மனமாற்றம் ஒரு பெருவிழா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்
பவுலின் மனமாற்ற விழா
I: தி.ப.22: 3-16
II : திபா 117:1,2
III: மாற்: 16: 15-18

மனமாற்றமும் மன்னிப்பும் கிறிஸ்தவ வாழ்விற்கு பொருள் சேர்ப்பவையாக இருக்கின்றன. மனமாற்றமும் மன்னிப்பும் எங்கே இருக்கிறதோ அங்கே புதுவாழ்வு பிறக்கின்றது. அப்புது வாழ்வே நமக்கு அன்றாடமும் மகிழ்ச்சியின் விழாவாக அமைகிறது. அவ்வாழ்வு நம்மோடு உள்ள மற்றவருக்கும் இறைவனின் அருளை வழங்கக் கூடிய வாய்க்காலாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஒருவிழாவைத் தான் இன்றைய நாளில் நாம் கொண்டாடுகிறோம்.

ஆம் இன்று நாம் பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். ஏனென்றால் பவுலின் மனமாற்றமானது திருஅவை வரலாற்றிலேயே பெரும் மாற்றத்தை உண்டாக்கிய நிகழ்வாகும். யூத மத சித்தாந்தங்களை மிக ஆழமாக மனதிலே பதித்தவராய் கிறிஸ்தவ மதம் யூத மததிற்கு எதிர்மறையானது என்ற தவறான புரிதலோடு கிறிஸ்தவர்களை தாக்கியவர்தான் சவுல். அவ்வாறு செய்வதால் அவர் தன்னை நேர்மையாளர் எனக் காட்டிக்கொள்ள விழைந்தார். தன்னுடைய மறைக்கு உண்மையுள்ளவன் என்பதை பிறருக்கு பிரதிபலிக்க விரும்பினார். இத்தகைய எண்ணங்கள் அவருடைய பார்வையை மறைத்து கிறிஸ்தவ மறையிலுள்ள நல்லவற்றை காணவிடாது தடுத்தன. அங்கே தான் ஆண்டவர் இயேசு அவருடைய வாழ்வில் குறுக்கிட்டு ,தன்னை சவுலுக்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்தவ மறையில் இறைமகன் கிறிஸ்துவைக் கண்டார் சவுல். பவுலாக மாறினார். புதுப்பார்வை அடைந்தார். புது வாழ்வு அடைந்தார். நற்செய்தியைப் பரப்பும் கருவியானார் அவர். 

பவுலின் இம்மனமாற்றம் விண்ணகத்தில் நிச்சயம் பெருவிழாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கிறிஸ்து தனக்கென 
ஒரு உண்மையுள்ள துடிப்புள்ள பணியாளரைக் கண்டு கொண்டார் அன்றோ.காணமல் போன மகன் உவமையில் ஊதாரியான இரண்டாம் மகன் திரும்பி வந்தவுடன் அங்கே விருந்து கொண்டாடப்படுகிறது என்பதை நாம் வாசிக்கிறோம். பத்து நாணயத்திலே காணமல் போன ஒரு நாணயம் கிடைத்தபோதும், நூறு ஆடுகளிலே காணமல் போய் கிடைக்கப்பெற்ற ஒரு ஆட்டைக் குறித்தும் உரிமையாளர்கள் மகிழ்வார்கள் எனவும் லூக்கா 15 ஆம் அதிகாரத்திலே நாம் வாசிக்கிறோம்.
"மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.” என இயேசு லூக் 15:10 லே கூறியுள்ளார்.
ஆம் மனமாற்றத்தினால் ஏற்படுவது மகிழ்வே.

இதைப்போலவே நம்முடைய வாழ்விலும் மனமாறுகின்ற பொழுது விண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. நாம் வாழும் இடங்களிலும் மகிழ்ச்சி உண்டாகிறது. நம்மைத் தவறு செய்பவர்களாக பார்த்த மனிதர்கள் நாம் மனம்மாறி நற்செயல்கள் புரிவதைக் காணும் போது நம்மை பாராட்டிய அனுபவங்கள் நமக்கு உண்டல்லவா. நமக்கு அவை எத்துணை மகிழ்ச்சியைத் தருகின்றன. அன்புக்குரியவர்களே மனமாற்றம் என்பது தொடர்கதை என்பதை சில நாட்களுக்கு முன்பு தியானித்தோம். நாம் பல முறை தவறலாம். அத்தனை முறையும் மனம் மாறலாம். நாம் ஒவ்வொருமுறையும் மனம் மாறி கடவுளிடம் செல்லும் போதும் அங்கே விழாக்கோலம்தான் என்பதை நாம் உணரவேண்டும். ஏனென்றால் அங்கே மனிதரின் மனம்மாற்றம் மட்டுமல்ல கடவுளின் மன்னிப்பும் சேர்ந்து கொண்டப்படுகின்றன

பவுலின் மனமாற்றவிழா நமக்குணர்த்தும் மற்றொரு முக்கியச் செய்தி யாதெனில், நாம் பெற்ற மனமாற்றம் நம்மையும் பிறரையும் நற்செய்தி வாழ்வுக்குத் தூண்ட வேண்டும். பவுல் மனம்மாறி, உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றினார். புற இனத்தாரின் திருத்தூததரானார். நாமும் நம்முடைய மனமாற்றத்திற்கு செயல் வடிவம் கொடுப்போம்.
நற்செய்தியை வாழ்வாக்குவோம். அவ்வாழ்வு பிறருக்கு இயேசுவை அறிவிக்கட்டும். நமது மனமாற்ற வாழ்வு விண்ணகத்திலும் நாம் வாழும் இடங்களிலும் பெருவிழாவாகட்டும்.

 இறைவேண்டல் 
மன்னிப்பின் தேவனே, புனித பவுலைப் போல நாங்கள் மனம் மாறி நற்செய்தியை வாழ்வாக்கி பிறருக்கு உம்மை அறிவிக்கவும் எங்கள் மனமாற்ற வாழ்வால் உமக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரவும் வரமருளும். ஆமென்.

Add new comment

6 + 4 =