அன்னை மரியாவின் மதிப்பீடுகளை நமதாக்குவோம் | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
I: எசா: 62: 1-5
II: திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10
III: 1 கொரி:  12: 4-11
IV: யோவா: 2: 1-12

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகமானது நம்மை அன்னை மரியாவைப் போல வாழ அழைப்பு விடுக்கிறது. கானாவூர் திருமணத்தில் நடைபெற்ற நிகழ்வினை நாம் வாசிக்கிறோம். அன்னை மரியாள் எந்த அளவுக்கு சமூக நீதி கொண்டவர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இன்றைய நற்செய்தி இருக்கின்றது. யூத சமூகத்தில் திருமண விழா என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் நிகழ்வாகும்.  உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும்  விருந்து உண்பதற்காக அழைக்கப்பக்கப்படுவர்.பலர் அனுமதிக்கப்படுவர். ஆனால் ஒருசில பாகுபாடுகள் அந்த  திருமண உபசரிப்புகளில் இருக்கும்.அது என்னவென்றால் தொடக்கத்தில் விருந்து உண்பவர்கள் பணக்காரர்களும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவர்களும். பணக்காரர்களும் உயர்பதவியில் இருப்பவர்களுக்கும் விருந்திலே இருக்கும் மிகச் சிறப்பான உணவுப் பதார்த்தங்களும் திராட்சை ரசமும் வழங்கப்பட்டு பலத்த விருந்தோம்பல் நடைபெறும்.அவர்கள் உண்ட பிறகே  இறுதியில்  சாதாரண ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் விருந்துண்ண அனுமதிக்கப்படுவர்.பணக்காரர்கள் உண்டது போக  மீதம் இருப்பவற்றை பரிமாறுவர். 

நாமும் கூட நம்முடைய வீட்டு சுப காரியங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறோம். 
 இப்படிப்பட்ட மனநிலையை அன்றைய யூத சமூகம் மட்டுமல்ல  நாம்  ஒவ்வொருவருமே களைய வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை நமக்கு அன்னை மரியாள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்னை மரியாள் நமக்கு  சுட்டிக்காட்டும் செய்திகளை பின்வருமாறு ஆய்வு செய்வோம். முதலாவதாக அன்னை மரியாள் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.  யூத சமூகத்தில் ஒரு திருமண விழாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த குடும்பத்தைப் பற்றி அவதூறாக அனைவரும் பேசுவர். ஆனால் அன்னை மரியாள் அவர்களுடைய  சூழலை அறிந்து தன்னுடைய மகன் வழியாக பரிந்துரைத்து முதல் அற்புதத்தைச் செய்ய ஊக்கமூட்டினார். தாயினுடைய உண்மையான பாசத்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். இயேசுவும் தன்னுடைய நேரம் வரவில்லை என்று சொன்னாலும்  தன்னுடைய தாயின்  வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து முதல் அற்புதத்தைச் செய்தார்.  அவர் செய்த இந்த  அற்புதம்  திருமண வீட்டாருக்கு அவதூறு பேச்சிலிருந்து விடுதலை கொடுத்தது. அன்னை மரியாவின் இரக்கம் அந்தக் குடும்பத்தினருக்கு நிறைவை கொடுத்தது.

இரண்டாவதாக அன்னை மரியாள் தன்னுடைய சமூகநீதியை வெளிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு புரட்சியை அன்னை மரியா  செய்தார். பெரும்பாலும் தொடக்கப் பந்தியில் தரமான உணவினை வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் படைப்பர். ஏழை எளியவர்களுக்கு தரம் குறைந்த உணவை படைப்பார். பந்தி நிறைவடையும்போது தன்னுடைய மகன் வழியாக அன்னை மரியா செய்த இந்த வல்லச்செயல் தேவையுள்ளவர்களுக்கு நல்லவற்றை தர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் நாம் கொடுக்கும் அன்பு, விருந்தோம்பல், உதவி எதுவாக இருந்தாலும் அதை சிறந்ததாக நிறைவானதாக உயர்வானதாகக் கொடுக்க வேண்டும் என்ற   சமூக நீதியை வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது.

மூன்றாவதாக அன்னை மரியாவின் தாயுள்ளம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. தன்னுடைய வார்த்தையைத் தட்டாமல் தன் மகன் கேட்கிறார் என்றால், எந்த அளவுக்கு அன்னைமரியாள் தன் மகனை வளர்த்து எடுத்திருக்கிறார் என்பதை அறிய வேண்டும். அதேபோல இறைமகனாய் இயேசு இருந்தபோதிலும், தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தார். இந்த வல்ல செயல் தாய் மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கின்றது.

இவ்வாறாக அன்னை மரியா வெளிப்படுத்தும் மதிப்பீடுகளை இன்றைய நற்செய்தியோடு ஒப்பிட்டு கூறிக்கொண்டே செல்லலாம். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மோடு வாழக்கூடியவர்கள் மீது இரக்கம் கொண்டவர்களாகவும்  அன்னை மரியாளைப் போல சமத்துவ மனநிலையில் சமூகநீதியை வெளிப்படுத்த கூடியவர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறே பிள்ளைகள் தன்னைப் பெற்று வளர்த்த தாயை மதிக்க கூடியவர்களாகவும் தாய்மார்கள் தன்னுடைய  பிள்ளைகளை அன்னைமரியா மனநிலையில் வளர்க்க கூடியவர்களாகவும்  இருக்க முயற்சி செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி வாழ்கின்ற  பொழுது நம்முடைய வாழ்வு கடவுளின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நிறைவாகப் பெறக் கூடியதாகவும் பெற்றுக்கொண்ட அருளை பிறக்கு வழங்கக் கூடிய  சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வாக மாறும். அன்னை மரியாவின் மதிப்பீடுகளைத் தாங்கியவர்களாய் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்திடத் அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பான இறைவா!  அன்னை மரியாள் கானாவூர் திருமணத்தில் ஏழை எளிய மக்களுக்காக பரிந்து பேசியதைப் போல, நாங்களும் ஏழை எளிய மக்களை அன்பு செய்து அவர்கள் வாழ்வு வளம் பெற உழைத்திட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =