திருமண வாழ்வு உயர்ந்த வாழ்வு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள் (25.02.2022)
பொதுக்காலம், வாரம் 7 வெள்ளி
மு.வா:யாக்கோபு: 5: 9-12
ப.பா :  திபா: 103: 1-2. 3-4. 8-9. 11-12
ந.வா:  மாற்கு:  10: 1-12

 

திருமண வாழ்வு என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அருளடையாளம். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்து குடும்பமாகவாழ என்று திருவுளம் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ஆணும் பெண்ணும் இணைந்த திருமண வாழ்வு ஆசி பெற்ற வாழ்வாக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இல்லறத்திலும் துறவறம் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார். அதாவது கணவன் தன் மனைவியை விட்டுவிட்டு தவறான பாதைக்கு செல்வது பாவம். அதைப்போல மனைவி தன் கணவரை விட்டுவிட்டு தவறான பாதைக்கு செல்வது பாவம். அது விபச்சார வாழ்வுக்கு சமமாகும் என்பதை ஆணித்தரமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். இல்லற வாழ்வில் இருக்க வேண்டிய நல்ல மதிப்பீடுகளை இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

திருமண வாழ்வு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பற்ற அருள்சாதனம் என்பதை உணர்ந்து வாழ கணவன் மனைவி அழைக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவியும் இரு உடலைக் கொண்டிருந்தாலும் திருமணத்தின் வழியாக ஒரே உடலாக மாறி உள்ளனர் என்பதை வலியுறுத்துவதாக இருக்கின்றது. கணவன் தன்னுடைய மனைவியோடு மனைவி தன் கணவரோடு இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் எந்நாளும் உண்மையாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர்.   அதில் தான் திருமண வாழ்வின் அன்பின் உச்சம் வெளிப்படுகின்றது.  குடும்ப வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு கலவை. இப்படிப்பட்ட சூழலில் கணவனும் மனைவியும் தாங்கள் இருவரும் இரு உடல் அல்ல ; ஒரே உடல் என்ற மனநிலையில் துன்பத்திலும் இன்பத்திலும் உடனிருக்க வேண்டும். அதில் தான் திருமணத்தின் மேன்மை அடங்கியுள்ளது.  

திருமண வாழ்வை கடவுள் இணைத்துள்ளார். எனவே இந்த உலகம் சார்ந்த மனிதர்கள் சூழ்ச்சி செய்து பிரிக்க நினைப்பது கடவுளுக்கு எதிரானது. எனவே கணவன் மனைவிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவர்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்பவர்கள். எனவே அவற்றை முற்றிலும் கலைந்து,  கடவுள் இணைத்த திருமண வாழ்வை சிறப்பாக கணவன்-மனைவி வாழ நம்மாலான வழிகாட்டுதலை செய்வோம். அதேபோல ஒவ்வொரு கணவரும் மனைவியரும் இந்த வாழ்வு கடவுளால் இணைத்து வைக்கப்பட்டது என்பதை முழுமையாக உணர்ந்துசிறப்பாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர். 

இறுதியாக குடும்ப வாழ்வில் கடவுளின் ஆசியை முழுமையாக உணர இன்றைய முதல் வாசகம் சொல்வதைப்போல துன்பத்தைத் தாங்கும் மனமும் பொறுமையும் கொண்டு வாழநல்ல மனநிலையை பெற குடும்ப வாழ்வில் முயற்சி செய்யும்பொழுது . கடவுளின் ஆசியை நிறைவாகப் பெற முடியும்.  குடும்ப வாழ்வில் கடவுளின் ஆசீர் பெற்று வாழ்வில் உயர்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே!  திருமண வாழ்வு நீர் கொடுத்த கொடை என்பதை உணர்ந்து சிறப்பாக வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 3 =