அடுத்திருப்போரை அன்பு செய்யத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - முதல் திங்கள்
I: லேவி: 19: 1-2, 11-18
II :  திபா 19: 7. 8. 9. 14
III: மத்: 25: 31-46

நம் கடவுளாம் ஆண்டவர் மோசே வழியாக சீனாய் மலைமேல் வழங்கிய கட்டளைகள் மொத்தம் பத்து என்பது நாம் அறிந்ததே. அப்பத்துக்கட்டளைகளும் இரு கட்டளைகளில் அடங்கும். முதலாவதாக இறைவனுக்கு அன்பு செலுத்துதல். இரண்டாவது பிறருக்கு அன்பு செலுத்துதல்.இவ்விரண்டையும் நாம் சமமாக மதித்து கடைபிடிக்க வேண்டும்.மாறாக கண்ணுக்குத் தெரியாத மனதால் மட்டுமே உணரக்கூடிய கடவுளுக்கு  அன்பு செய்ய முயற்சிக்கும் நாம், நம் கண்முன்னே வாழக்கூடிய நமக்கு அடுத்திருப்போருக்கு அன்பு செய்யத் தவறுதேன்?

இன்றைய வாசகங்கள் நமக்கு அடுத்திருப்போருக்கு அன்பு காட்ட அழைப்பு விடுக்கின்றன. அடுத்திருப்போர் என்ற உடன் நமது வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர், நம் அருகில் அமர்ந்திருப்பவர் என்பது பொருளில்லை. விவிலியத்தைப் பொறுத்தவரை அடுத்திருப்பவர் என்றால் தேவையில் இருப்பவர் என்பது பொருள்.

இன்றைய முதல்வாசகத்தில் ஆண்டவராம் கடவுள் அயலாருக்குக் காட்ட வேண்டிய அன்பை நீதி என்ற வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டியது நீதி. அவ்வாறு கிடைக்காவிட்டால் உணவு வழங்கு எனக் கூறுகிறார் ஆண்டவர். ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைக்காமலும், தீர்ப்பிடாமலும்,பாரபட்சம் காட்டாமலும் இருக்க வேண்டும் என தந்தை கடவுள் கூறுகிறார்.

ஆண்டவரின் இதே உள்ளத்தை பிரதிபலிக்கும் விதமாக இன்றைய நற்செய்தி வாசகமும் அமைகிறது. சின்னஞ் சிறிய சகோதருக்கு செய்யும் போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்கிறார் ஆண்டவர் . நற்செய்தியின் மூலம் உணவில்லாதோர்,தாகமாயிருப்போர்,நோயாளிகள்,சிறைவாசிகள்,ஆடையின்றி இருப்பவர்,அந்நியராய் இருப்பவர் ஆகிய தேவையிலுள்ள அனைவரும் நமக்கு அடுத்திருப்போர் என்பதை ஆண்டவர் இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

அன்புக்குரியவர்களே இச்சிந்தனைகளை மனதில் பதிய வைத்து நம் அடுத்திருப்போர் யார் என அறியக் கற்றுக்கொள்வோம். நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு அன்பு காட்டி இறைவனுக்கு அவ்வன்பைக் காணிக்கையாக்க முயல்வோம். இத்தவக்காலத்தில் நாம் செய்கின்ற பிறரன்புச் செயல்களெல்லாம் நமக்கு அடுத்திருக்கும் தேவையில் உள்ளோரைச் சென்றடையட்டும்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எமக்கு அடுத்திருப்போருக்கு  அன்பு காட்டவும், அதன்மூலம் உம்மை அதிகம் அன்பு செய்யவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 1 =