தொடர்ந்து நற்செயல்கள் புரியத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு |Daily Reflection


தவக்காலம் -ஐந்தாம் வெள்ளி
I: எரேமியா 20:10-13
II :  திபா 17:2-7
III : யோவான்: 10:31-42

 தொடர்ந்து நற்செயல்கள் புரியத் தயாரா! 

பழமிருக்கும் மரம்தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். எந்த மரம் அதிகமான சுவையான கனிகளைத் தருகிறதோ அந்த மரத்திலிருந்து கனிகளைப் பெற பலர் கற்களை எறிந்து முயற்சி செய்வர். கனிகொடாத மரங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அதைப்போலத் தான் வாழ்க்கையிலும். நற்செயல் புரிபவர்கள், நற்பெயர் எடுத்தவர்கள் போன்றோரை நோக்கித்தான் பலருடைய சொற்களும் எண்ணங்களும் பாயும். அவை எப்போதும் பாராட்டாக மட்டும் இருக்காது.மாறாக துன்பங்களையும் சவால்களையும் விளைவிப்பதாகவும் இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவை கல்லெறிய முயற்சிக்கும் யூதர்களை நோக்கி "நான் செய்த எந்த நற்செயலுக்காக கல்லெறிகிறீர்கள் " என்ற கேள்வியை முன்வைக்கிறார் இயேசு. அவர் தன்னை மற்றவர்களிடமிருந்து மறைக்கவில்லை. வெளிப்படையாக நற்செயல்கள் புரிந்தார். அறிவிலும் ஞானத்திலும் நிறைந்தவராய் நற்சொற்களையே துணிச்சலுடன் பேசினார். அவையெல்லாம் யூதர்களின் கண்களில் படவில்லை. மாறாக தன்னை அவர் கடவுளின் மகன் என்று சொல்லி தன்னை கடவுளுக்கு இணையாக்கினார் என்பதற்காகவே கல்லெறிகிறோம் என அவர்கள் கூறினர். ஆனால் அவர்களின் ஆழ்மனதில் இருந்த காரணம் வேறு.

இயேசுவின் எண்ணற்ற நற்செயல்களால் நாளுக்கு நாள் அவரை நம்பினோரின் எண்ணிக்கை அதிகமானதை மேல்மட்ட யூதர்கள் அதாவது பரிசேயர் சதுசேயர் மறைநூல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களின் பெருமை போய்விடும் என்ற பயத்தில்தான் வேண்டுமென்றே இயேசுவின் பெயரைக் கெடுக்க யூதர்கள் பலவாறு முயற்சிக்கிறார்கள்.

நாம் வாழும் இந்தியத் திருநாடு மதசார்பற்றது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் சில அமைப்புகள் வேண்டுமென்றே மதவாதத்தைப் பரப்ப கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பல பிரச்சனைகளைத் தருகிறார்கள். நாம் செய்கின்ற செயல்களின் நோக்கத்தை அறியாமல் நம் மனித நேய செயல்களையெல்லாம் மதம்மாற்றுவதற்காக செய்கிறோம் என பொய்குற்றம் சாட்டி தண்டிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல்களெல்லாம் நம்மை நெருக்கினாலும் நாம் நம்முடைய நற்செயல்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நம்முடைய நற்செயல்கள் தொடரப்பட வேண்டும். அப்போது தான் நாம் இயேசுவை பிரதிபலிப்பவர்களாகிறோம். எத்தகைய சூழ்நிலையிலும் நற்செயல்கள் செய்ய தயாராவோம். அதற்கான வரம் கேட்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!
நாங்கள் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் நற்செயல்கள் மட்டுமே செய்து இயேசுவைப் பிரதிபலிக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 9 =