Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தந்தையைப் போல செயலாற்றத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் நான்காம் புதன்
I: எசாயா 49: 8-15
II : திபா 145: 8-9. 13cd-14. 17-18
III : யோவான் 5: 17-30=
மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் எப்போதும் கார் ஓட்டுவதைப் போன்ற ஒரு சைகை காட்டிக்கொண்டே இருப்பான். ஒருமு றை அவனுடைய ஆசிரியர் அம்மாணவனின் தாயிடம் அவ்வாறு அவன் செய்துகொண்டே இருப்பதற்கான காரணம் என்னவென்று கேட்டார். அப்போது அவனுடைய தாய் அம்மாணவனரின் தந்தை ஒரு ஓட்டுநர் என்று கூறினார். மேலும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அம்மாணவன் சிறுவயதுடையவனாய் இருந்த போதே தந்தையானவர் தவறிவிட்டார். இப்பையன் அவன் தந்தை கார் ஓட்டுவதை சரியாகப் பார்த்தது கூட இல்லை. ஆனாலும் அவன் தந்தை செய்வதைப்போலவே செய்கிறான். அது அவனுடைய இரத்தத்திலே ஊறிவிட்டது என்று தெரிவித்தார்.
அன்புக்குரியவர்களே அறிவியல் கூறுகிறது தாய் தந்தையரின் பண்புகள் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது என்று. அவை உடலமைப்போ ,குணநலன்களோ , உணவுப் பழங்கங்களோ தொழிலில் உள்ள ஆர்வங்களோ, எதுவாகவும் இருக்கலாம்.அதை நாமே கண்கூடாகக் காண்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு இதையே கூறுகிறார். தான் தந்தையைப் போல செயலாற்றுவதாய் கூறுகிறார். தந்தை தாம் விரும்பியவர்களை வாழ வைப்பதைப் போல தாமும் வாழ்வளிப்பதாகக் கூறுகிறார். அவர் அவ்வாறு கூறிகிறார் என்றால் ஏற்கனவே அவர் தந்தையை தம் செயல்களில் வெளிக்காட்டிவிட்டார் என்பதுதானே பொருள். என்னை நம்புகிறவன் என்னை அனுப்பியவரை நம்புகிறான் என்று கூறி தானும் தந்தையும் ஒன்றே என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார். கடவுளை எவ்வாறு தனக்கு இணையாக்கலாம் என்று யூதர்கள் கேள்வி எழுப்பியதையும் குற்றம் சுமத்தியதையும் அவர் பொருட்படுத்தவில்லை. உருவில்லா தந்தையின் உருவமாய் அவரைப் போல செயலாற்றினார் இயேசு.
இதன் மூலம் நமக்குக் கூறப்படும் செய்தி என்ன? நாமும் தந்தையைப் போல செயலாற்ற வேண்டும் என்பதே. நாம் ஏற்கனவே அவர் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். சாயல் என்பது அவருடைய குணநலன்களைக் குறிக்கிறது. அப்படியெனில் நாமும் அவரைப்போன்ற குணநலன்களோடு செயல்படவேண்டும். உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் (இரக்கமுள்ளவராய்) இருப்பதைப்போல நீங்களும் இருங்கள் என்றார் இயேசு. நாம் ஒரு செயலைச் செய்கின்ற போது இந்தஇடத்தில் கடவுள் எவ்வாறு செயல்பட்டிருப்பார், அவருடைய விருப்பம் என்னவாக இருக்கும் என எண்ணி நாமும் செயல்பட்டால் நாமும் இயேசுவைப் போல புரட்சி மனதர்களாக மாற முடியும்.கடவுள் அன்பும் போறுமையும் இரக்கமும் மன்னிப்பும் கொண்டவராய் எல்லாருக்கும் எல்லாமுமாய் இருப்பவர்.இயேசுவும் தந்தையைப் போலவே இத்தகைய பண்புகள் அனைத்தையும் கொண்டு செயலாற்றினார். நாமும் இயேசுவைப் பின்பற்றி தந்தையைப் போல செயல்பட முயலுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்கள் தந்தையே! உம்முடைய பிள்ளைகள் நாங்கள் உம்மைப்போல செயலாற்ற வரம்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment