நம்புகிறவர்களுக்கு எல்லாம் நிகழும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஏழாம் திங்கள்
I:யாக்கோபு3: 13-18
II :  திபா: 19: 7. 8. 9. 14
III:  மாற்கு9: 14-29

ஒரு இளைஞன் வேலைக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளச் சென்றான். அவன் இதற்கு முன் பலநேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டும் அவனால் வெற்றி பெற இயலவில்லை. அன்று நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன் கடவுளிடம் செபித்துவிட்டுச் சென்றான். மாலை திரும்பி வரும் போது வீட்டிலுள்ள எல்லாரும் மிக ஆர்வமாய் வேலை கிடைத்ததா எனக் கேட்டனர். அவ்விளைஞனோ வாடிய முகத்துடன் இல்லை என்று கூறினான். தொடர்ந்து " நான் நினைத்தேன் கிடைக்காது என்று. அதேபோல் நடந்துவிட்டது. செபம் செய்ததெல்லாம் வீண்"என்று சலித்துக்கொண்டான்.
ஆம் அன்புக்குரியவர்களே பல வேளைகளில் நாம் நமது தேவைக்காக செபம் செய்யும் போதோ அல்லது ஏதாவது  ஒரு காரியத்தைச் செய்யும் முன்போ ஒருவித நம்பிக்கையற்ற மனநிலையிலே அவற்றைச் செய்கிறோம். கிடைக்குமா கிடைக்காதா? முடியுமா முடியாதா? இது நடக்குமா நடக்காதா? என்ற சந்தேகம் நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. இம்மனநிலை இருந்தால் நம்மால் எதையும் நிச்சயம் பெறமுடியாது.  நம்மிடம் நம்பிக்கை ஆழமாக இருக்கவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி பிடித்தவரின் தந்தை இயேசுவிடம் "உம் சீடர்களால் இயலவில்லை. உம்மால் இயலுமானால் என்மகனைக் குணமாக்கும் "என்று கூறினார். அங்கே அவரிடம் ஆழமான நம்பிக்கை இல்லை என்பதை இயேசு உணர்கிறார். எனவேதான் நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் என்று கூறுகிறார். 

இவ்வார்த்தைகள் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில் நம்முடைய மனதில் நம்பிக்கையற்ற எண்ணங்களை, சந்தேகங்களை நாம் களைய வேண்டும் என்பதே. நம்பிக்கையை நாம் ஆழப்படுத்தும் போது நமக்கு எல்லாம் நிகழும். எனவே நற்செய்தியில் காணும் அந்தத் தந்தையோடு இணைந்து நாமும் இயேசுவிடம் " நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மையை குணமாக்கும்" என வேண்டல் செய்வோம்.

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே!எங்கள் நம்பிக்கையின்மையைக் குணமாக்கி, எல்லாம் நிகழும் என்ற ஆழமான நம்பிக்கையோடு வாழ அருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =