Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் உயிர்ப்பு நம் புதுவாழ்வின் பிறப்பு! | குழந்தை இயேசு பாபு |
பாஸ்கா காலம்-உயிர்ப்பு ஞாயிறு
I: திப: 10:34, 37-43
II: தி.பா 118:1-2, 16-17, 22-23
III: கொலோ:3:1-4
IV :யோவான் : 20: 1-9
இன்று நாம் உயிர்ப்பு ஞாயிறைக் கொண்டாடி மகிழ்கிறோம். சிலுவையிலே அறையுண்டு மரித்த மெசியா மறைநூல் வாக்குகளின் நிறைவாய் உயிர்த்தெழுந்து உலகின் மீட்பைக் கொணர்ந்த தினம் இது. இன்றைய நாள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிக மிக முக்கியமான நாள். நாம் எத்தனையோ திருவிழாக்களை கொண்டாடினாலும் அனைத்திற்கும் மேலான திருநாள் இந்நாள் தான். ஏன் அனைத்து திருநாள்களும் இந்த புனிதமான நாளுக்கே நம்மை வழிநடத்துகின்றன என்று சொன்னால் மிகையாகாது. இயேசுவின் உயிர்ப்பு மனுகுலம் முழுமைக்கான உயிர்ப்பு. இப்பிரபஞ்சத்தின் புதுப்பிறப்பு. புது வாழ்வின் தொடக்கமும் இதுவே.
விதைக்கப்பட்ட இரண்டு விதைகள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனவாம். முதலாவது விதை " ஐயோ என்னை இப்படிப் புதைத்து விட்டார்களே. இந்த மண்ணிற்கடியில் காற்று இல்லை. வெப்பம் அதிகமாக இருக்கிறது. இந்த மண்ணும் எனக்கு பாரமாக இருக்கிறது. என்னை கொல்லுகிறார்களே" என்றதாம் . இரண்டாவது விதையோ " உன்னைப் போலவே தான் நானும் துன்புறுகிறேன். ஆனால் சகித்துக்கொள்கிறேன். ஏன் தெரியுமா? நான் புது உரு எடுக்கப்போகிறேன். விதையாக இருக்கும் நான் செடியாக பூவாக காயாக கனியாக வித்தியாசமான புதிய வாழ்வை வாழப்போகிறேன். " என்றதாம்.முதலாம் விதை " அதெல்லாம் எங்கு நடக்கும். எனக்கு சாவு நிச்சயம் " என்று சொன்னதாம்.சொன்னபடியே முதல்விதை மடிந்தது. துன்பங்களை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு காத்திருந்த இரண்டாம் விதையும் மடிந்தது. ஆனால் செடியாக பூவாக காயாக கனியாக புது உரு எடுத்தது.
இரண்டாம் விதையை இயேசுவோடு நாம் ஒப்பிடலாம். நேற்றைய நாளில் தான் இயேசுவின் துன்பங்களையும் பாடுகளையும் கண்ணீர் மல்க நாம் தியானித்தோம். அத்தனை துன்பங்களையும் இயேசு கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொண்டாரா? நிர்பந்தப்படுத்தப்பட்டாரா? இல்லை. தாமாக ஏற்றுக்கொட்டடார். தன்முன்னே காத்திருக்கும் மக்களின் மீட்பு எனும் மகிழ்ச்சியை அடைய அனைத்தையும் தாமாக ஏற்றுக்கொண்டார். அதன் விளைவு என்ன? மக்களின் மீட்பராய் உயிர்த்து எழுந்தார். போதகராக, வல்ல செயல் செய்பவராக, உணவு அளிப்பவராக, பாவிகளின் நண்பனாக, இறுதி தருணங்களில் குற்றவாளியாக புதைக்கப்பட்ட அவர் மறைநூலின் நிறைவாக, மீட்பராக, உலகனைத்தின் ஆண்டவராக, புது வாழ்வின் வெளிச்சமாக முளைத்து எழுந்தார்.
இன்றைய நற்செய்தியில் மகதலா மரியா துக்கம் கொண்டாட கல்லறைக்கு சென்றபோது கல்லறையை மூடியிருந்த கல் விலக்கப்பட்டிருந்ததைக் கண்டார் என நாம் வாசிக்கிறோம். கல்லறையை கல் மூடியிருந்த போது அந்தக் கல்லறைக்குள்ளே இருளும் புழுக்கமும் துர்நாற்றமும் இருந்திருக்கும். இவை அனைத்தும் இயேசு என்னும் புதுவாழ்வை தன்னகத்தே அடைத்து வைத்திருக்க இயலவில்லை. எவ்வாறு விதை முளைத்து எழ இறுக்கமான மண்கூட வழிவிட்டுக்கொடுக்கிறதோ, அவ்வாறு கல்லறையின் வாயில் புதுவாழ்வுக்காய் திறந்தது. இப்போது அங்கே புழுக்கமோ இருளோ துர்நாற்றமோ இல்லை. கல்லறை வெற்றிடமானது. உலகத்தை புதுவாழ்வு நிரப்பியது.
ஆம் அன்புக்குரியவர்களே
இயேசுவின் உயிர்ப்பு நமக்கு சொல்வது இதுதான். வாழ்வில் நம்மை பூமிக்கடியில் புதைப்பது போல பல அனுபவங்கள் வரலாம். மனமெல்லாம் இருளாகலாம். மூச்சுவிட முடியாத அளவுக்கு வாழ்வில் நெருக்கடியும் புழுக்கங்களும் எழலாம். பயம், வெறுப்பு, பகை, பலவீனம் அனைத்தும் நம் வாழ்வை துர்நாற்றமுடையதாய் மாற்றலாம். ஆனால் இவையனைத்தையும் நம் மனதிலே போட்டுக்கொண்டு புழுங்கிக்கொண்டிருந்தால் புதுவாழ்வை நாம் காண இயலாது.மாறாக இயேசுவைக் கொண்டிருந்த கல்லறையின் கல் விலக்கப்பட்டது போல நம் மனதைத் திறந்து தீயவை வெளியேற அனுமதிக்க வேண்டும். இயேசுவின் ஒளி நம் உள் நுழையட்டும். அவரே நம் சுவாசமாகட்டும். அப்போதுதான் நம் வாழ்வு புதுமையாகும். இயேசுவின் உயிர்ப்பு நம் புதுவாழ்வின் பிறப்பு என்பதை உணர்ந்து உயிர்ப்பின் சாட்சிகளாய் துன்பங்களைத் தாண்டி முளைத்து எழுவோம்.
இறைவேண்டல்
புதுவாழ்வின் ஊற்றே இறைவா!
முளைத்து எழும் விதைகளைப்போல, எம் வாழ்வில் ஏற்படும் அனைத்தையும் நம்பிக்கையோடு கடந்து புதுவாழ்வை பெற்று உயிர்ப்பின் சாட்சிகளாய் வாழ அருள்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம்
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment