மறுபடியும் பிறக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் இரண்டாம் செவ்வாய் 
I: தி ப:4: 32-37
II :  தி பா:93: 1ab. 1c-2. 5
III: யோவான் 3: 7-15

இப்போது இளைஞர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு வாக்கியம் " மறுபடியும் முதல்ல இருந்தா " என்பதுதான். சிரிப்பிற்குரிய வசனமாக நாம் அதைக் கருதினாலும் இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்லும் பாடத்தை நாம் சிந்திக்கத் தவறி இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் சில சமயங்களில் நாம் தடம்மாறிப் போகும்போது மீண்டும் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து பயணத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆனால் பலமுறை நம் ஆரம்பத்திற்குத் திரும்பிச் சென்று மீண்டும் புதிதாய்த் தொடங்குவது வாழ்க்கைக்கு சிறப்பானதாக அமையும். 

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு நிக்கோதேமிடம் " நீங்கள் மறுடியும் பிறக்க வேண்டும்"எனக் கூறுகின்றார்.மேலும் அப்பிறப்பு தூயஆவியால் நிகழ வேண்டுமெனக் கூறுகிறார் அவர். தொடக்கத்தில் கடவுள் மண்ணால் மனிதனைச் செய்து தன் ஆவியை ஊதி மனிதனுக்கு உயிர்கொடுத்ததாக நாம் தொடக்க நூலில் வாசிக்கிறோம். "அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்."(தொ நூ 2:7).இங்கே கடவுளின் உயிர்மூச்சு என்பது தூய ஆவியேயன்றி வேறுயாருமில்லை. ஆக
 மனுகுலம் ஏற்கனவே பிறப்பு எடுத்தது தூய ஆவியால்தான். ஆனால் மனிதன் தன் வாழ்க்கையில் தேவையற்றவைகளுக்கு இடம் கொடுத்து தூய ஆவியை இழந்ததால் கடவுளின் அருளை இழந்தான் என மீட்பு வரலாறு நமக்கு மிகத் தெளிவாகக் கூறுகிறது. இந்நிலை மாறவே இயேசு மீண்டும் தூய ஆவியால் பிறக்க வேண்டும் என அழைக்கிறார். மறுபடியும் நம் மீட்புப் பயணத்தை ஆரம்பிப்பதற்கான அழைப்பு இதுவே.

தூய ஆவியால்  நாம் புதுப்பிறப்பு அடையும் போது நாம் கடவுளின் மூச்சைக் கொண்டிருக்கிறோம். அவரோடு இணைந்திருக்கிறோம். சக மனிதரோடும் இயற்கையோடும் இணைந்து உயிரோட்டமுள்ளவர்களாய் இருக்கிறோம். மண்ணுலகில் விண்ணுலகை நாம் படைக்கிறோம்.
இன்றைய முதல்வாசகம் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. பெந்தகொஸ்தே நாளில் தூய ஆவியால் மறுபடியும் பிறந்த சீடர்களின் வழிகாட்டுதலால் உருவான நம்பிக்கையாளர்கள் ஒரே உள்ளமும் உயிருமாய் இருந்தனர். அவர்களிடையே கடவுளின் ஆவி செயல்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் இருந்தது. 

அன்புக்குரியவர்களே திருஅவையின் உறுப்பினர்களாகிய நாமும் தூய ஆவியால் மீண்டும் பிறக்க வேண்டும்.மறுபடியும் நம் மீட்புப் பயணத்தைப் புதிதாய்த் தொடங்கவேண்டும். அப்போதுதான் நம்மாலும் விண்ணுலகு சார்ந்தவை பற்றி புரிந்துகொள்ள இயலும். கடவுளோடும் நம் அயலாரோடும் இயற்கையோடும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ முடியும். கடவுளின் ஆவியார் நம்மில் செயல்பட அனுபதிப்போம்.மறுபடியும் பிறந்து புதுப்படைப்பாவோம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா! உமது ஆவியால் நாங்கள் புதுப்பிறப்படைந்து திருஅவையின் மக்களாய் விண்ணுலகை நோக்கிப் பயணிக்க அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 4 =