அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் புதன் 
I: 1அர:   10: 1-10
II :  திபா 37: 5-6. 30-31. 39-40
III:  மாற்:  7: 14-23

ஒரு ஊரில் ஒரு கிராம தலைவர் இருந்தார். அவர் பெண்களின் உரிமைகளுக்கு  குரல் விளக்கும் விதமாக எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளார். பெண்களை யாராவது கொடுமைப்படுத்தினாலோ அல்லது வரதட்சனை கொடுமை செய்தாலோ முதல் ஆளாக வந்து போராடுவார். இதன்  வழியாக வெளியிடங்களில் பெரும் மரியாதையை பெற்றார். ஆனால் தன் சொந்த குடும்பத்தில் தன் மனைவியை கொடுமைப்படுத்துபவராக  இருந்தார். 

பல நேரங்களில் நம்முடைய வாழ்வும் உள்ளொன்றும் புறமொன்றுமான வாழ்க்கையாக தான் இருக்கின்றது. வெளியில் நல்லவர்களைப் போல் காட்டிக்கொண்டாலும் உள்ளேயோ தீய எண்ணங்களும் வஞ்சக எண்ணங்களும் நிறைந்து காணப்படுகிறது. எனவேதான் இந்த நற்செய்தியில் புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்களையும்  சதுசேயர்களையும்  மறைநூல் அறிஞர்களையும் வன்மையாக கண்டிக்க கூடியவராக இயேசு இருக்கிறார்.  "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்பதை இயேசு ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளார். நம்முடைய உள்ளம் தூய்மையாக இருக்கிற பொழுது நம்முடைய செயல்பாடுகளும் தூய்மையாக இருக்கும். நம்முடைய செயல்பாடு தூய்மையாக இருக்கின்ற பொழுது, நம்முடைய வாழ்வும் தூய்மையாக இருக்கும். அப்படிப்பட்ட தூய வாழ்வு வாழ நாம் முயற்சி செய்வோம். அதற்கு அகம் சார்ந்த தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இறைவனுடைய வார்த்தையை நம்முடைய ஆழ்ந்த உள்ளத்தில் தியானித்து, அதனை வாழ்வாக்கி சான்று பகர முயற்சி  செய்வோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய  அன்றாட வாழ்வில்  புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அகத்தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க   அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =