நம்பிக்கை புதுவாழ்வின் ஊற்று! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Daily Reflection - February 1, 2022

ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் செவ்வாய்
I: 1 சாமு: 18: 9-10,14,24-25,30-19: 3
II :  திபா : 86: 1-2. 3-4. 5-6
III: மாற்:  5: 21-43

நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை. நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை . யானைக்குத் தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அதுபோல  மனிதனுக்கு நம்பிக்கை மிக மிக அவசியம். ஏனென்றால் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்வு புதுமை பெறாது. வீழ்ந்து கிடக்கும் நேரத்தில் நம்பிக்கை மட்டுமே ஒருவரை கைகொடுத்துத் தூக்கும். துயரங்களைச் சந்திக்க தெம்பு தரும். வாழ்வுக்குப் புதுப் பொலிவு தரும்.

இன்றைய நற்செய்தியில் நம்பிக்கையால் புதுவாழ்வு பெற்ற இருவரைக் காண்கிறோம். முதலாவதாக இரத்தப்போக்கு நோயிலிருந்து குணம்பெற்ற பெண். பன்னிரெண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கு நோயினால் வாடிய அப்பெண் பலவித அவதிகளுக்கு உள்ளாயிருந்தார். பெண்களைப் பொதுவாக மனிதகுலமாகவே மதிக்காத யூதர்கள் மாதவிடாய் காலத்திலும் குழந்தை பேறு பெற்ற பின்னும் அவர்களைத் தீட்டாகவே கருதியிருக்கக் கூடும். அவர்களுக்கென தனிப்பட்ட தூய்மைச் சடங்குகளெல்லாம் உண்டு. இந்நிலையில் பனிரெண்டு வருடம் தொடர்ச்சியாக இரத்தப்போக்கு என்றால் அவர் சமூகத்தில் தீட்டு நிறைந்தவராக கருதப்பட்டிருப்பார். பிறர்முன் வர அப்பெண் தயங்கியிருந்திருப்பார். யார் கண்ணிலும் படாமல், யாரையும் தெரியாமல் கூட தீண்டாமல் வாழ்ந்திருப்பார். அப்படிப்பட்ட அப்பெண் நம்பிக்கையால் தன் பழைய நிலையினைக் களைந்து இயேசுவின் ஆடையைத் தொட வெளிய வருகிறார். அவருடைய நம்பிக்கை அவருக்கு புது வாழ்வைத் தந்தது. 

இரண்டாவது நபராக யாயிர். தன்னுடைய செல்ல மகள் இறக்கும் தருவாயில் இருக்கும் போது மருத்துவர்கள் மேல் இருந்த நம்பிக்கையெல்லாம் மறைந்து இயேசுவின் மேல் நம்பிக்கை பிறந்தது. அவரை நாடிச்செல்கிறார். அவர் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்டபின்  இயேசுவிடம் " என் மகள் இறந்துவிட்டாள். நீங்கள் சென்றுவிடுங்கள் "எனக் கூறவில்லை அவர். இயேசுவின் வல்லமைக்காகக் காத்திருந்தார்.அதனால் புதுவாழ்வு அடைந்தது யாயிரின் மகள் மட்டுமல்ல, மகளை இழந்து விடுவோமோ என்ற துக்கத்தில் வாழ்வை இழந்துகொண்டிருந்த யாயிரும் அவருடைய குடும்பத்தாரும் தான்.

அன்புக்குரியவர்களே நோய்களோ, பிரிவினைகளோ, வறுமையோ,
அவமானங்களோ,இழப்புகளோ நம்மை சாவின் விளிம்பிற்குக் கூடத் தள்ளிவிடலாம். ஆனால் நம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு நம் செபத்தாலும் விடாமுயற்சியாலும் அவரைத் தொட்டு நம் வாழ்விற்குள் அனுமதிக்கும் போது நமக்கு புதுவாழ்வு நிச்சயம் உண்டு. நம்பிக்கையால் வரும் புதுவாழ்வைப் பெறத் தயாரா?

இறைவேண்டல் 
இறைவா! நம்பிக்கையின் நாயகனே! எல்லாச் சூழலிலும் நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு புது வாழ்வு பெற அருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 13 =