நன்மை செய்து வாழ்வது தான் உண்மையான கி0றிஸ்தவ வாழ்வு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் ஏழாம் புதன்
I:யாக்கோபு: 4: 13-17
II :  திபா: 49: 1-2. 5-6. 7,8,9. 10
III:  மாற்கு:  9: 38-40

நன்மை செய்ய ஒருவருக்கு தெரிந்திருந்தும் அவர் அதை செய்யாவிட்டால் அது பாவம் என்பதை இன்றைய முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் நாம் கடவுளுக்கு  எதிரான பாவங்கள் செய்வதும் உடல் இச்சையோடு பாவங்கள் செய்வது தான் பாவங்கள் என நினைக்கிறோம். ஆனால் பிறருக்கு நன்மை செய்ய வாய்ப்பு இருந்தும் நன்மை  செய்யாமலிருப்பது மிகப்பெரிய பாவமாகும்.  

நான் திருச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்துக்கொண்டிருந்த பொழுது, களப்பணி செல்வது வழக்கம். ஒருமுறை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆண்கள் கழிப்பிடத்தில் மது அருந்திவிட்டு ஒரு நபர் மயங்கி கிடந்தார். அவரைக் கண்டவுடன் சற்று ஒதுங்கி சென்று விட்டேன். ஆனால் என் பயணத்தைத் தொடர்ந்த பிறகு   எனக்குள் ஒருவகையான குற்ற உணர்வு ஏற்பட்டது. நான் அந்த நபருக்கு ஏதாவது உதவி செய்து இருக்கலாமே? என்று.  அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் நன்மை செய்ய வாய்ப்பிருந்தும் நன்மை செய்யாமலிருப்பது மிகப்பெரிய பாவமாகும். அது பாவம் என்பதால்தான் எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது .

நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில்  பிறருக்கு நன்மை செய்ய கடவுள் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த முயல வேண்டும். செல்வரும் இலாசரும் உவமையில் நன்மை செய்ய வாய்ப்பிருந்தும் நன்மை செய்யாத செல்வரை கடவுள் தண்டிப்பதைப் பார்க்கிறோம்.  அன்புக்குரியவர்களே!  கடவுள் கொடுத்த இந்த வாழ்வை முழுமையாக வாழ முயற்சி செய்வோம். நன்மைகள்  பல செய்து ஏற்றமிகு  கிறிஸ்தவ வாழ்வுக்கு  சான்று பகர முயற்சி  செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டிய மனிதரைத் தடுக்கப் பார்க்கிறார்கள் சீடர்கள். அவர்களைப் பொறுத்தவரை தங்களைத் தான் இயேசுவின் சீடர்களாகவும் வல்ல செயல் செய்பவர்களாகவும் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆனால் இயேசு சீடர்களை நோக்கி அவரைத் தடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார். கடவுள் பெயரால் நன்மைகள் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு எனக் கற்பிக்கின்றார் இயேசு.

முதல் வாசகத்தில் எப்படியாவது வணிகம் செய்து பணம் ஈட்டலாம் என்று நினைப்பவர்களுக்கு சிந்திக்கத் தூண்டும் சிந்தனையை திருத்தூதர் யாக்கோபு கூறியுள்ளார். உலகம் சார்ந்த பொருட்களை ஈட்டுவது தவறல்ல ; மாறாக கடவுள்தான் அனைத்திலும் முதன்மை பெற வேண்டும். அதற்கு பபிறரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிறர் நலச்சிந்தனை இருக்க வேண்டும். நாம் நன்மை செய்கின்ற பொழுது, கடவுள் நம்  சார்பாக செயல்படுவார். நாம் நன்மை செய்ய வாய்ப்பிருந்தும் தவறும் பொழுது, கடவுளின் அருளை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.  எனவே நம் அன்றாட வாழ்க்கையில் எந்நாளும் நன்மை செய்யக் கூடிய மக்களாக வாழ்ந்திட அருளை வேண்டுவோம்

 இறைவேண்டல்
நன்மைகளின் நாயகனே எம் இறைவா!  எங்களால் முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்யக் கூடிய மக்களாக வாழ்ந்திட  தேவையான அருளைத்    தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 13 =