Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம் எண்ணங்களை சரி செய்வோம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் ஏழாம் வியாழன்
மு.வா:யாக்கோபு: 5: 1-6
ப.பா : திபா: 49: 13-14. 14-15. 16-17. 18-19
ந.வா: மாற்கு: 9: 41-50
ஒரு ஊரில் ஏழை மாணவர் சிறப்பாகப் படித்து வாழ்வில் சிறந்த சாதனையாளராக மாறினார். ஒரு ஏழையாக இருந்த காரணத்தினால் அவர் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தார். இருந்தபோதிலும் மன உறுதியோடு வாழ்வில் வெற்றி பெற்றார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் "உங்கள் வாழ்வில் இவ்வளவு சோதனைகளுக்கும் இடையூறுகளுக்கு மத்தியிலும் எவ்வாறு வெற்றியடைய முடிந்தது? " என்று கேட்டார். அதற்கு அவர் "எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என்னுடைய எண்ணங்களை மட்டும் சிதர விடமாட்டேன். துன்பத்தையும் இடையூறுகளையும் தடைகளையும் நேர்மறையாக பார்ப்பேன். என்னுடைய எண்ணங்களை நேர்மறையாக வைத்திருப்பேன். கடவுளுக்கு பயந்து என் எண்ணங்களை சிந்திப்பேன். இதுதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம்" என்று கூறினார்.
நம்முடைய வாழ்க்கையில் எண்ணங்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எண்ணங்கள்தான் நம்முடைய செயல்களாக உருமாற்றம் அடைகிறது. நாம் நல்லதை எண்ணுகிற பொழுது, நம்முடைய செயல்பாடுகளும் நல்லதாக மாறும். நம்முடைய எண்ணங்கள் தீமையானதாக இருக்கின்ற பொழுது, நம்முடைய செயல்பாடுகளும் தீமையானதாக இருக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் உடல் உறுப்புகள் நம்மை பாவத்தில் விழச் செய்தால், அவற்றை வெட்டி எறிய வேண்டும் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில் உடல் உறுப்புகள் செய்கின்ற பாவங்கள் நம்முடைய ஆன்மாவைக் கறைப்படுத்துகிறது. ஆன்மாதான் நிலையானது. அந்த ஆன்மா தூய்மையானதாக இருக்கின்ற பொழுது புனிதரின் கூட்டத்தில் அகமகிழும். மறுவுலகில் இறைமாட்சியைப் பெற்றிட நம் உடல் உறுப்புகளைத் தூய்மையாக்குவோம். நம் உடல் உறுப்புகள் தூய்மை பெற்றிட நம் எண்ணங்களை தூய்மையாக்குவோம். நம் எண்ணங்கள் தூய்மையாகிட நம் வாழ்வை இறைவனிடம் ஒப்படைப்போம். எல்லாவற்றையும் நேர்மறையாகவும் தூய்மையானதாகவும் சிந்திப்போம். அப்போது நிச்சயமாக நம்முடைய வாழ்வு கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்ற வாழ்வாக மாறும். அத்தகைய தூய்மையின் எண்ணங்களால் நம் வாழ்வை அலங்கரிக்கத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் எப்பொழுதும் தூய்மையானதை எண்ணி, எங்கள் ஆன்மாவை காத்துக்கொள்ள அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment