குறைகாணும் மனநிலையை மதிநுட்பத்தால் எதிர்கொள்ள தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் திங்கள் 
I: 2 சாமு:   5: 1-7,10
II : திபா 89: 19. 20-21. 24-25
III: மாற்: 3: 22-30

நாம் வாழும் சமூகத்தில் யாராவது நம்மைக் குறை கூறி விட்டால் பல நேரங்களில் கோபப்படுகிறோம். பல்வேறு வெறுப்புகளுக்கும் பழி வாங்கக் கூடிய நிலைக்கும் சென்று விடுகிறோம். ஆனால் குறை காணும் மனிதர்கள் மீது நம்முடைய கவனத்தைச் செலுத்தாமல்,  சொல்லப்பட்ட குறையின் மீது கவனத்தைச் செலுத்தும் பொழுது நிச்சயம் வாழ்வில் பற்பல   பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இதைத்தான் பிரான்சிஸ் கேபிள் என்ற அறிஞர் "நீ குறைகண்டுபிடிக்கப்பட்டால், குறைகண்டுபிடிப்பவர் மீது உன் கவனத்தை செலுத்து. நீ நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வாய் " என்று கூறியுள்ளார். 

ஆண்டவர் இயேசு பணி செய்த காலகட்டத்தில் அவர் செய்த பணிகளை ஏற்றுக் கொள்ள முடியாத பரிசேயர் மறைநூல் அறிஞர்கள் பலர் அவரைக்  குறை கூறுவதில் குறியாய் இருந்தனர். எங்கே என்ன தவறு கண்டுபிடிக்கலாம் என்று தங்கள் கண்களை அகல திறந்து வைத்திருந்தனர். ஆனால் அவற்றை இயேசு பொருட்படுத்தாமல் தன் மதி நுட்பத்தால் அவர்களை மடக்கினார்.  அவற்றை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,  "நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால்,  உங்களைச் சார்ந்தவர்கள் பேயை ஓட்டுவது யாரை வைத்து? " என்று கேட்டார்.  அதற்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை. ஏனெனில் கடவுள் பெயரை வைத்து பிழைப்பு நடத்திய ஏராளமான   மனிதர்கள் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தனர். இதற்கு பதில் கூறினால் தங்களின் வெளிவேடமானா வாழ்வு தெருவுக்கு வந்து விடுமென அஞ்சினர்.

இரண்டாவது, "வலியவனாகக் கருதப்படும் சாத்தானை வெற்றி கொண்டதன் மூலம் தான் சாத்தானை விட வலியவன், அதாவது கடவுளின் மகன்! " என்பதை வெளிப்படுத்தினார் இயேசு. அதற்கும் அவர்களால் எந்த பதிலும் கூறமுடியவில்லை.  

நாம் வாழும் உலகத்தில் நம்மைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் கூறும்பொழுது நாம் மனம் தளராமல் ஆண்டவர் இயேசுவைப் போல முன் மதியோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றி அடைய முடியும். இல்லையென்றால் ஒரு சிறிய விமர்சனம் வந்தாலும் நாம் முடங்கி  விடுவோம். நம்மிடம் பிறர் குறை கண்டுபிடிக்கும் பொழுது, நேர்மறையான எண்ணத்தோடு அவற்றை அணுகி வாழ்வில் முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும்.  துணிச்சலோடு அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.  அத்தகைய துணிச்சல் நமக்கு இருக்கின்ற பொழுது, ஆண்டவர் இயேசுவைப் போல நம் வாழ்வில் சான்றுகள் பகர முடியும்.  அத்தகைய  மதிநுட்பம்    நிறைந்த மன நிலை வேண்டும் என்றால், கடவுளின் ஞானத்தைப் பெற வேண்டும். கடவுளின் ஞானத்தைப் பெற கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே!  எங்கள் அன்றாட வாழ்வில் உம்முடைய ஞானத்தைப் பெற்றவர்களாய் மதி நுட்பத்தோடு செயல்பட்டு விமர்சனங்களை வென்றிடத் தேவையான ஞானத்தைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 3 =