சிதறிய மக்களை கடவுளோடு இணைக்கும் பாலங்களா நாம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -ஐந்தாம் சனி
I : எசேக்கியேல்  37:21-28
II :  எரேமியா 31:10-13
III I: யோவான்: 11:45-56

தெருவிலே ஒரே சண்டை. இரு குடும்ங்களுக்கிடையே  கடும் பிரச்சனையானது. அப்போது சுற்றியிருந்த மக்களை ஒரு பெரியவர் கவனித்துக்கொண்டிருந்தார். பலரும் சூழ்ந்திருந்து அச்சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சிலருக்கு அது வேடிக்கையாக பொழுபோக்காக மாறியது. சிலருக்கு பேசிமகிழ  செய்தியாக அது மாறியது.சிலர் தங்கள் வார்த்தைகளால்  தூண்டிவிட்டு பிரச்சனையை பெரிதாக்கினர்.ஒருசிலர் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இன்னும் ஒருசிலர் யார் எப்படி நமக்கென்ன? என்ற மனநிலையில் இருந்தனர். இதைக் கண்ட அப்பெரியவர் மக்களின் சிதறுண்ட மனநிலையைக் கண்டு வருந்தி யார்தான் இவர்களை இணைக்கப்போகிறார்களோ?  என தனக்குள் வருந்திக் கொண்டிருந்தார். 

இன்றைய இரு வாசகங்களும் கடவுள் சிதறிக் கிடக்கும் தன் மக்களை தன்னோடு இணைக்கின்ற பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நமக்கு விளக்குகிறது.பாவத்தாலும் பிரிவினைகளாலும் கடவுளைவிட்டு வெகுதூரம் சிதறிப்போன மக்களை தேடிச்சென்று தன்னோடு சேர்த்து உடன்படிக்கை செய்துகொள்கிறார் என்ற கருத்தைக் கூறுகிறது.

நற்செய்தி வாசகமும் இயேசு மக்களை கடவுளோடு இணைக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உரோமை அரசின் ஆதிக்கத்தால் மட்டும் மக்கள் சிதறுண்டு போகவில்லை. பரிசேயர் சதுசேயர் மறைநூல் அறிஞர்களின் தவறான சட்ட திட்டங்களாலும், தங்களுடைய சொந்த பலவீனங்களாலும் தங்களுக்குள்ளும் கடவுளைவிட்டும் சிதறி தூரமாக வாழ்ந்து வந்தனர் யூத மக்கள். அவர்களை ஒன்று சேர்க்கவே நம் ஆண்டவர் இயேசு போதனைகளையும் வல்ல செயல்களையும் செய்தார். இறைவார்த்தையை எடுத்துரைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக பாவிகளை மன்னித்து ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சீரமைத்தார்.

நாமும் பல வகையில் சிதறுண்ட மக்களாய் வாழ்கிறோம். பாவத்தால், அடக்கு முறைகளால், பலவித வேறுபாடுகளால், அன்பின்மையால், ஆழமான ஆன்மீகமின்மையால் சிதறுண்டு போயிருக்கிறோம். நம்மையும் மீட்டு ஒன்று சேர்த்து தன் மக்களாக மாற்றவே இறைவன் விரும்புகிறார். நம்மையும் இயேசுவைப்போல சிதறுண்டவர்களை அவரோடு இணைக்கும் பாலங்களாக வாழ அழைக்கிறார். எனவே கடவுள் நம்மைத் தேடிவரும் போது அவரருகே செல்லவும் நம் சகோதர சகோதரிகளை கடவுளோடு இணைக்க இயேசுவைப்போல பணிசெய்யவும் தயாராவோம்.

 இறைவேண்டல் 
நல்ல ஆயனே இறைவா! ஆயன் மந்தையை கூட்டிச் சேர்ப்பதுபோல எம்மை உம் மந்தையில் ஒன்றாகச் சேர்த்து எம்மையும் இணைப்புப் பாலங்களாக மாற்றியருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 6 =