Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோர் வாழ்வு பெறுவர்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் வியாழன்
I: 1அர: 11: 4-13
II : திபா: 106: 3-4. 35-36. 37,40
III: மாற்: 7: 24-30
இடைக்காட்டூர் திருத்தலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக களப்பணி செய்தேன். அங்கு எல்லா மதத்தினரும் திருஇருதய ஆண்டவரை வழிபடுவர். அங்கு ஒரு இந்து சமய நம்பிக்கை கொண்ட சகோதரர்அடிக்கடி ஆலயத்திற்கு வந்துஜெபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எனவே நான் ஒரு முறைஅவருடன் உரையாடினேன். "அடிக்கடி இங்கு வந்து செபிக்கிறீர்கள். எவ்வாறு இந்த அளவுக்கு இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க முடிகிறது" என்று கேட்டேன். அதற்கு அவர் "நான் ஒரு இந்து சமயத்தினர் என்றாலும் இந்த ஆலயத்திற்குள் நான் வருகின்ற பொழுது எனக்கு ஒரு விதமான ஆறுதலும் அரவணைப்பும் ஆசீர்வாதமும் முழுமையாக கிடைப்பதாக உணர்வு தோன்றுகிறது. இந்த இடத்தில் ஏதோ ஒரு வல்லமை இருப்பதாக நான் உணர்கிறேன் " என்று பதில் கூறினார். அவரின் ஆழமான இறையனுபவத்தை கண்டு சற்று வியப்பில் ஆழ்ந்தேன்.
இறைநம்பிக்கை என்பது இறை அனுபவத்தில் வெளிப்படவேண்டும். கடவுள் நமக்கு நிச்சயம் கொடுப்பார் என்ற ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் வாழ்க்கையில் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண முடியும். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான யூதர்கள் இயேசுவினுடைய உடனிருப்பையும் வல்லமையையும் உணரவில்லை. மாறாக, கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தையும் இழக்கத்தான் செய்தார்கள். சுத்தமானவர்கள் என தங்களையே கருதிய யூதர்களில் இறைநம்பிக்கை விளங்கவில்லை. ஆனால் அசுத்தமானவர்கள் என்று புறக்கணிக்கப்பட்டவர்களிடம் இறைநம்பிக்கையை ஆழமாக இருந்தது. தங்களுக்கு மட்டும்தான் மீட்பு உண்டு என்று ஆணவத்தோடு திரிந்த யூதர்களுக்கு இறைநம்பிக்கையின் வழியாகத்தான் உண்மையான மீட்பு உண்டு என்று ஆழமாக இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகிறது.
''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' '' (மாற்கு 7:27) என்று இயேசு கேட்டது புறவினத்தார் பெண்ணாகிய இந்த கிரேக்கப் பெண்ணின் இறைநம்பிக்கையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். நாய் என்ற சொல்லை யூதர்கள்பிற இனத்தார்களை அழைப்பதற்காக பயன்படுத்தினர். எனவே தான் ஆண்டவர் இயேசு யூதர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக அந்தப் பெண்ணிடம் அந்தச் சொல்லை கேட்டபொழுது, அந்தப் பெண் ஆழமான நம்பிக்கையோடு "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று கூறினார். இது அவரின் ஆழமான நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது. அந்தப் பெண் தான் புறவினத்தார் என்பதை ஏற்றுக்கொண்டு, ஆழ்ந்த நம்பிக்கையோடு இயேசுவிடம் தன் மகள் நலமடைய வேண்டினார். இப்படிப்பட்ட ஆழமான நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது நிச்சயமாக கடவுள், நமக்கு பல்வேறு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வார். புது வாழ்வையும் நல வாழ்வையும் கொடுப்பார். எனவே இறை நம்பிக்கை மிகுந்த சமூகமாக மாறிட அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எந்நாளும் இறைநம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ்ந்து, உம்முடைய அருளையும் ஆசியையும் பெற்றிட வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment