இறைவார்த்தையும் இறைவிருப்பமும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - முதல் செவ்வாய்
I: எசா: 55: 10-11
II :  திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18
III: மத்: 6: 7-15

பொதுவாக நாம் சொல்லக்கூடிய வார்த்தைகள் யாவும் நம்முடைய ஆழ்மனதின் விருப்பத்திலிருந்தே வருகின்றன. நாம் சொல்கின்றவற்றை நாம் செயல்படுத்த முனைகிறோம் என்றால் அதன்மேல் நாம் பற்றுகொண்டுள்ளோம் எனப்பொருள். ஏனெனில் ஏனோதானோ என்று விருப்பமில்லாமல் நாம் சொல்கின்றவற்றை நிறைவேற்ற நாம் விருப்பப்படுவதில்லை. 

ஆண்டவருடைய வார்த்தைகள் அவரது உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றுவதாய் உள்ளன.அவரது விருப்பம் என்ன? அவருடைய பிள்ளைகள் நாம் எல்லோரும் மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழவேண்டும் என்பதுதானே. வெறுமையாய் இருந்த உலகை தன் வார்த்தையால் உருவாக்கி உயிர்கள் பலுகிப் பெருக வேண்டுமென விரும்பினார். அது நடந்தது. தனக்கென ஒரு இனத்தை தேர்ந்தெடுத்து பெரிய இனமாக்கினார். அவர் அளித்த வாக்குகளெல்லாம் நிறைவேறின. ஆபிரகாமுக்கு அவரளித்த வாக்கு நிறைவேறியது. இஸ்ரயேலருக்கு மீட்பரை அனுப்புவேன் எனக் கூறிய அவர் வாக்கு அவரது விருப்பத்தை நிறைவேற்றியது. கடவுளுடைய உள்ளத்து விருப்பங்கள் எல்லாம் மனிதன் உருவான காலம்தொட்டு இன்றளவும் நிறைவேறுகின்றன என்பதற்கு எண்ணற்ற விவிலிய சான்றுகள் உள்ளன.

கடவுளுடைய வார்த்தைகள் எப்போதும் பலன் தராமல் இருந்ததில்லை.அவ்வாறெனில் அவருடைய பிள்ளைகளாகிய நம்முடைய வார்த்தைகளும் பலன் அளிப்பனவாய் இருக்க வேண்டும். அவ்வாறு நம் வார்த்தைகள் பலனளிக்க வேண்டுமெனில் நம் வார்த்தைகள் நம் உள்ளத்தில் எழும் நல்ல விருப்பங்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் உருவாக வேண்டும்.இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு நாம் செபிக்கின்ற போது கூட எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமெனக் கற்றுத் தருகிறார். நம்முடைய சொற்களிலே தேவையற்ற பிதற்றதல் இன்றி தேவையானவற்றை மட்டும் பேச வேண்டும் என்ற கருத்தை நமக்கு விளக்குகிறார். அத்தோடு நமது வேண்டுதல்களில் இறைவிருப்பத்தை நாட வேண்டும் என்றும் கற்றுத் தருகிறார். ஏனெனில் இறைவிருப்பத்தை நாம் நாடும் போது இறைவார்த்தை நம் வாழ்வில் நிறைவேறுகின்றது.

எனவே அன்புக்குரியவர்களே இறைவிருப்பமும் இறைவார்த்தையும் நம்மிலே பலனளிக்க அனுமதிப்போம்.நம்முடைய வார்த்தைகளும் இறைவார்த்தையை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் நல்ல எண்ணங்களிலிருந்தும் விருப்பங்களிலிருந்தும் தோன்றட்டும்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!  உம் வார்த்தைகள் பலனின்றி போகாது என்பதை நாங்கள் அறிவோம். எமது வார்த்தைகளும் உம் வார்த்தைகளைப் பிரதிபலிக்கவும் அவை உம் விருப்பத்தை நாடவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 11 =