இறைவனை நம் அழைத்தல் வாழ்வால் மாட்சிப்படுத்தத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


புனித வாரம் - செவ்வாய்
I: எசாயா: 49: 1-6
II :  தி பா: 71: 1-2. 3-4. 5-6. 15,17 
III : யோவா: 13: 21-33, 36-38

வேலைக்கு செல்லும் பெண் ஒருவர் மிகவும் களைப்பாய் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அச்சயமம் அவருடைய உடன் பணியாளர் அப்பெண்ணை அணுகி சோர்வாக இருப்பதற்கான காரணம் என்னவென வினவினார். அப்பெண்ணும் முந்தைய நாள் தன் வீட்டில் அதிக வேலை இருந்ததாகவும், அதை சரியாக முடிக்க முடியாததால் சிறு பிரச்சனை மூண்டதாகவும் கூறினார். தன்னை வீட்டிலுள்ளவர்கள் குற்றப்படுத்தியதாக புலம்பினார். உடன் பணியாளரோ, " வீட்டிற்காகத்தானே உழைக்கிறாய். அங்கேயும் வேலை, இங்கேயும் வேலை. வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து வீட்டு கடமைகளை செய். அப்போது பிரச்சனைகளைக் குறைக்கலாம் " எனக் கூறினார். அதற்கு அந்த பெண் தான் வேலைக்கு வருவதே வீட்டுச் சூழ்நிலைக்காகத்தான் என்று கூறிவிட்டு " என் கணவனின் சுமையைக் குறைக்க அவரோடு ஒத்துழைப்பது என் கடமை. வீட்டிற்கு மருமகளாக அல்ல மகளாக இருக்க வேண்டியதுதான் எனக்கான அழைப்பு. கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு பொறுமையாகப் போவது என் பெற்றோருக்கு நான் சேர்க்கும் பெருமை. எல்லாம் ஒருநாள் மாறும் " என்று கூறி தன் வேலையை மீண்டும் தொடர்ந்தார்.

ஆம் அன்புக்குரியர்களே. நமக்குக் கொடுக்கப்பட்ட அழைத்தல் வாழ்வு, நம்மிடம் எதிர்பார்க்கின்ற கடமைகளைச் செய்யும் போது  பல வலிகளைக் கடந்து செல்ல நேரிடும் என்பதே வாழ்வின் எதார்த்தம். ஆனால் அவ்வேதனைகளை எல்லாம் நாம் பொறுமையோடு சகித்துக்கொண்டு நிறைவேற்றிய பின் அதைத் திரும்பிப் பார்த்தால் நாமடைந்த வலிகள் நாம் அனுபவித்த துன்பங்கள் நாம் சந்தித்த சவால்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதது போல் தோன்றும். நம்மையே நாம் பெருமிதமாக எண்ணத்தோன்றும். 
இது எல்லாருடைய வாழ்விலும் நடைபெறுகிறது.அதற்காகத் தான் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவினுடைய இந்த மனநிலையை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அவருடைய இறுதி நாட்கள் நெருங்குவதை இயேசு உணர்கிறார். மனம் கலங்குகிறார். தன்னோடு வாழ்ந்த இருவர் தன்னைக் காட்டிக்கொடுக்கவும், மறுதலிக்கவும் தயாராய் இருப்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். ஆயினும் தந்தை தனக்குக் கொடுத்த அழைப்பை நிறைவேற்ற வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்ததால் எல்லா சவால்களையும் வலிகளையும் எதிர்கொள்ள தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் படுத்திக் கொண்டார்.அந்த நொடியிலும் தன்னுடைய அழைத்தல் வாழ்வின் கடமைகளை நிறைவேற்றி தந்தையை தான் மாட்சிப்படுத்தப் போவதை எண்ணி ஆனந்தம் அடைகிறார் இயேசு. அத்தோடு தன்னை கடவுள் தாமே மாட்சிப்படுத்துவார் என நம்பிக்கையோடு இருக்கிறார்.

நம் வாழ்வு ஒரு அழைப்பு. நம் பணி ஒரு அழைப்பு. நாம் பிறக்கும் முன்னே கடவுள் நம் வாழ்வு இப்படித்தான் இருக்கப்போகிறது என  திட்டம் தீட்டிவிட்டார் என்பதே நமது நம்பிக்கை. அவ்வாறெனில் அந்த அழைப்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்றினால்தான் தந்தைக்கும் பெருமை. நமக்கும் பெருமை. நம்மோடு உள்ள அனைவருக்கும் பெருமை. ஆனால் அதை அடைய நாம் பல வலிகளையும் சோதனைகளையும் மறுதலிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். அதற்கான மனஉறுதியை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டு தந்தையை மாட்ப்படுத்தத் தயாராவோம். அவரும் நம்மை நிச்சயம் மாட்சிப்படுத்துவார்.

 இறைவேண்டல் 
எம்மை அழைத்த இறைவா! எம் அழைத்தல் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 0 =