைய உயிரளிக்கும்  வார்த்தைகளை கேட்கத் தயாரா?அல்லது மனிதர்களின் வார்த்தைகளையும் உலகத்தின் வழிகளையும் தேடிச் செல்கிறேனா?  சிந்திப்போம். ஆண்டவரே உம்மையன்றி நான் யாரைத் தேடிச் செல்வேன் என அறிக்கையிட்டு அவருடைய வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா! உம் வார்த்தையால் உயிரளிப்பவரே!  உம்மையே எல்லாச்சூழ்நிலையிலும் நான் பின்தொடர அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 6 =