மனோன்மணீயம் சுந்தரனார்
மனோன்மணீயம் பெ.சுந்தரம் கேரள மாநிலம் ஆலப்புழையில் 1855-ல் பிறந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறந்த தமிழறிஞர். அவர் இயற்றிய மனோன்மணீயம் என்னும் 4,500 வரிகள் கொண்ட கவிதை நாடக நூலில் உள்ள ஒரு பாடலே ‘நீராரும் கடலுடுத்த’ என்பதாகும்.
அரசாணை
தமிழ் தாய் வாழ்த்து பாடலை 1970 நவம்பர் 23 அன்று முத்தமிழ் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கல்வி நிலையங்களில் பொது நிறுவனங்களில் பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வுகளின் தொடக்கத்திற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 1913-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிப்பும் இந்த அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. என்ன வரிகள் பாட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தற்போது இது எப்படி பாடப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஒருங்கிணைந்த நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அவற்றை கீழே காண்போம்.
1. மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் கீழ்க்கண்ட வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள். 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திகரம்) பாடப்படவேண்டும்,
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”
2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள். பொதுத்துறை பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும்,
நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
5. பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.
6. அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால் தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.
வாழ்வில் செம்மை செய்பவள் நீ எனத் தொடங்கும் பாரதிதாசன் பாடலை புதுச்சேரி ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்) தனது அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தாய் அறிவித்திருக்கிறது.
- அருள்பணி. பிரகாஷ் SdC
Add new comment