நம்புங்கள் நல்லது நடக்கும் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் நான்காம் திங்கள்
I: எசாயா 65:17-21
II :  திபா 29:2,4-6,11-13
III : யோவான்  4:43-54

வாழ்க்கையில் அதிசயங்களையும் அற்புதங்களையும் அனுபவிக்க நம்பிக்கை அவசியமாகிறது.  அதிசயம் என்று சொன்னவுடனே  ஏதோ பெரிய நடக்க இயலாத காரியங்கள் நிகழ்வதைக் குறிப்பதல்ல. மாறாக தினசரி  நிகழ்வுகள் எத்தகையதானாலும் அதில் நண்மையைக் காணும் பார்வையே நம்பிக்கை.இன்றைய நற்செய்தி வாசகமானது இத்தகைய பார்வையை நம்மிலே வளர்க்கவே  நம்மை அழைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அரச அலுவலர் இயேசு வந்ததைக் கேள்வியுற்று இறக்கும் தருவாயிலிருந்த அவருடைய மகன் நலமடைய வேண்டுமென இயேசுவிடம் கேட்டார்.  ஆனால் இயேசுவோ அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பமாட்டீர்கள் என பதில் கூறினார். இயேசு எதற்காக இவ்வாறு கூறினார்? ஏனென்றால் அவருடைய சொந்த ஊரிலே யாரும் அவருடைய வல்லமையை நம்பவில்லை. அவருடைய குடும்பப்பிண்ணணியைக் கருத்தில் கொண்டு அவருடைய போதனையிலும் வல்லசெயல்களிலும் உள்ள நன்மையைக் காணும் நம்பிக்கைப் பார்வை அவர்களிடத்தில் இல்லை. இதனால் இயேசு அங்கே கானாவூர் திருமணத்தில் செய்த புதுமையைத் தவிர வேறு எந்த புதுமையையும் நிகழ்த்தவுமில்லை. 
இதன்காரணமாக வல்ல செயல்கள் அவ்வளவாக நடைபெறாத ஊரிலிருந்து ஒருவர் இயேசுவின் உதவியைக் கேட்டது இயேசுவுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. அவரின் நம்பிக்கையை சோதிக்கவே இயேசு அவ்வாறு கூறினார்.

அந்த அரச அலுவலர் அதற்கு கூறிய பதில் " என் மகன் இறப்பதற்குள் வாரும் " என்பதே.  இயேசு அவர் வீட்டிற்கு செல்லவில்லை. உம் மகன் பிழைப்பான் நம்பிக்கையுடன் செல்லும் என்ற வார்த்தைகளைக் கூறினார். அந்த அரச அலுவலர் அதை நம்பிச் சென்றார். அவர் மகன் நலமுடன் இருப்பதாக அவருக்கு செய்தி வந்தது.

அன்புக்குரியவர்களே ஏற்கனவே குறிப்பிட்டது போல எதிலும் நல்லதைக் காணும் பார்வை நம்பிக்கையாகும். நிகழ்வுகள் யாவும் நமக்கு சாதகமாக எப்போதும் அமைவதில்லை. ஆனால் நம்பிக்கையால் நாம் அவற்றை சாதகமாக்கிக் கொள்ள முடியும். தினமும் நாம் கண்விழிப்போம் என்று நம்பிதானே நாம் திட்டங்களைத் தீட்டுகிறோம். செய்கின்ற செயல்களை வெற்றியாக்கித் தரவேண்டும் என்று இறைவனை வேண்டி செயலில் இறங்குவதே நம்பிக்கையின் வெளிப்பாடுதானே. எனவே நம்புவோம்.  இறைவனை நம்புவோம். நல்ல பார்வையைக் கொள்வோம். நல்லதே நடக்கும்.

இறைவேண்டல் 
அன்புத்தந்தையே இறைவா!  எங்கள் வாழ்க்கை நம்பிக்கை நிறைந்ததாயும் எங்கள் பார்வைகள் நன்மையைக் காண்பவையாகவும் அமைய உம் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 0 =