ஆண்டவர் பெயரால் சென்று பேறுபெற்றவராவோமா! | குழந்தைஇயேசு பாபு | SundayReflection


தவக்காலம் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு
I: எசாயா50:4-7
II :  தி பா 21:8-9,17-20,23-24
III :பிலி2:6-11
IV : லூக் 21:8-9,17-20,23-24

ஒரு மறைமாவட்டத்திலே புதிய ஆயருக்கான திருவருட்பொழிவு திருப்பலி நடைபெற இருந்தது. அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும் பல்வேறு பங்குத் தளங்களிலிருந்து இறைமக்கள் திரண்டு இருக்க ஆயராக திருநிலைப்படுத்தப்பட இருந்த குருவை தேரிலே அமரவைத்து அழைத்து வந்தனர். அவரைப்பற்றி  புகழ்ந்து முன்னுரை எல்லாம் கொடுத்த பின்   திருப்பலி தொடங்கி  நடைபெற்றுக்கொண்டிருந்தது.மறையுரை வழங்க வந்த ஆயர் புதிய ஆயரை வரவேற்றவிதத்தை மேற்கோள் காட்டி " வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட ஆடு " என அவ்வரவேற்பை ஒப்புமைப் படுத்தினார். அனைவரும் சிரித்தனர் அதைக் கேட்டு. ஆனால் அதில் எவ்வளவு பெரிய அர்த்தம் நிறைந்துள்ளது என்பதை உணர முடிந்தது. ஆயர் என்பவர் எப்போதும் கொண்டாடப்படுவதில்லை . அவர் எவ்வளவு சவால்க ளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்ற உண்மையை அவ்வார்த்தைகள் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றன. 

அன்புக்குரியவர்களே இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளின் ஞாயிறை கொண்டாடுகிறோம். குருத்துக்களை ஏந்தி ஓசன்னா பாடி இயேசுவை அரசரை போல வரவேற்று " ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் " என மக்கள் கோஷம் எழுப்பிய நிகழ்வை நாமும் இன்று நினைவு கூறுகிறோம். அந்த வரவேற்புகளும் கோஷங்களும் எதற்காக என்பதை அடுத்த சிலதினங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதுதான் ஆண்டவரின் பாடுகள். 

பின் ஏன் ஆண்டவரின் பெயரால் வருகிறவர் பேறுபெற்றவர் என்ற முழக்கம் என நாம் யோசிக்கலாம். நிச்சயமாக ஆண்டவர் பெயரால் நாம் செல்கின்ற போது நாம் பேறுபெற்றவர்களே. ஆனால் அந்த பேறுபெற்ற நிலை நமக்கு இம்மையிலோ அல்லது உடனேயோ கிடைப்பதில்லை. ஏனெனில் ஆண்டவரின் பெயரால் செல்வது சற்று சவாலான காரியமே. மத்தேயுவின் மலைப்பொழிவில் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!" என்று.
 மேலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைத் தொடர்ந்த எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்ட சீடருக்கு " 
இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." மாற்கு 10:30 கூறுகிறார். ஆகவே ஆண்டவர் பெயரால் செல்லும் போது நாம் அடையப்போகின்ற பேறுபெற்ற நிலைக்கு முன்னோடி நமக்கு கிடைக்கும் துன்ப துயரங்களே. 

பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து கடவுளால் அனுப்பட்ட அத்தனைபேறும் பற்பல இன்னல்களுக்கு ஆளாயினர். நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் என எவரும் வாழ்கின்ற காலத்தில் நற்சுகத்தை அனுபவித்ததில்லை. காரணம் அவர்கள் ஆண்டவரின் பெயரால் நீதியையும் நேர்மையையும் அன்பையும் அமைதியையும் எடுத்துச்சென்றனர். இவற்றை எப்போதுமே மக்கள் வரவேற்றதில்லை. சுயநலமும் பாவமும் பலரின் கண்களை மறைத்தன. அதேவரிசையில் இயேசுவும் சென்றார் ஆண்டவர் பெயரால். அவர் கொண்டுவந்த அமைதி மகிழ்ச்சி அன்பு சமாதானம் சமத்துவம் பலருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் சிலருக்கு நடுக்கத்தைத் தந்தது. எனவே அவருக்கு கிடைத்ததெல்லாம் பாடுகளே. அப்பாடுகள் தான் அவரை பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச் சென்றது.

அதேபோல நாமும் ஆண்டவர் பெயரால் அன்பையும் அமைதியையும் சமத்துவத்தையும் விதைக்கப் புறப்பட்டால் நமக்கும் கிடைப்பது இன்னல்களே. ஆனால் இந்த இன்னல்களும் துயர்களும்தான் நம்மை பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச்செல்லும்.எனவே இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் நாம் ஆண்டவரின் பெயராலேயே அவர் அத்தனை துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பதையும் அதே ஆண்டவரின் பெயரால் அவர் பேறுபெற்றவரானார் என்பதையும் நினைவு கூர்வோம். நாமும் ஆண்டவர் பெயரால் செல்லும் போது நமக்கு இன்னல்களோடு கூட ஆசியும் உண்டு என்ற மனநிலையோடு, துணிந்து ஆண்டவரின் பெயரால் அன்பையும் நீதியையும் சமத்துவத்தையும் எடுத்துச்செல்லும் கருவிகளாக மாற முயற்சிப்போம். அத்தோடு கூட ஆண்டவரின் பெயரால் நம்மிடம் வருபவர்களை நல்ல மனநிலையோடு ஏற்று அவர்களுக்கு எவ்வித இன்னல்களையும் கொடுக்காத மக்களாய் நாம் வாழவும் முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல் 

அன்பு இறைவா!  உமது பெயரால் உலகெங்கும் செல்ல ஆசிக்கும் எமக்கு இன்னல்களை இயேசுவைப் போல ஏற்க வரம் தாரும். அதன் மூலம் நாங்கள் ஆசி பெறுவோமாக ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 3 =