நான் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியாக வாழ்கிறேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் இரண்டாம் திங்கள்
புனித மாற்கு நற்செய்தியாளர் விழா 
மு.வா: 1பேதுரு 5: 5b-14
ப.பா :  தி பா: 89: 1-2. 5-6. 15-16 
ந.வா: மாற்கு 16: 15-20

 நான் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியாக வாழ்கிறேனா? 

இன்று நம் தாய் திருஅவையானது நற்செய்தியாளரான புனித மாற்கு-ன் விழாவைக் கொண்டாடுகிறது. இவர் இயேசுவின் எழுபத்திரெண்டு சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இயேசு கெத்சமெனித் தோட்டத்தில் பிடிபட்ட போது தன் ஆடையைக்கூட பொருட்படுத்தாமல் களைந்துவிட்டு பயந்து  ஓடிய இளைஞன் எனவும் மரபு கூறுகிறது. நற்செய்தி அறிவிப்புப் பணியில் பேதுருவுக்கும், பவுலுக்கும் இவர் உறுதுணையாக இருந்துள்ளார் என பல்வேறு விவிலியச் சான்றுகள் கூறுகின்றன. மாற்கு நற்செய்திதான் முதன்முதலாக எழுதப்பட்ட இயேசுவின் வாழ்க்கை வரலாறை விளக்கும் நற்செய்திநூல். இவர் புறஇனத்தவருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க இந்நூலை எழுதியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் கிறிஸ்துவை நம்பியவர்களை துன்புறுத்தினர். நற்செய்தியை அறிவிக்கத் தடைவிதித்தனர். அத்தகைய சூழலிலேதான் துணிச்சலோடு இயேசுவை அனைவரும் அறியும் வண்ணம் மாற்கு நற்செய்தியை எழுதினார். இன்று அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் நற்செய்தியை அறிவிக்கின்றவர்களாக ஏன் நற்செய்தியாகவே மாற, வாழ, அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் விண்ணேற்றத்தின் முன் சீடர்களுக்கு ஒரு கட்டளையை  கொடுப்பதை வாசித்து தியானிக்கிறோம். " உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்." என்பதே அக்கட்டளை. படைப்பிற்கெல்லாம் என இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது வெறும் மனிதர்களை மட்டுமல்ல. எல்லா படைப்புக்களையும் தான். இயற்கையும், விலங்குகளும்  ,
பறவைகளும் அவர்களுக்கு சிகரமாய் உள்ள மனிதர்களும் என அனைத்தும் இதில் அடங்கும். புனித அந்தோணியார் மீன்களுக்கு நற்செய்தி அறிவித்தார் என மரபு கூறுகிறது. புனித அசிசியார் இறைவனின் படைப்புகளை தம் சகோதர சகோதரியாக எண்ணி கடவுளின் அன்பின் செய்தியை பறைசாற்றினார்.
அதைப்போலவே நாமும் எல்லாப் படைப்புகளுக்கும் நற்செய்தியாக விளங்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் கட்டளை. 

இயற்கை வளங்களான கடல், ஆறு போன்ற நீர்நிலைகளைக் காப்பது; மரங்களையும் காடுகளையும் மலைகளையும் அழிக்காமல் பாதுகாப்பது;விலங்குகள் பறைவைகள் இவற்றை துன்புறுத்தாமல் இருப்பது ; நம்முடைய சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு காற்றையும் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தாமல் வாழ்வது ; போன்ற இயற்கையைக் காக்கும் செயல்களை நாம் செய்வதால் இயற்கை முழுமைக்கும் நாம் நற்செய்தி அறிவிக்கிறோம். அந்நற்செய்தி வேறு ஒன்றுமில்லை கடவுள் தம் படைப்புப் பொருட்களை அன்புசெய்கிறார். அழகு படுத்துகிறார் என்பதுதான்.

இன்றைய முதல் வாசகம் சகமனிதர்களுக்கு நாம் எவ்வாறு நற்செய்தியாக வாழ்வது என்ற வழிமுறைகளைத் தருகிறது. 
*பிறரோடு பழகும் போது மனத்தாழ்மையோடு பழகவேண்டும்.
* பிறர் துன்பத்தில் உடனிருக்க வேண்டும்
*நம்பிக்கையோடு வாழ்ந்து பிறரையும் வலுப்படுத்த வேண்டும்
*பிறரோடு அன்பை அதிகமாகப் பரிமாற வேண்டும்.
இவை அனைத்துமே கிறிஸ்துவின் வாயிலாக கடவுள் நமக்கு வெளிப்படுத்திய அன்பின் நற்செய்தியாக நாம் வாழ்வதற்கான வழிகளே.

ஆம். அன்புக்குரியவர்களே, நற்செய்தியை அறிவிப்பது நம்முடைய கடமை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு நற்செய்தி அறிவிக்க பல வாய்ப்புகள் உள்ளன. பல ஊடகங்கள் உள்ளன. நாமும் பலவாறு நம் திருஅவையால் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.அவை அனைத்தையும் உள்வாங்கி சிந்தித்து நாம் வாழும் இடங்களிலுள்ள படைப்புகள் அனைத்திற்கும் நற்செய்தியாக மாற முயற்சி செய்வோம். நம்முடைய 
 சிந்தையும் சொல்லும் செயலும் வாழ்வும் நற்செய்தியை படைப்பு முழுமைக்கும் அறிவிக்க வரம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
நற்செய்தியின் நாயகனே இறைவா! புனித மாற்குவைப் போல, உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட சீடர்களைப்போல படைப்பிற்கெல்லாம் உம் அன்பின் நற்செய்தியைப் பறைசாற்ற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

1 + 11 =