ஞானத்தோடும் பரிவோடும் இறையாட்சிப் பணிசெய்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் சனி
மு.வா: 1 அரசர் 3: 4-13
ப.பா :  திபா : 119: 9. 10. 11. 12. 13. 14
ந.வா: மாற்  6: 30-34

 ஞானத்தோடும் பரிவோடும் இறையாட்சிப் பணிசெய்வோம்! 

இன்றைய இரு வாசகங்களும் இறையாட்சி பணியை சிறப்பாகச் செய்ய  ஞானம் பரிவு என்ற இரு உயரிய குணங்கள் தேவை என்ற கருத்தை நமக்கு விளக்குகின்றன. ஞானம் என்பது இறைவனுடைய ஆற்றலையும் பரிவு என்பது அவருடைய உள்ளத்தையும் நமக்கு வெளிப்படுத்துவதாய் உள்ளது. இறைவனின் பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நாமும் அதே ஞானம் என்ற இறைஆற்றலோடும் பரிவு என்ற இறைஉள்ளத்தோடும் இறையாட்சிப்பணியைச் செய்யும் போது அவை முற்றிலும் இறைவனை மகிமைப்படுத்துவதோடு நமக்கும் பல ஆசிர்வாதங்களைப் பெற்றுத் தருகிறது. 

முதல் வாசகமானது நாம் அனைவரும் மிகவும் அறிந்த ஒன்று. இறைவனிடம் சாலமோன் அவருடைய மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தைக் கேட்கிறார். அறிவுடையோர் அனைவரும் ஞானமுடையவர் அல்லர். அந்த அறிவை தகுந்த மனநிலையோடு சரியான வழியில் பயன்படுத்தும் உத்தியே ஞானமாகும். அந்த ஞானத்தை ஏற்கனவே சாலமோன் பெற்றிருந்தார் என்பதை இவ்வாசகம் உணர்த்துகிறது. அதாவது கடவுளுடைய வல்ல செயல்களை நினைவில் இறுத்தி அவர்முன் தன்னைத் தாழ்த்தி நாட்டை பகட்டாக ஆள்வதற்கு அல்லாமல் மக்களை நீதிவழி நடத்திடத் தேவையான புத்திக்கூர்மையை கேட்டு நின்றார் சாலமோன். 

அன்புக்குரியவர்களே ஞானமுள்ளவன், தன்னுடைய அறிவுக்கூர்மையை எல்லாரிடமும் எண்பிக்க விரும்புவதில்லை. தன்னைவிட உயர்ந்தவிடம் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஞானமுள்ளவன் எது உயர்ந்தது, எது தேவையானது என முறைப்படுத்தவும் தெரிந்தவனாய் இருப்பான். இத்தகைய ஞானமே இறைபணிக்கும் தேவை.  நாம் ஞானமே உருவான கடவுளின் முன் நின்று நம்முடைய ஞானத்தின் நிலை என்னவென்பதை பரிசோதித்து அறிய இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.

இரண்டாவதாக பரிவு என்கிற குணம். இது இறைவனின் அன்புள்ளத்தை தாயுள்ளத்தை விளக்குகிறது. ஒரு தாய் உழைத்துக் களைத்து வந்த தன் பிள்ளைகளை உணவருந்தி ஓய்வெடுக்கச் சொல்வது போல இயேசு தாயுள்ளத்தோடு நற்செய்தி பணியைச் செய்து வந்த சீடர்களை ஓய்வெடுக்கச் சொல்கிறார். அதே நேரத்தில் நற்செய்தியைக் கேட்க ஆவலாய் திரண்டு வந்த மக்களைக் கண்டு மனமிரங்குகிறார். இத்தகைய பரிவுள்ளம் நம்மிடம் இருக்கிறதா என நாம் சோதித்தறியவும் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.

இவ்விரு வாசகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஞானமும் பரிவும் இறைபணிக்கு நாம் கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் என்பதை அறிகிறோம்.எனவே நம் குடும்பத்தில் அல்லது பணித்தளங்களில் ஞானத்தோடு காரியங்களைச் செய்திடவும்  பரிவுள்ளத்தோடு பிறரின் தேவைகளை உணர்ந்து செயல்படவும் நாம் அழைக்கப்ட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அதற்கான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பும் ஆற்றலும் நிறைந்த இறைவா!  நாங்கள் மேற்கொள்ளும் இறையாட்சிப் பணிகளில் ஞானத்தோடும் பரிவுள்ளத்தோடும் செயல்பட அருள்புரியும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 4 =