Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஏழையரின் உள்ளத்தை நமதாக்குவோமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு
I: ஏரே: 17: 5-8
II : திபா 1: 1-2. 3. 4-6
III: 1கொரி: 15: 12,16-20
IV: லூக்: 6: 17, 20-26
ஒரு ஊரில் ஏழை மனிதர் ஒருவர் இருந்தார். அவர் வாழ்வில் ஒரு கட்டத்தில் பல்வேறு துன்பங்களைப் பொருளாதாரக் குறைவின் காரணமாக அனுபவித்தார். எந்நேரமும் கடவுளே தஞ்சம் என்று இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கடவுள் புண்ணியத்தில் அவர் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு படிப்படியாக அரசியலிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தார். அவர் எந்த அளவுக்கு ஏழையாக இருந்தாரோ, அதே அளவுக்கு செல்வச் செழிப்பில் உயர்வடைந்தார். ஏழையாக இருக்கும் போது கடவுளைத் தேடிய இவர், பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு பணத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கடவுளை மறந்து, கட்டடங்களைக் கட்டி பணம் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
பல நேரங்களில் விவிலியத்தை வாசிக்கும் பொழுது இயேசு செல்வரைக் கடுமையாகச் சாடுவதாகத் தெரியும். ஆனால் அதிலுள்ள உண்மையைப் புரிந்துகொள்ள நாம் முயல வேண்டும். இயேசு செல்வரை வெறுப்பவர் அல்ல; செல்வம் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் முன்னிலையில்தான் இயேசு தன்னுடைய கண்டனத்தையும் முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியில் சமவெளிப் பொழிவை வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் மலைப்பொழிவை எழுதியுள்ளார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் சமவெளிப் பொழிவை எழுதியுள்ளார். மத்தேயு நற்செய்தியாளர் மலைப்பொழிவை பற்றி எழுதியதற்கு காரணம் யூத கிறிஸ்தவர்கள் மலைமேல் தான் கடவுளின் பிரசன்னம் இருக்கின்றது என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். லூக்கா நற்செய்தியாளர் ஏழைகளின் நற்செய்தியாளர். ஏழை எளிய மக்கள், பெண்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், பாவிகள் போன்றோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். எனவேதான் தன்னுடைய நற்செய்தியில் இயேசுவின் சமவெளிப் பொழிவைச் சிறப்பாக எழுதியுள்ளார்.
இயேசுவின் சமவெளிப் பொழிவு ஏழைகளுக்கான அருளுரை. ஏழைகள் வளம் பெறவும் இறைநம்பிக்கை பெறவும் கடவுளின் ஆசீரைப் பெறவும் இவ்வார்த்தைகள் மூலம் வழிகாட்டியுள்ளார் லூக்கா. இயேசு ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தற்கான காரணத்தைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.
ஏழைகள் தங்களுடைய வாழ்வில் பெரும்பாலும் கடவுளை மட்டுமே நம்புவர். செல்வர் தங்களிடம் இருக்கின்ற பணத்தை நம்புவர். கடவுளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை விட செல்வத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.தனக்கு செல்வம் அளித்ததே கடவுள்தான் என்பதை மறந்து இல்லாதவருக்கு பகிரும் பண்பை தொலைத்துவிடுவர். எனவேதான் பகிராத செல்வர்களை இயேசு வன்மையாகக் கண்டித்தார். கடவுளே தஞ்சம் என்று நினைத்த செல்வர்களை இயேசு நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பாராட்டினார்.
ஏழைகளிடம் இன்னும் பல நல்ல பண்புகள் இருக்கின்றன. தாங்கள் வறுமையிலும் துன்பத்திலும் வாடுவதன் காரணமாக , பிறருடைய துன்பத்தையும் வறுமையையும் எளிதில் புரிந்து கொள்கின்றனர் ஏழைகள். எனவேதான் துறவு நிலையில் மேற்கொள்கின்ற துறவிகள் "ஏழ்மை"என்ற வார்த்தைப் பாட்டை கடவுள் முன் கொடுக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஏழைகளாக வாழ்ந்து ஏழைகளின் துன்பங்கள் அறிந்து பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே. எனவே ஏழையரின் மனநிலையில் வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதர் மேல் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் வலிமை காண்போரும் சபிக்கப்பட்டவர் என்று வாசிக்கிறோம். இது எதை சுட்டி காட்டுகிறதென்றால், மனிதர்கள் வலுவற்றவர்கள். எந்நேரத்திலும் அவர்கள் நம்மைக் கைவிடாலாம் அன்பதையே. நாம் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு நீரோடை நோக்கி செல்லும் வேரைப் போல வாழமுயற்சி செய்ய வேண்டும். அப்போது நிச்சயமாக ஒரு மரத்தின் வேர் நீர் அருகில் இருக்கின்ற பொழுது செழிப்பாய் இருப்பது போல, நம்முடைய வாழ்வும் மாறும். வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். எனவே நம்முடைய வாழ்க்கையில் பலன் கொடுக்க வேண்டுமெனில், கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வேரூன்ற வேண்டும்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏழையரின் உள்ளத்தோடு வாழ்ந்து, கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, கடவுளின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்று எந்நாளும் சாட்சிய வாழ்வு வாழ முயற்சி செய்வோம்.
அத்தோடு பேராசை, ஆணவம், தற்புகழ்ச்சி இவற்றிலிருந்து முழு விடுதலை பெற்று இறைவனின் பிள்ளைகளாக மாறுவோம். ஏழையரின் உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஏழைகளின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! ஏழையரின் உள்ளத்தைப் பெற்றவர்களாய் உம்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து உமது ஆசீரைப் பெற்றிட வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment