Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் அருளால் நம்நிலை உணரத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
மு.வா: எசா: 6: 1-8
ப.பா : திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8
இ.வா: 1கொரி: 15: 1-11
ந.வா: லூக்: 5: 1-11
உண்மையான இறைவேண்டல் என்பது இறைவனின் ஒளியில் நம்மையே நாம் காண்பது. அவ்வாறு நம்மையே நாம் காணும்போதும் நம் நிலையை உணரும் போதும் தான் நம்மிலே மாற்றமும் ஏற்றமும் உருவாகின்றது. அங்கே கடவுளின் அழைப்பும் உணரப்படுகின்றது. அதுவும் நம்முடைய முயற்சியாலன்றி முழுமையாகக் கடவுளின் அருளால்தான். அதையே இன்றைய மூன்று வாசகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு தரப்பட்டுள்ளது. அரியணையில் வீற்றிருக்கும் கடவுளைக் காண்கிறார் எசாயா. தூதர்கள் தூயவர் தூயவர் எனப் பாடுகையில், கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தவராய் "தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன் நான் .தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மக்கள் நடுவில் வாழ்கிறவன் நான் " என்று தன்னிலையை உணர்ந்து அறிக்கையிடுகிறார். எனவே கடவுளால் தூய்மைப்படுத்தப்பட்டு அவர் செய்தியை பிறருக்கு வழங்கும் இறைவாக்கினராக வாழ அழைப்புப் பெறுகிறார்.
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தன்னுடைய அழைப்பைக் குறித்து சான்றளிக்கிறார். அவர் கடையன், தகுதியற்றவன் என தன்னைத் தானே அடையாளப்படுத்துகிறார். "கடவுளின் அருளால் திருச்சபையைத் துன்புறுத்திய நான் இன்று நற்செய்தி பணியாளர் ஆகியுள்ளேன்" என கடவுளின் அருளைப் போற்றுகிறார் அவர்.
நற்செய்தி வாசகத்தில் புனித பேதுரு " ஆண்டவரே நான் பாவி. என்னைவிட்டுப் போய்விடும் " என தன்னிலையை அறிக்கையிடுகிறார்.இரவு முழுதும் பாடுபட்டு உழைத்தும் கிடைக்காத மீன்பாடு இயேசுவின் ஒரு வார்த்தைக்குக் கீழ்படிந்ததால் கிடைத்தது. அங்கே இயேசுவை ஆண்டவராகக் கண்ட பேதுரு அவருடைய பிரசன்த்தில் தன்னைப் பாவியாகக் கண்டார். இறையருளைப் பெற்றார். மனிதரைப் பிடிப்பதற்கான அழைப்பையும் பெற்றார்.
அன்புக்குரியவர்களே இறைவனின் பிரசன்னத்தில் நம்மையே நாம் உணரும் போது, தூய்மையற்ற உதடுகள் கொண்டவர்களாகவோ, கடையகளாகவோ, தகுதியில்லாதவர்களாவோ, பாவிகளாகவோ நம்மையே நாம் காணலாம். ஆயினும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவருடைய அருள் நமக்கு நிரம்பக் கிடைத்துள்ளது. இதை நாம் உணர்ந்தால் நம் வாழ்வு நிச்சயம் மாற்றம் பெறும். ஏற்றம் பெறும். நாமும் எசாயாவைப் போல பவுலைப் போல பேதுருவைப் போல இறைவாக்கினர்களாகவும் நற்செய்தியைப் பறைசாற்றும் திருத்தூதர்களாகவும் கடவுளுக்காக மனிதர்களைப் பிடிப்பவர்களாகவும் மாற முடியும். கடவுளின் அருளை நம்மில் செயல்படச்செய்வோம். நம் நிலையை உணர்ந்து அவர் அழைப்பைப் பெற செபிப்போம்.
இறைவேண்டல்
ஆண்டவரே! அழைத்தவரே! உம் அருளால் எங்கள் உண்மை நிலையை நாங்கள் அறிந்து உம் அழைப்பை உணர்ந்து உமக்கே எந்நாளும் பணிபுரிய வரம்தாரும். ஆமென்.
Add new comment