நம்பிக்கையே மனஉறுதியைத் தரும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் திங்கள்
மு.வா: யாக்கோபு 1:1-11
ப.பா :  திபா 119: 67-68. 71-72. 75-76 
ந.வா:  மாற்கு  8: 11-13

 நம்பிக்கையே மனஉறுதியைத் தரும்! 

மனதில் உறுதி வேண்டும். வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும் என்ற பழைய பாடல் வரிகள் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த மனஉறுதி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவையாகும். இம்மனவுறுதி என்ற பண்பு இருந்தால் மட்டுமே நம் வாழ்வில்  துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக் கொள்ளவும் கடந்து செல்லவும் முடியும். ஏனெனில் சோதனைகள் இல்லாத வாழ்க்கை கிடையாது. சோதனைகளும் சவால்களும் வாழ்வில் ஒருமுறை மட்டும் வருவதும் கிடையாது. அவ்வாறெனில் மனஉறுதி என்கிற இப்பண்பு வாழ்வில் இன்றியமையாததாக இருக்கின்றது அல்லவா. இந்த மனவுறுதி எதிலிருந்து தோன்றுகிறது எனச் சிந்தித்தோமெனில் நம்பிக்கையே நம் கண்முன் நிற்கின்றது. 

 இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு நம் வாழ்வில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதையும் அந்த நம்பிக்கையே மனஉறுதியைத் தரும் என்ற கருத்தையும் நமக்கு ஆழமாக எடுத்துரைக்கிறார். கடவுள் மீது ஆழமாக நாம் நம்பிக்கை வைத்து ஐயப்பாடின்றி எதைக் கேட்டாலும் அதை அவர் நமக்கு நிச்சயம் அளிப்பார். அந்த ஆழமான நம்பிக்கை தான் சோதனையை சாதனையாக்கும் மனஉறுதியை நமக்குத் தரும். துன்பத்திலும் இன்பத்திலும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய மன தைரியத்தைத் தரும் என்ற சிந்தனையை நமக்குத் தருகிறார். 

சாலையில் நாம் நடந்து செல்லும் போது திடீரென விழுகிறோம் என வைத்துக்கொள்வோம். நாம் மீண்டுமாக எழுந்து  ஆண்டவரே எனச் சொல்லிவிட்டு அதே சாலையில் நம் பயணத்தை தொடர்கிறோமே ஏன்? மீண்டுமாக நாம் விழமாட்டோம் என்ற எண்ணத்திலா? இல்லை விழுந்தாலும்  ஆண்டவர் தரும் அருளால் கவனமாக எழுந்து நடந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில் தான் அல்லவா. இந்த ஒரு சிறு உதாரணம் நம் வாழ்வில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தயும் அதனால் நாம் பெறும் மனஉறுதியின் பயன்பாட்டையும் நமக்குக் கூறுகிறது.நம்பிக்கை இல்லாவிட்டால் நம்மால் நிம்மதியாக சுவாசிக்க இயலாது. 
இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் வாழவேண்டியிருக்கும். அந்த பயம் இருந்தால் துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் நம்மால் மகிழ்ச்சி கொள்ள இயலாது. வாழ்வின் அடுத்த அடியை எடுத்து வைக்க மனதில் உறுதியும் இருக்காது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாத யூதர்கள் அவரிடம் அடையாளம் கேட்கின்றனர். ஆனால் இயேசு மறுத்துவிட்டார். உண்மையான நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு நாம் எதைக் கேட்டாலும் நாம் அதைப் பெறுவதில்லை என்ற செய்தியை இவ்வாசகம் நமக்குக் கூறுகிறது. அன்புக்குரியவர்களே  இக்கருத்துக்களை ஆழமாகத் தியானித்து நம்முள்ளே இருக்கின்ற நம்பிக்கையைத் தூண்டி எழுப்புவோம். மனஉறுதியை வளர்ப்போம். அப்போதுதான் நம் வேண்டுதலும் கேட்கப்படும்.  இன்பத்திலும் துன்பத்திலும் நம்மால் மகிழ்ச்சியோடும் ஞானத்தோடும் செயல்பட முடியும்.அதற்காக இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!  எவ்வித ஐயப்பாடும் இன்றி உம்மீது முழுமையாக நம்பிக்கை வைக்கவும் மனஉறுதியுடன் சோதனைகளைக் கடந்து பயணிக்கவும் அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 11 =