Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அழைத்தல் வாழ்வு சவால் நிறைந்ததா? | அழைத்தல் வாழ்வு சவால் நிறைந்ததா? | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் சனி
மு.வா: 2 சாமு: 1: 1-4,11-12,19,23-27
ப.பா : திபா 80: 1-2. 4-6
ந.வா: மாற்: 3: 20-21
"அழைத்தல் வாழ்வு சவால் நிறைந்ததா?"
கடவுளின் அழைத்தல் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான அழைப்பாகவும் துறவறத்தில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான அழைப்பாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இருவருமே கடவுளின் பணியைச் செய்ய அழைக்கப்படுகின்றனர். நம்முடைய அழைப்பிற்கு ஏற்ப வாழும் பொழுது பல்வேறு தடைகளும் இடையூறுகளும் வரும். ஆனால் அவற்றைக் கண்டு நாம் துவண்டுவிடாமல் துணிச்சலோடு பயணிக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையைச் சுட்டிக்காட்டும் விதமாக இன்றைய நற்செய்தி இருக்கின்றது.
மாற்கு நற்செய்தியாளர் உண்மையான இறையாட்சி பணியாளர்கள் யார் என்பதை மிக அருமையாகச் சுட்டிக்காட்டுகிறார். உலகம் சார்ந்த இரத்த உறவுகள் நாம் இறையாட்சி பணி செய்கின்ற பொழுது தடையாகவும் இடையூறாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் மனத்துணிச்சலுடன் இறையாட்சி பணியினைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு ஆண்டவர் இயேசுவே ஒரு சான்றாக இருக்கின்றார்.
இரத்த உறவை காட்டிலும் சீடத்துவ வாழ்வு உயர்ந்தது என்பதை மிக அருமையாக மாற்கு நற்செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார் . ஆண்டவர் இயேசுவினுடைய பணியால் பயனடைந்தவர்கள் ஏராளம். நோயாளர்கள், பாவிகள், சமூகத்தில் புறந்தள்ளப்பட்டவர்கள் எல்லோருமே பலன் பெற்றனர். அவரை சுற்றி அந்தக் கூட்டம் சென்று கொண்டிருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் கண்ட இயேசுவின் உறவினர்கள் அவரை மதிமயங்கியவராகக் கருதினர். ஆனால் ஆண்டவர் இயேசு அவற்றைப் பொருட்படுத்தாமல் சீடத்துவ வாழ்வே உயர்ந்தது என்று புகழ் சாற்றினார்.
நம்முடைய வாழ்வில் நாம் நல்ல நோக்கத்தோடு நற்செய்திப் பணி செய்யும் பொழுது பல்வேறு அவதூறான பேச்சுக்கள், விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள் வரலாம். அவற்றைக் கண்டு மனம் தளராமல் துணிவோடு அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும். ஆண்டவர் இயேசு பணி செய்த பொழுது எண்ணற்றவர்கள் அவர்மூலம் கடவுளைப் புகழ்ந்தனர். அவரை விமர்சனம் செய்தவர்களும் பலர் உள்ளனர். எனவே நம்முடைய வாழ்வில் நன்மைகள் செய்யும் பொழுது "தூற்றுவோர் தூற்றட்டும் ;போற்றுவோர் போற்றட்டும்" என்ற மனநிலையில் நம் கடமைகளைச் சரியாகச் செய்யத் தேவையான அருளை வேண்டுவோம். அதன் வழியாக நம்முடைய அழைப்பிற்கேற்ப வாழ முயற்சி செய்வோம். நம்முடைய இல்லற வாழ்வில் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ முயற்சி செய்வோம். அதன் வழியாக வரும் துன்பங்களையும் இடையூறுகளையும் கண்டு துவண்டுவிடாமல் , துணிவோடு வாழ முயற்சி செய்வோம். துறவற வாழ்விலும் இறைப்பணி செய்யும்பொழுது வரும் இடையூறுகளையும் தடைகளையும் கண்டு துவண்டுவிடாமல் துணிவோடு ஆண்டவர் இயேசுவை போல பணி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர முடியும். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே! சீடத்துவத்துவ வாழ்வுக்கு சான்று பகரும் பொழுது வரும் தடைகளையும் இடையூறுகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலையும் வல்லமையையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment