ஆன்ம அடிமைத் தனத்திலிருந்து மீட்கும் புதிய -அன்பு பாஸ்கா! | குழந்தை இயேசு பாபு | MaundyThursday


புனித வியாழன்
I : வி.ப 12: 1-8,11-14
II : தி.பா   115:12-13,15-18
III : 1 கொரி 11:23-26
IV : யோவான் 13:1-15

ஒரு மனிதன் தொடர்ந்து குடித்து வந்தான். தன் குடும்பத் தேவைகளை கவனிப்பதே இல்லை. மனைவி பிள்ளைகள் மிகவும் துன்புற்றனர். ஒருமுறை பக்கத்துவீட்டு பெரியவர் இதைப்பற்றி விசாரித்த போது "நான்  மற்றவர்களைப் போல் இல்லை. மனைவி பிள்ளைகளை அதிகம் நேசிக்கிறேன். நான் குடித்தாலும் யாரையும் அடிப்பது இல்லை. மாறாக அமைதியாகப் படுத்து உறங்கிவிடுவேன். தொந்தரவு செய்ய மாட்டேன். அதனால் நான் ஒன்றும் பெரிய பாவி இல்லை " என்றாராம். அதற்கு அப்பெரியவர் "இதனால் மட்டும் உன் தவறை ஞாயப்படுத்த முடியாது. உன் மனைவி பிள்ளைகளை நீ நேசிக்கவே இல்லை. உண்மையில் நீ நேசித்திருந்தால் அவர்களை வறுமையில் விட்டிருக்க மாட்டாய் "என்று கூறி " உனக்கு உண்மையான அன்பு இருந்தால் உன் குடும்பத்தை கவனி. அவர்களுக்காக உன் உடலையும் நேரத்தையும் உன் குடிப்பழக்கத்தையும் தியாகம் செய் " எனச் சொல்லிவிட்டு சென்றாராம்.அவ்வார்த்தைகளை ஆழமாகச் சிந்தித்த மனிதன் அன்புக்காக தன் குடிப்பழக்கத்தை விட்டான். தன் குடும்பத்திற்காக தன்னை முழுமைகக் கொடுத்தான். குடி என்னும் அடிமைத்தனத்திலிருந்து அவனும் வறுமை எனும் அடிமைத்தனத்திலிருந்து அவன் குடும்பமும் விடுதலை அடைந்தது. 

இன்று புனித வியாழன். இன்றைய நாளில் நாம் இயேசு தன் சீடர்களோடு பாஸ்கா உணவு அருந்திய நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.இந்நாளில் இயேசு தன்னையே தாழ்த்தி தலைவன் என்ற நிலையிலிருந்து இறங்கித் தன் சீடர்களின் பாதங்களைக்  கழுவும் நிகழ்வையும் நாம் நினைவு கூறுகிறோம். மேலும் இயேசு "இது என் உடல்.இது என் இரத்தம். இதைப் பெற்று உண்ணுங்கள்,பருகுங்கள் " என்று கூறி என்றும் அழியா தன் உடனிருப்பாக  நற்கருணையையும், தன் நினைவாக பலியை நிறைவேற்ற குருத்துவத்தையும்  ஏற்படுத்திய நாளிது.

இவ்விறுதி உணவை நாம் இயேசுவின் இறுதி பாஸ்கா விழா எனக் கூறுவது சிறந்தது. அதைவிட மேலாக இயேசு ஏற்படுத்திய புதிய பாஸ்கா விழா எனக் கூறுவது  சிறந்ததாகவும் இருக்கும். பழைய ஏற்பாட்டில் முதன்முதலில் கொண்டாடப்பட்ட பாஸ்கா விழாவானது இஸ்ரயேலை யாவே இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கும் அவர்கள் ஒவ்வொருநாளும்
அடிமைத்தனத்தினால்  அனுபவித்து வந்த உடல்ரீதியான இறப்பிலிருந்து விடுதலை அளிப்பதற்காகவும் கொண்டாடப்பட்ட பாஸ்கா.ஆனால் இயேசு ஏற்படுத்திய இந்த புதிய பாஸ்கா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும்  அதனால் நாம் சந்திக்கின்ற ஆன்மீக இறப்பினின்றும் நம்மைக் காக்க இறைமகன் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட பாஸ்கா. இது அன்பின் பாஸ்கா.

இந்த  பாஸ்காவிலே 
நம் ஆண்டவர் இயேசு அன்பின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி தற்பெருமை, வெறுப்பு, அடக்குமுறை போன்ற பாவ அடிமைத்தனங்களில் நாம் வீழ்ந்து விடாத படிக்கு நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். தம் உடலையும் இரத்தத்தையும் கையளித்து சுய நலம் என்ற அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க நம்மை பிறர்பணியில் பயன்படுத்த வேண்டும் என்ற வழியைக் கொடுத்துள்ளார். அத்தோடு புதிய கட்டளையாக அன்புக் கட்டளையை நமக்குத் தந்து அன்பு இருந்தால் எல்லாவித. அடிமைத்தனங்களிலிருந்தும் நாம் விடுதலை பெறலாம் என்பதை நமக்கு எண்பித்துக் காட்டி புதிய அன்பின் பாஸ்காவை இயேசு ஏற்படுத்தியுள்ளார்.

பிறரை அன்புடனும் கரிசனையுடனும் சிரித்த முகத்துடனும் நோக்குதல், தனிமையாய் இருப்பபவரிடம் சென்று சில மணித்துளிகள் உரையாடுதல், தாங்கித் தள்ளாடி நடப்பவர்களுக்கு கரம் கொடுத்து உதவுதல் , இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பகிர்ந்து கொடுத்தல், விழுந்தவரைத் தூக்கி விடுதல், தெரிந்தே நமக்கெதிராய் தீமை செய்பவர்களையும், நம்ப வைத்து ஏமாற்றுபவர்களையும் மன்னித்தல், பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பாசமாய்ப் பழகுதல்,பணிவிடை பெறுபவர்களாக அல்லாமல் பணிவிடை புரிபவர்களாக வாழ்தல் போன்ற போன்ற சின்னச் சின்னக் காரியங்கள் கூட இயேசு ஏற்படுத்திய அன்பின் பாஸ்காவை பிரதிபலிக்கின்றன. இவை பிறருக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் நாம் பாவம் செய்து அடிமைத்தனத்தில் விழந்து விடாமல் காக்கின்றன. கடவுளோடும் பிறரோடும் உள்ள உறவைப் புதுப்பித்து நம் ஆன்மாவை இறப்பினின்று காக்கின்றன. 

எனவே இயேசு ஏற்படுத்திய இவ்வன்பு பாஸ்காவை, அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும் பாஸ்காவை நமது வாழ்வாக்கி அவரின் நினைவாக மற்றவருக்கும் செய்வோம். அன்பை பிறருக்கு வழங்கி நம் ஆன்மாவை இறப்பினின்று காத்துக்கொள்வோம். அவரது உடலையும் இரத்தத்தையும் அன்போடு நமக்கு கையளித்தது போல அன்புப் பணிக்காய் நம்மை கையளித்து பணிசெய்ய வரம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பே உருவான இறைவா! உம் திருமகன் இயேசு ஏற்படுத்திய அன்பு பாஸ்காவை நாங்களும் வாழ்வாக்கி எல்லாவித பாவ அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை பெற வரமருளும். ஆமென்.

 

அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு
அருட்பணி.குழந்தை இயேசு பாபு
இணைப்பங்குப்பணியாளர்
த.சூசையப்பர் பட்டணம் 
தங்கச்சி மடம்

Add new comment

10 + 1 =