Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சட்டம் எதற்கானது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்
I: 1 சாமு: 16: 1-13
II : திபா 89: 19. 20-21. 26-27
III: மாற்: 2: 23-28
ஒரு நாடோ அல்லது சமூகமா சிறப்பானதாக விளங்க வேண்டுமென்றால் சட்டம் மிகவும் அவசியமாகும். மனிதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மனித மாண்போடு வாழ்வதற்கும் சட்டங்கள் உதவி செய்கின்றன. அதற்கு மேலாகவும் சட்டம் மனிதனை அடக்க கூடியதாகவும் ஒடுக்க கூடியதாகவும் ஒரு சில நேரங்களில் இருக்கின்றது. சட்டத்தை நேர்மையான முறையில் பயன்படுத்தும் அது மக்களுக்கு நலவாழ்வை வழங்கும். சட்டத்தை எதிர்மறையாக பயன்படுத்தும் பொழுது அது மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.
சட்டத்தை வைத்து நீதியையும் நேர்மையையும் உண்மையையும் நிலைநாட்டும் நபர்களும் உண்டு. அதேபோல சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்துத் தவறு செய்த குற்றவாளிகள் வெளியிலேயே கம்பீரமாக சுற்றிக் கொள்ளும் அவல நிலையும் இங்கு உண்டு. சட்டம் மனிதநேயம் கொண்டதாக இருக்க வேண்டும். சட்டம் மனிதநேயத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மனித வாழ்வை சட்டம் ஒழுங்கு படுத்தினாலும் அவை ஒருபோதும் மனித வாழ்வை அடிமைப்படுத்த கூடாது. ஏனெனில் சட்டம் மனித வாழ்வை நலப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பற்ற காவியம்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் சட்டத்தின் பெயரால் பரிசேயர்கள் சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் மக்களை பலப்படுத்துவதற்குப் பதிலாக அடிமைப்படுத்தினர். சட்டத்தின் பெயரால் பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து குறைபாடினர். ஆண்டவர் இயேசுவையே பல நேரங்களில் சட்டத்தைச் சுட்டிக்காட்டி குறைக்காணும் மனநிலையைக் கொண்டிருந்தனர். அதனுடைய உச்சகட்டம் தான் இன்றைய நற்செய்தி.
ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழி நடந்தனர். அவற்றைக் கண்ட பரிசேயர்கள் இயேசுவிடம் சீடர்களைப் பற்றி புகார் கூறினர். இயேசுவின் பார்வையில் ஓய்வு நாள் என்பது மனிதருக்கு கட்டுப்பட்டது. ஏனெனில் பசி என்பது ஒவ்வொரு மனிதனுடைய உணர்வு. எல்லா உயிர்களும் பசி எடுத்தவுடன் உண்ண வேண்டும் என நினைப்பது எதார்த்தம். ஆனால் ஓய்வுநாளில் உண்பதையே குறையாகச் சொல்வது தவறான கூற்று என்பதை தாவீது அர்ப்பண அப்பங்களை உண்டதை மேற்கோள்காட்டி தெளிவுபடுத்தினார் இயேசு. அதிலும் குறிப்பாக " ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்று இயேசு கூறியுள்ளார்.
கடவுளின் அன்பை முழுமையாக உணராமல் மேலோட்டமாகப் புரிந்து கொண்ட பரிசேயர்கள் சட்டத்தைக் குருட்டுத்தனமாக நம்பி, மக்களை இருள் நிறைந்த பாதையில் அழைத்துச் சென்றனர். சட்டத்தின் பெயரால் மக்களை துன்பப்படுத்தினர். சட்டத்தை மேற்கோள் காட்டி தங்களை நேர்மையாளர்களாக காட்டிக் கொண்டனர். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு இயேசு சவுக்கடி கொடுக்கும் விதமாக இந்தப் பதிலை கொடுத்துள்ளார்.
நம்முடைய வாழ்க்கையில் சட்டம் என்பது முக்கியம்தான். அதே சட்டம் மனித மாண்புக்கும் மனித நேயத்திற்கும் மனித வாழ்விற்கும் இடையூறாகவும் சீர்குலைப்பதாகவும் இருந்தால், அவற்றை வேரோடு களைய வேண்டும். அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். மனித நேயம் மண்ணில் மலர நாம் உழைக்க வேண்டும். சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?
இறைவேண்டல்
வல்லமையுள்ள ஆண்டவரே! சட்டத்தின் பெயரால் பிறரை ஒடுக்கும் அவலநிலை ஒழிந்து, சமூகநீதி இம்மண்ணில் வெளிப்பட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment